புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

காவல் நிலையங்கள் வதைக் கூடாரங்களா? திருமாவளவன் கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமீம் அன்சாரி என்னும் 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பெயரில் கடந்த 7-1-2014 அன்று பிடித்துச்
சென்ற நீலாங்கரை காவல்நிலையத்தைச் சார்ந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜன் என்பவர் சிறுவனைக் கடுமையான முறையில் விசாரித்திருக்கிறார். 

அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த உண்டியல் திருட்டில் அச்சிறுவனைத் தொடர்புபடுத்தி அதனை ஒப்புக்கொள்ளுமாறு அந்த ஆய்வாளர் அச்சிறுவனைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். 
செய்யாதவொரு குற்றத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என அச்சிறுவன் மறுத்துப் பேசியிருக்கிறான்.  இதனால், ஆத்திரமடைந்த ஆய்வாளர் புஷ்பராஜன் அச்சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருகிறார்.  குண்டுகள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியைக் கொண்டு அவனிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தும் மிரட்டலை நடத்தியிருக்கிறார். துப்பாக்கி வெடித்து அவனைக் காயப்படுத்தியிருக்கிறது. கழுத்து, தோள்பட்டைப் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்ததில் நரம்புகளைச் சேதப்படுத்தியிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தந்தையை இழந்துள்ள அச்சிறுவன் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். கல்வியைத் தொடர இயலாத அளவுக்கு வறுமையில் வாடும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த அவனுக்கு இப்படியொரு கொடுமை காவல்துறையினர் மூலம் நடந்திருப்பது மேலும் வேதனை அளிக்கிறது.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயலாத காவல்துறையினர் இவ்வாறு ஏழை எளியோரை, குறிப்பாக முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், குறவர் உள்ளிட்ட பழங்குடியினர் போன்ற ஒடுக்கப்பட்டோரைப் பிடித்து பொய்வழக்குகளில் சிறைப்படுத்துவது வாடிக்கையாகவுள்ளது.  அத்துடன் அவ்வாறு பிடித்துச் செல்வோரைக் காவல்நிலையத்தில் மிகக் கேவலமான முறையில் நடத்துவதும் சித்திரவதை செய்வதும் தொடர்கதையாகவுள்ளது. இப்படி வெளிச்சத்திற்கு வராத எண்ணற்ற கொடுமைகள் நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. எத்தனை  எத்தனையோ காவல்நிலையப் படுகொலைகள் நடந்தவாறுள்ளன.  காவல்நிலையங்கள் என்றாலே வதைக்கூடாரங்கள் என்று எளியமக்கள் அஞ்சுமளவுக்கு அவை அமைந்துள்ளன.

தமிழக அரசு காவல்நிலையத்தின் மீதான இந்த மதிப்பீட்டை மாற்றுவதற்கும், பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமீம்அன்சாரியைத் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்கி உயிருக்குப் போராட வைத்துள்ள ஆய்வாளர் மீது அரசு கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யவேண்டுமெனவும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். தமீம் அன்சாரியின் குடும்பத்திற்கு உரூபாய் பத்து இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

ad

ad