புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014

நவிபிள்ளையை விடவும் கடும்போக்காளர் ஹுசைன்; இலங்கை அரசு அச்சமாம் 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜோர்தானின் இளவரசர் செயிட் அல் ஹுசைன், தற்போதுள்ள ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விடவும்
கடும்போக்கை கடைப்பிடிப்பவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இலங்கைக்கு மோசமாக அமைந்துள்ள இந்தத் தருணத்தில், இவரது நியமனம் வந்திருக்கக் கூடாது என்று இலங்கைத் தரப்பு எண்ணுகின்றது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
ஐ.நா விசாரணைக் குழு தயார் நிலையில் இருக்கின்றது என்று நவநீதம்பிள்ளை, இலங்கைக்குத் தெரியப்படுத்தியுள்ள நேரத்தில், பான் கீ மூனின் இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், விசாரணைக் குழு இலங்கை வருவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நவநீதம்பிள்ளை இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றின் ஆதரவு இருந்தும், இந்த விசாரணைக்கான நிதியைத் தாமதப்படுத்தி, தடுக்கும் முயற்சிகளில் இலங்கை தோல்வி கண்டுள்ளது என்று கூறப்படுகின்றது. நியூயோர்க்கின் இந்த நகர்வை முறியடிப்பதற்கு, குறைந்தபட்சம் ஒரு உள்ளக விசாரணை தேவை என்றும் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய வட்டாரங்கள் வலியுறுத்தின என்றும் கூறப்படுகின்றது.
 
இளவரசர் செயிட் அல் ஹுசேய்னின் நியமனத்துக்கு, ஐ.நா. பொதுச் சபையின் அங்கீகாரம் தேவை என்ற போதும், மேற்குலக நாடுகளின் ஆதரவு கிடைப்பது உறுதி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவநீதம்பிள்ளை மேற்குலகுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருக்காவிடினும், இலங்கை விவகாரத்தில் கடும் போக்குடையவராக இருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
இந்தநிலையில்,  இலங்கை அரசு தனது மூலோபாயத்தை மீளாய்வு செய்து கொள்ள வேண்டும் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது தேசிய நலனுக்கு விரோதமாகி விடும் என்றும் இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ad

ad