புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013




                 கஸ்ட் 25. தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்கிற முழக்கத்துடன் வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடுகிறார்கள் தே.மு.தி.க.தொண்டர்கள். அன்றைய நாளில், ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை விஜயகாந்த் தொடங்கி அவரது கட்சி நிர்வாகிகள் வரை செய்து மகிழ்கிறார்கள்நன்றி .நக்கீரன் 

இந்த வருடம் தனது பிறந்த நாளில் 65 லட்சம் ரூபாய் செலவில் மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மூன்று சக்கர வண்டிகள், எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் நிதி என வழங்கினார் விஜயகாந்த். தமிழகம் முழுவதும் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்-புத்தகம் வழங்குதல், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், விஜயகாந்த் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குதல், ஏழைகளுக்கு அன்னதானம், ரத்ததானம் என கொடுத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். 61-வது பிறந்த நாள் என்பதால் 61 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துங்கள் என்று தலைமை உத்தரவிட்டதன் பேரில் மிக எழுச்சியாக அந்தந்த பகுதிகளில் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.. புரட்சி கலைஞர் என்ற பெயரில் விளம்பரம் தலைமையால் உருவாக்கப்பட்டு விளம்பரப்படுத்த உத்தரவே இடப்பட்டிருக்கு. 

இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடவேண்டுமென தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க.வும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கலைஞருக்கு கூட, அவரது பிறந்த நாளின் போது வாழ்த்து தெரிவிக்காத ராகுல்காந்தி, விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் பரபரப்பை அதிகரிக்கவே செய்திருக்கிறது.

""செப்டம்பர் 14, 2005-ல் கட்சியை துவக்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளையும் ஒரு எம்.எல்.ஏ.வையும் (அவரது வெற்றி) பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் களில் அதே 8 சதவீத வாக்குகளைப்பெற்ற தே.மு.தி.க., 2009 நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீதம் பெற்றது. தனித்துப் போட்டியிட்டே வந்த விஜயகாந்த், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் போட்டியிட்டு 7.9 சதவீதம் வாக்குகளையும் 29 எம்.எல்.ஏ.க்களையும் பெற்று தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார்'' என்பது அரசியல் விமர்சகர்களின் புள்ளி விபரக் கணக்கு.

ஆனால், இந்த உயர்வை இனியும் பொறுக்க முடியாது என்பதாலோ என்னவோ 2011 அக்டோபரில் நடந்த "உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும்' என அறிவித்து தே.மு.தி.க. உள்பட தனது தோழமைக்கட்சிகள் அனைத்தையும் கழட்டிவிட்டார் ஜெயலலிதா. 

ஒருமுறை சட்டமன்றத்தில், ""கூட்டணி வைக்க தகுதியில்லாதவர். அவருடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்'' என்று கடுமையாக விஜயகாந்தை சாடினார் ஜெயலலிதா. அதற்கு வெளியில் பேட்டியளித்த விஜயகாந்த், ""அவங்க (ஜெ) கூட கூட்டணி வைத்ததற்காக நாங்க வெட்கப்படுகிறோம். கூட்டணிக்காக எப்படியெல்லாம் கெஞ்சினாங்கங் கிறதை மறந்துட்டுப் பேசுறாங்க. நன்றி கெட்டவங்க. நான் பேசணும்னு நெனைச்சா நிறைய பேச வேண்டியதிருக்கும். அ.தி.மு.க.வின் வெற்றியில் தே.மு.தி.க. வின் பங்கு அதிகமிருக்கிறது. இந்த உண்மையை அறிந்துகொள்ள 2016 சட்டமன்ற தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலே அதனை நிரூபிக்கும்'' என்று கடுமையாக பதிலடி தந்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸும், பா.ஜ.க.வும் விஜயகாந்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள முயற்சியை மேற்கொண்டிருக்கின்றன. இதுகுறித்து பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க. தலைமைகளுக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது,’’""தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக வேண்டும் என தமிழகம் முழுவதும் தான் பேசும் கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன். வைகோவை உள்ளடக்கிய ஒரு மாற்று அரசியல் உருவாவதுதான் தமிழகத்திற்கு நல்லது என்பது தமிழருவியின் சிந்தனை. இந்நிலையில், இவரின் மாற்று அரசியல் கோட்பாடுகளை அறிந்த பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த வாரம் தமிழருவி மணியனை தொடர்புகொண்டு "உங்களின் மாற்று அரசியல் சிந்தனை ஆரோக்கியமாக இருக்கிறது. அப்படி ஒரு அரசியலை கொண்டுவரவேண்டுமென்பதுதான் எங்களின் விருப்பமும். அது தேசிய அளவில் எதிரொலிக்க வேண்டுமென்பது எங்களின் யோசனை. இன்றைக்கு நரேந்திர மோடியைத்தான் இளைஞர்களும் புதிய வாக்காளர்களும் விரும்புகிறார்கள். அவர்களிடம் மோடிக்கு நல்ல இமேஜ் உருவாகியிருக்கிறது. அதனால், பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இணைத்து ஒரு மாற்று அரசியலை உருவாக்கலாமே. நீங்கள் முயற்சியை எடுத்துப்பாருங்களேன்' என்றிருக்கிறார். (வைகோ தற்போது பா.ஜ.க.வை புகழ்ந்து பேசி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது)

அதற்கு மணியன், "விஜயகாந்த் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்னு எனக்குத் தெரியவில்லை. முயற்சித்துப் பார்க்கிறேன்' என்றவர், விஜயகாந்தை சந்திப்பதற்காக தே.மு.தி.க.வின் தலைமைநிலையச் செயலாளர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு பேசினார். அவரோ, "கேப்டனுக்கு 25-ந்தேதி பிறந்த நாள். அன்றைக்கு வருகிறீர்களா' என்று பார்த்தசாரதி சொல்ல, "பிறந்த நாளில் யாரையும் தொந்தரவு செய்வதை நான் விரும்புவதில்லை. இன்றைக்கு பார்க்க முடியுமா?' என்று மணியன் சொல்லவும், "சந்திக்கலாம். வரச்சொல்லுங்கள்' என்றார் விஜயகாந்த்.

இதனையடுத்து, தே.மு.தி.க.தலைமையகத்தில் கடந்த 22-ந்தேதி மதியம் 11.45-க்கு விஜயகாந்துடன் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில், "நாடாளுமன்ற தேர்தலில் போட்டிங்கிறது காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான். காங்கிரஸ் நிச்சயம் தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்கும். பல்வேறு காரணிகளால் மீண்டும் ஆட்சிக்கு காங்கிரஸ் வராது. அதனால, பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஓர் அணியாக இணைவது தமிழகத் திற்கும் நல்லது தேசியத்திற்கும் நல் லது' என்று சொல்லி நிறைய தேர்தல் கணக்குகளை போட்டுக்காட்டியிருக் கிறார் மணியன். அப்போது விஜயகாந்த், "நீங்க சொல்றது சரிதான். நான் மறுக்கலை. காங்கிரஸ் மீது சில வருத்தங்களும் எனக்கு உண்டு. உங்கள் முயற்சி நல்ல முயற்சி தான். ஆனாலும் இதில் சட்டென்று நான் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. கட்சியில் கலந்தாலோசிக்கிறேன். தேவைப்படும்போது மீண்டும் பேசலாம்' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழருவி மணியனிடம் நாம் கேட்டபோது, சந்திப்பை அவர் மறுக்கவில்லை.

இந்த சூழலில்தான், விஜயகாந்திற்கு ஃபேக்ஸ் மூலம் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவிக்க, காங்கிரஸின் மேலிட தலைவர் முகுல்வாஸ்னிக், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், ஞானதேசிகன் உள்பட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் பேசியபோது,’’""நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை கூட்டணியில் தி.மு.க.சேர்த்துக்கொள்ளலாம் அல்லது தே.மு.தி.க.வுடன் கூட்டணியை உறுதிசெய்துகொண்டு காங்கிரஸை கழட்டி விடவும் செய்யலாம். இரண்டுக்குமே வாய்ப்பிருக்கு. கழட்டிவிடப்படும் நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும். அதனால், தே.மு.தி.க.வுடன் நாம் கூட்டணிக்கான விதையை இப்போதே ஊன்றி வைக்க வேண்டும். ராஜ்யசபா தேர்தலில் ஏற்பட்ட காயத்தினால் நம் மீது விஜயகாந்திற்கு வருத்தம் இருக்கும். அதையெல் லாம் துடைக்கிற மாதிரி விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து வாழ்த்துச் சொல்லுங்கள் என்று ராகுல்காந்தியிடம் வாசனும், திருநாவுக்கரசும் தெரிவித்திருக்கிறார்கள். 

ராஜ்யசபா தேர்தலில் விஜயகாந்துக்கு ஆதரவு கொடுப்பதாக ஆரம்பத்தில் காங்கிரஸ் உறுதி கொடுத்ததன் பின்னணியில் ராகுலின் பங்களிப்பு உண்டு. ஆனால் சொல்லியபடி நடந்துகொள்ள முடியவில்லையே என வருத்தப்பட்டார் ராகுல்காந்தி. அதனால், விஜயகாந்திற்கு வாழ்த்து சொல்வதன் மூலம் காங்கிரஸ் மீது அவருக்கு இருக்கும் வருத்தமும் போகும் எதிர்காலத்தில் கூட்டணி பேசுவதற்கு ஏதுவாகவும் இருக்கும் என்று முடிவு செய்தே வாழ்த்தினை தனது பெர்சனல் ஃபேக்ஸ் மெஷினிலிருந்து அனுப்பினார் ராகுல்காந்தி. தே.மு.தி.க.வை வளைக்க பா.ஜ.க. முயற்சி எடுத்து வருவதை ஐ.பி.மூலம் அறிந்து வைத்திருக்கிறார் ராகுல். அதனால், இது ஒருவகையில் தே.மு.தி.க.வை காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டுவரும் ஒரு யுக்திதான்''’’என்று விவரிக்கிறார்கள்.

தே.மு.தி.க. தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது,’’""தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தே.மு.தி.க. உள்ளது  என்பது மத்திய உளவுத்துறை தந்துள்ள தகவல். தமிழக அரசியலை உற்று கவனித்து வரும் ராகுல்காந்தி இந்த தகவலின் அடிப்படையிலேயே எங்கள் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆனால் ராகுலின் திட்டத்திற்கோ பா.ஜ.க.வின் முயற்சிக்கோ எங்கள் தலைவர் அவ்வளவு எளிதாக இடம் கொடுத்துவிட மாட்டார். காங்கிரஸ் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு போனால் நம்முடைய வலிமையும் சேர்ந்து அந்த கூட்டணிக்கு நல்ல வெற்றியைத் தரும்.  அந்த வெற்றி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். அப்படியிருக்கும் சூழலில், தி.மு.க.வுக்கு நாம் ஏன் உரம் தர வேண்டும்? என்பது கேப்டனின் கருத்தாக இருக்கிறது தற்போது'' என்கிறார்கள் அழுத்தம் தந்து.

ad

ad