9 ஜூலை, 2013

இந்தியாவின் அழுத்தங்களின் காரணமாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் செயற்படும் அரசாங்கம் மறுபுறம் நீதிமன்ற அதிகாரத்தின் மூலமாக தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கின்றது. அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை இந்தியாவிற்கும், சர்வதேசங்களிற்கும் தெரியப்படுத்துவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இராஜகிரியவில் நேற்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதத்தில் நடத்தவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எனினும் வடக்கில் அரசாங்கத்தினை நிலைப்படுத்த முடியாத நிலைமையிலேயே வடக்குத் தேர்தலை நிறுத்துவதற்கான பல வழிமுறைகளை அரசு கையாண்டது.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இன்று நீதிமன்ற அதிகாரங்களின் மூலமாக தேர்தலை தடுப்பதற்கான தந்திரத்தினை அரசாங்கம் கையாள்கின்றது. இதை அரசு செய்ய முடியாது. சர்வதேசத்தை அரசு தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது.
இந்த பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும் அது ஜனாதிபதியின் தெரிவுக் குழுவாகவே செயற்படுகின்றது. அவர்களின் பேச்சை நம்பி செயற்பட நாங்கள் முட்டாள்கள் அல்ல.
நான்கு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி அவர்களுக்கே மறந்து விட்டது. யுத்தம் முடிவடைந்ததும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டும் அன்றி அதற்கு மேலான சலுகைகளை வழங்குவேன் என ஜனாதிபதி சர்வதேசங்களுக்கு வாக்குக் கொடுத்தார். ஆனால் இன்று அது தலைகீழாக நடைபெறுகின்றது.
இன்று பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சமர்ப்பித்து 13ஆவது திருத்தத்தை எவ்வாறு ஒழிப்பது என்று அரசாங்கம் திட்டம் தீட்டுகின்றது. நியாயமான ஒரு தேர்தலை அரசாங்கம் நடத்தியாக வேண்டும். தொடர்ந்தும் சர்வதேசத்தினை ஏமாற்றி அரசியலை நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.