புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2014

    இன்று மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழாவுக்கு அவரது ஆதரவு திமுகவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
டி.வி.எஸ்.நகர் பகுதி சாய் நகரில் உள்ள மு.க. அழகிரி வீட்டில் காலை பிறந்தநாள் கேக் வெட்டப்படுகிறது. பின்னர், ஆதரவாளர்கள் புடைசூழ அழகிரியை நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்துக்கு அழைத்து வருகின்றனர்.
அழகிரி வரும் வழியெங்கும் மேளதாளம், கரகாட்டம், சிலம்பாட்டம் என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா முத்தையா மன்றத்துக்கு வந்ததும் சுமார் 63 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி, அழகிரி பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
மன்றத்தைச் சுற்றிலும், வாழ்த்துத் தெரிவிக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளின் போது திமுக தலைவர் கருணாநிதி-அழகிரி இணைந்திருக்கும் படங்களே அதிகம் இடம் பெற்றிருந்தன. ஆனால், தற்போது அழகிரியை முன்னிலைப்படுத்தியும், தயாளு அம்மாள் அழகிரிக்கு ஆசி வழங்குவது போலவும், அதை ஆச்சரியத்துடன் கருணாநிதி பார்ப்பது போலவும் பல போஸ்டர்களில் படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், மதுரை மாநகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்ட வாழ்த்துப் போஸ்டர்களில் கட்சி தலைமைக்கும் அழகிரிக்கும் இடையே நடைபெறும் பிரச்னைகளை மையமாக வைத்தே வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்தத்தில், கட்சியில் இருந்து அண்மையில் தாற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரிக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையிலான வாசகங்களே பெரும்பாலான போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக அழகிரியின் பிறந்த நாள் விழாவின்போது ஏழை, எளியவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 10 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலையும் அன்னதானமும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சலவைப் பெட்டி, தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் விழாவையொட்டி, பல்வேறு இலவச மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. வார்டு தோறும் பிறந்த நாள் விழாவை தொடர்ந்து நடத்தவும், அதன் மூலம் கட்சித் தலைமைக்கு தங்களது பலத்தை நிரூபிக்கவும் அழகிரி ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகர 93 ஆவது வட்ட திமுக சார்பில் முத்துப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் அழகிரியின் மகன் துரை தயாநிதி பங்கேற்று, முகாமைத் துவக்கி வைத்தார். மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் பசுமலையில் உள்ள இன்ப இல்லம் முதியோர் காப்பகத்துக்கு, ஆம்னி வேனை துரை தயாநிதி வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
எனது தந்தையின் பிறந்த நாள் விழா வழக்கம்போல இந்த ஆண்டும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடைபெறும். அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
தீவிர அரசியலில் இறங்குவீர்களா? எனக் கேட்டதற்கு, இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்று பதில் அளித்தார். மேலும், உங்கள் சித்தப்பாவுடன் (ஸ்டாலின்) சமாதானம் செய்வீர்களா எனக் கேட்டதற்கு, ஜன.31-க்குப் பிறகு அதுகுறித்து யோசிக்கப்படும் என்றார்.

ad

ad