புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

போர்க்குற்ற ஆதாரங்களை வன்னியில் திரட்டினார் ரெப்,
இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று நேரில் சென்று ஆராய்வு 
இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தக்குற்றம் தொடர்பான ஆதாரங்களுக்குரிய இடங்களை நேற்று நேரடியாகச்
சென்று பார்வையிட்டுள்ளார் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப். இவருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்ய­ல் ஜே. சிசனும் சென்றிருந்தார். 

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்ற அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன், இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று சென்றார். 

இதன்போது போர் தவிர்ப்பு வலயங்களாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டு அதன் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

அங்கு சென்ற அவர், அந்தப் பகுதிகளில் கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதப் பாவனை இடம்பெற்றதா என்பது குறித்தும் தீவிரமான ஆய்வை மேற்கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. 

கடந்த திங்கட்கிழமை கொழும்பு வந்தடைந்த ரெப், இரு நாள் பயணமாக வடக்குக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை விஜயம் செய்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் பயணித்த அவர், நேற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சென்றிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்ற அவர், அங்கு இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரடியாகச் சென்றார். 

இலங்கை அரசால் 2009ஆம் ஆண்டு போர்க் காலத்தில் போர் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளையே அவர் பார்வையிட்டார்.

போர்க் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் புதுக்குடியிருப்பில் இயங்கிய பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். குறித்த அலுவலகம் ஷெல் தாக்குதலில் இலக்காகி சேதமடைந்து இன்னமும் காணப்படுகின்றமையையும் அவர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் இரணைப்பாலையில் அமைந்துள்ள சென்.அன்ரனீஸ் விளையாட்டு மைதானத்தையும் சென்று பார்வையிட்டுள்ளார். இந்த மைதானத்தில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது, 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தனர் என்று அமெரிக்கத் தூதரகத்தின் ருவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் தவிர்ப்பு வலயம் - 2 என்று இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த புதுமாத்தளனில் வைத்தியசாலை மற்றும் பாடசாலையாக செயற்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டுள்ளார். இதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளையும் அவர் அவதானித்தார். 

அத்துடன், அங்கு சேதமடைந்த, தாக்குதலுக்குள்ளான இடங்களில் ஏற்பட்ட அடையாளங்கள் என்பனவற்றையும் அவர் தீவிரமாக ஆராய்ந்தார். 

முல்லைத்தீவில் போர்க் குற்றங்கள் தொடர்பிலான தரவுகளையும் அவர் சேகரித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

"போரின் இறுதிக்கட்டத்தில் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், இரசாயன ஆயுதம் என்பவற்றை அரச படையினர் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் இதனைச் சண்டையில் எப்போது, எங்கே பாவித்தார்கள் போன்ற விவரங்களை மக்கள் எங்களுக்கு விவரமாகத் தந்துள்ளனர். அதனை உங்களிடம் கையளித்துள்ளோம். இலங்கை அரசு பிரகடனப்படுத்திய மோதல் தவிர்ப்பு வலயங்களிலும் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது அரச படையினர் ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதனால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன'' என்று யாழ். ஆயர், மன்னார் ஆயர் ஆகியோர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பை சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad