புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2014

பொது வாக்கெடுப்பில் அமோக ஆதரவு: தனி நாடாகுமா கிழக்கு உக்ரைன்?

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அந்தப் பிராந்தியத்தை சுதந்திரக் குடியரசாக அ
றிவிக்க மக்கள் அமோக ஆதரவளித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அந்தப் பகுதி தனி நாடாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இது சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பு என்று உக்ரைனும், சட்டத்துக்குப் புறம்பான கேலிக் கூத்து என்று மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன.
""இரு பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றான டொனெட்ஸ்க் மாகாணத்தை தன்னாட்சிப் பகுதியாக அறிவிக்க 86 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்'' என்று கிளர்ச்சியாளர்கள் தன்னிச்சையாக அமைத்த தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அந்தத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரோமன் லியாகின் கூறுகையில், ""பொது வாக்கெடுப்பில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின'' என்றார்.
ஏ.எஃப்.பி. செய்தியாளருக்கு கிளர்ச்சியாளர்களின் மற்றொரு தலைவரான டெனிஸ் புஷிலின்  அளித்த பேட்டியில்,""முதன்முறையாக மக்களின் அரசு உருவாக உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாங்கள் எதற்காகப் போராடினோமோ அது நிறைவேறும் வகையில் பெரும்பான்மையான மக்கள் இந்தப் பிராந்தியத்தின் பயணத்தை தீர்மானித்துள்ளனர். அதன் மூலம் நாங்கள் சாதனை படைத்துள்ளோம்'' என்று கூறினார்.
உக்ரைனில் உள்ள மொத்த மக்கள் தொகை 4.6 கோடி. அதில், கிழக்குப் பிராந்தியத்தில் 70 லட்சம் வசிக்கின்றனர்.
இந்த வாக்கெடுப்பு மூலம் உக்ரைன் சிதறுண்டு போகலாம் என்றும், ஐரோப்பாவின் கிழக்கு எல்லையில் உள்நாட்டுப் போர் வெடிக்கலாம் என்றும் மேற்கத்திய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் அதிபர் கண்டனம்: உக்ரைன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் துர்ச்சினோவ் பேசுகையில், ""பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களால் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு எந்த சட்ட விதியையும் கடைபிடிக்காத போலி நாடகம். இது கொலைகள், கடத்தல்கள், வன்முறை மற்றும் பிற தீவிர குற்றங்களை செய்ததாக கருதப்படக்கூடியது. சட்டப்பூர்வமான நடவடிக்கையால் மட்டுமே அதற்கான நீதியை நிலைநாட்ட முடியும். அந்தப் பகுதியில் வன்முறையைக் கைவிட்டு சட்டப்படி தங்களின் கோரிக்கையை முன்வைக்க தயாராக இருந்தால் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதியாக இருக்கிறது'' என்றார்.
ரஷியா ஆதரவு: இந்நிலையில், ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது வாக்கெடுப்பு குறித்த டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதி மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதே வேளையில், அந்தப் பகுதிகளில் எவ்வித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் பொது வாக்கெடுப்பின் முடிவுகளை அமல்படுத்த உக்ரைன் அரசுடன் அதன் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இதனிடையே, கிராஸ்னோர்மிஸ்க் நகரில் திரண்டிருந்த ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது உக்ரைன் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad