புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013




             மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், விறுவிறுப்பு மாறாமலே நடந்து முடிந்திருக்கிறது
.-நக்கீரன்

கடந்த ஆண்டும் இதே டிசம்பர் மாதத்தில்தான் செயற்குழு- பொதுக்குழுவைக் கூட்டினார். அப்போது, ""வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்'' என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ""இந்தியப் பிரதமராக ஜெ.வை அமர வைப்போம்'' என அந்தப் பொதுக்குழுவில் ஏகமனதாகத் தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

தற்போது தி.மு.க.வும் காங்கிரஸ், பா.ஜ.க.வோடு கூட்டணியில்லை என தன் பொதுக்குழுவில் அழுத்தமாக பேசியிருக்கும் நிலையில், ஜெ.வின் தனித்துப் போட்டி என்கிற முடிவில் மாற்றம் வருமா? அதுகுறித்த அறிவிப்பைப் பொதுக்குழுவில் அறிவிப்பாரா? என்று கட்சிகள் பரபர எதிர்பார்ப்பில் இருந்தன.




இந்த நிலையில் 19-ந்தேதி வியாழக்கிழமை பிற் பகலில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக் குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டினார்.

இந்த முறை வரலாறு காணாத அளவிற்கு ஜெ.வை வரவேற்று கட்-அவுட், கொடி தோரணங்களை மாநகரின் முக்கிய சாலையெங்கும் கட்டியிருந்தனர். ஜெ. வரும் வழி நெடுக ஆங்காங்கே கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம் என ஆடல் பாடலையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பொதுக்குழு நடந்த மண்டபம் அருகிலேயே போலீஸ் கண்ட்ரோல் ரூமை அமைத்து ஏகத்துக்கும் காக்கிகளைப் பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்ததால் கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மதியம் 2.40-க்கு ஓ.பி.எஸ். உள்ளிட்ட நால்வரணியினர் பொக்கேவுடன் மண்டப முகப்பில் காத்திருக்க, அவர்களுக்கு சற்று தள்ளி, லோக்கல் அமைச்சர்களான ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம் ஆகி யோரும் அவர்களுக்குப் பின்னால் மது சூதனன், பொன்னையன் போன்றோ ரும் "பவ்வியம்' காட்டி நின்றனர். ஜெ. வானகரம் வந்தபோது டிராபிக் நெரிசலால், அவரது கான்வாய் ஊர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்போது ஜெ., கேரள நடனத்தை ஆர்வமாக ரசித்து அவர்களுக்குக் கையசைத்தார். பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொம்மை யானை, ஜெ.வைப் பார்த்து துதிக்கையால் வணங்கிப் பிளிற, ஜெ. முகத்தில் சிரிப்பான சிரிப்பு.

2.55-க்கு ஜெ. வந்து இறங்க, அவருக்கு ஓ.பி.எஸ்., மதுசூதனன் உள்ளிட்டவர்கள் பொக்கே கொடுத்தனர். ஜெ. நேராக செயற்குழு நடக்கும் அரங்கிற்குச் சென்று மேடையில் அமர்ந்தார். அப்போது மகளிரணியினர் மாலையோடு மேடை ஏற... ஜெ.வோ, ""இருங்க இன்னும் பிரஸ் எல்லாம் வரலை. அதுக்குள்ள என்ன அவசரம்'' என காட்டம் காட்ட... மகளிரணியினர் பதட்டமாகக் கீழே இறங்கினர். ஒரு சில நிமிடங்கள் அங்கே அமர்ந்தவர், அடுத்து பொதுக்குழு தொடங்கும் என அறிவித்துவிட்டு... அங்கிருந்து 30 அடி தூரத்தில் இருந்த இன்னொரு அரங்கிற்கு ஜீப் ஏறிச் சென்றார்.

பொதுக்குழு மேடையில் மாலைகளை வாங்கிக் கொண்டு மீடியாக்களுக்கு போஸ் கொடுத்த ஜெ., பின்னர் மீடியாக்களை வெளியே போகச் சொன்னார்.

அமைச்சர் உதயகுமார் வரவேற்புரையாற்ற அதன்பின் நால்வர் அணி அமைச்சர்களான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனு சாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பேசினார்கள். ஓ..பிஎஸ்.,  ""ஏற்காடு வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இங்கே கூடியிருக் கிறோம். உலகமே வியக்கும் அளவிற்கு இந்த ஆட்சி சாதனைகளைச் செய்து வருகிறது. இந்தப் பொதுக்குழு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும்'' என்றதோடு ஜெ.வுக்கு புகழாரம் சூட்டினார்.

அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜியும் விஜயபாஸ்கரும் பேச வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தீர்மானங்களை வாசிக்கத் தொடங்கினர்.


"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்பது என்று ஏகமனதாக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ.வுக்கு வழங்கப்படு கிறது' என்றும் "குஜராத், உ.பி., பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து இதுவரை பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் கள். தொன்மையான தமிழகத்தில் இருந்து இதுவரை எவரும் பிரதமராக தேர்ந் தெடுக்கப்பட்டது இல்லை. இந்த முறை ஜெ. இந்தியாவை தலைமை தாங்கி வழிநடத்தும் காலம் கனிந்திருக்கிறது. அதற்கு ஏற்ப தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதி களிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க உறுதி பூணுவது என்றும் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசை விமர்சித்தும் ஜெ.வுக்கு நன்றி கூறியும் கூட சில தீர்மானங்கள் அதில் இருந்தன. இந்தத் தீர்மானங்கள் முன்னரே முடிவு செய்யப் பட்டிருந்தபோதும் தி.மு.க பொதுக்குழுவுக் குப் பிறகு அதில் சில மாற்றங்களை ஜெ.வே செய்தார் என்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.

மைக் பிடித்த அமைச்சர் வளர்மதி ""வருங்காலப் பிரதமர் அம்மா அவர்களே... நீங்கள் செய்த சமூகநலத்திட்டங்கள் போல உலகில் எவரும் செய்ததில்லை'' என ஜெ.வுக்கு குளிர்க்கட்டிகளை தலையில் வைத்தார்.

மீசையை வருடியபடியே மைக் முன் வந்த மதுசூதனன் ""நெல்சன் மண்டேலாவுக் கெல்லாம் நோபல் பரிசு கொடுத்திருக் கிறார்கள். இந்தியத் திருநாட்டையே கட்டிக் காக்கும் புரட்சித் தலைவிக்கு நோபல் பரிசு கொடுக்கக் கூடாதா?'' என்றபோது சிரிப்பலை எழுந்தது.

அப்போது திடீரென்று எழுந்த ஜெ. வெளியே செல்ல... அவர் திரும்பி வரும் வரை 15 நிமிடங்களுக்கு அரங்கம் மௌனத்தில் மூழ்கியது.

அடுத்து பேசிய தம்பித்துரை ""மத்தியில் சோனியா குடும்பம் கொள்ளையடிக்கிறது. அங்கே குடும்ப ஆட்சி நடக்கிறது'' என காங்கிரசைச் சாடினார். அமைச்சர் விஜயபாஸ்கரோ ""சுகாதாரத் துறை மூலம் இந்த ஆட்சி மகத்தான சாதனை படைக்கிறது'' என ஜெ.வைப் புகழ்ந்தார்.

அடுத்து பொருளாளர் என்ற முறையில் கட்சியின் வரவு -செலவுக் கணக்கை தாக்கல் செய்த ஓ.பி.எஸ்., ""கட்சியின் ஃபிக்ஸட் டெபாசிட் தொகை 142 கோடியே 76 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய்'' என அறிவித்து திகைப்பை ஏற்படுத்தினார்.

நிறைவாக 5.40-க்கு மைக் பிடித்த ஜெ., ""பொருளாளர் ஓ.பி.எஸ். கட்சியின் ஃபிக்ஸட் டெபாசிட்டை சொன்னார். நான் எம்.ஜி.ஆர். காலத்தில் கொ.ப.செ.வாக இருந்தபோது கட்சியின் டெபாசிட்டே ஒன்றரை லட்சம் தான். இப்போது நாம் கட்சியை உன்னத மாக வளர்த்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சியில் 255 பேர் பணம் கட்டியிருக்கிறார்கள்'' என கட்சி வளர்ச்சி பற்றியெல்லாம் பெருமிதம் கொண்ட ஜெ....

""தமிழகத்தை காங்கிரஸ் காழ்ப் புணர்ச்சியோடு பார்க்கிறது. தமிழகத்துக்கு எதிராகவே மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்திலும் பாரதத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட... மத்தியிலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். இதுவரை 6 முறை செங்கோட்டைக்கு நம் கழகம் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. 2014-ல் நாம் ரெட்போர்ட் எக்ஸ்பிரஸை வெற்றிகரமாக விடப் போகிறோம். அதற்கு டிரைவர் நான்தான். 2014 தேர்தலில் "அமைதி! வளர்ச்சி! முன்னேற்றம்' என்ற கோட்பாட்டை முன்வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம்'' என டெல்லியைப் பிடித்த மாதிரியே நம்பிக்கையோடு பேசினார்.

அவரது பேச்சில் பா.ஜ.க. பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இதை சுட்டிக் காட் டும் பொதுக்குழு ர.ர.க்கள் ""பா.ஜ.க.வுடன் அம்மா கூட்டணியை ஏற்படுத்துவார்'' என்றார் கள் உற்சாகமாய். பொதுக்குழு முடிந்தபின் ஜெ.விடம் செய்தியாளர்கள், "கூட்டணி குறித்து உங்கள் கருத்து என்ன' என்றபோது, ""உரியநேரத் தில் முடிவெடுக்கப்படும். அதற்கான அதிகாரத் தை பொதுக்குழு எனக்கு வழங்கியிருக்கிறது'' என்றார் ஜெ. "உங்களைப் பிரதமர் வேட்பாளர் என்கிறார்களே என்ற கேள்விக்கு, "அது என் கட்சியினர் கருத்து. அதுகுறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை' என்று ஜெ.விட மிருந்து பதில் வந்தது. 

இந்தியாவை வழிநடத்த ஜெ. தகுதி வாய்ந்தவர் என்ற பொதுக்குழு தீர்மானமும், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ள தீர்மானமும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொதுக்குழு கூடுவதற்கு முதல்நாளே, "நாங்க அ.திமு.க கூட்டணியில்தான் இருக்கிறோம்' என்று இரு கம்யூனிஸ்ட்டுகள் தரப்பிலிருந்தும் பத்திரிகைகளுக்கு செய்தி தரப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜெ. ஏதேனும் சிக்னல் காட்டுவார் என்று எதிர்பார்த் திருந்தனர்.  அந்த எதிர்பார்ப்புகள், பொதுக்குழு முடிந்தபோது நிறைவேறவில்லை என்பதில் தோழர்களுக்கு வருத்தம். கூட்டணி குறித்து ஜெ. முடிவெடுக்க பொதுக்குழு அதிகாரம் அளித்துள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையை இதன் மூலம் ஜெ. வலியுறுத்துகிறாரா என்ற கேள்வியும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் உள்ளது. தங்களுக்கு எம்.பி. தேர்தலில் சீட் ஒதுக்கப்படுமா என்ற குழப்பத் திலும் உள்ளனர். நால்வர் அணியினரிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர் தோழர்கள். 

நால்வர் அணியோ, "தீர்மானமெல்லாம் மேடம் சொல்லி ரெடி பண்ணியதுதான். ராஜ்யசபாவில் சி.பி.ஐ.க்கு ஒரு சீட் கொடுத்ததுபோல, அதே ராஜ்யசபாவில் சி.பி.எம்.முக்கும் 1 சீட் கிடைக்கும். லோக்சபாவுக்கு இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு சீட் ஒதுக்குவார்னு நினைக்கிறோம்' என்று நாசூக்காகத் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அ.தி.மு.க பொதுக்குழு முடிவுகளை பாசிட்டிவ்வாகப் பார்க்கும் பா.ஜ.க. தரப்பு மகிழ்ச்சியாக உள்ளது. "கூட்டணி குறித்த அதிகாரம் ஜெ.வுக்கு வழங்கப்பட்டதிலிருந்தே அவர் கூட்டு சேரத் தயாராகிவிட்டார் என்பதற்கான சிக்னல் தெரிகிறது' என்கிற பா.ஜ.க.வினர், "அது தேர்தலுக்கு முன்பா, தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலா என்பதை இப்போது சொல்லமுடியாது. எப்படியிருந்தாலும் அவர் எங்கள் பக்கம்தான் வருவார். பொதுக்குழுவில் மோடி எதிர்ப்பு பேச்சுகள் இருக்கும்' என்று அ.தி.மு.கவினரே எதிர்பார்த்தார்கள். ஆனால், ஜெ. அப்படி எதுவும் பேசவில்லை. இதிலிருந்து அவரது சிக்னலை நாங்கள் புரிந்துகொள்கிறோம்' என்கிறார்கள் நம்பிக்கையுடன். தனித்தா, கூட்டணியுடனா? எம்.பி. தேர்தலில் எந்த ரூட்டில் ஜெ. போகப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க பொதுக்குழு.

-தாமோதரன் பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்

ad

ad