புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014




கடத்தப்பட்ட கணவரை இராணுவ முகாம் அருகிலுள்ள காட்டில் சடலமாக கண்டேன்!- மனைவி சாட்சியம்
வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற எனது கணவர், வந்தாறுமூலை இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்தார் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.கமலராணி என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது கூறினார். 
இது பற்றி அவர் கூறியதாவது,
வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற கணவர் வந்தாறுமுலையில் வைத்து கடத்தப்பட்டதாக அறிந்தேன். இது தொடர்பில் வந்தாறுமூலையிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தேன். இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒரு சடலம் கிடப்பதாகவும் என்னை போய் பார்க்குமாறும் அவர்கள் எனக்கு கூறினார்கள். அங்கு சென்று பார்த்தபோது, எனது கணவர் இறந்து கிடந்தார் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.கமலராணி என்பவர் கூறினார்.
மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது கமலராணி, மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கூறிய அவர், 'எனது கணவரின் பெயர் பி.சங்கரன் அவருக்கு வயது 37 ஆகும். எனது கணவர் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீட்டிலிருந்து வேலைக்காக சென்றவர் வந்தாறுமுலையில் வைத்து கடத்தப்பட்டதாக அறிந்தேன்.
இதை எனக்கு ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரே உறுதிப்படுத்தினார். இதையடுத்து நான் வந்தாறுமூலைப் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்று அங்கிருந்த இராணுவத்தினரிடம் எனது கணவரைப்பற்றி விசாரித்தேன். அந்த இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒரு சடலம் கிடப்பதாகவும் என்னை போய் பார்க்குமாறும் அவர்கள் எனக்கு கூறினார்கள்.
நான் போய் பார்த்தேன். அது எனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்தினேன். எனது கணவர் எந்தவொரு இயக்கத்திலும் இருக்கவில்லை. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு பிள்ளை மரணித்து விட்டது. எனது கணவர் கடத்தப்பட்டது முதல் எங்களது குடும்ப நிலைமை மிகவும் கஸ்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்றார்.
ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.குணநாயகி எனும் தாய், தனது மகன் கைலாசபிள்ளை குகதாசன் தொடர்பில் கூறியதாவது,
கைலாசப்பிள்ளை குகதாசன் என்பவர் எனது மகன். அவருக்கு அன்று வயது 22. அவர் 17.12.2000ம் திகதியன்று வீட்டிலிருந்து கொழும்புக்கு செல்வதற்காக காத்தான்குடிக்கு பஸ் வண்டிக்கு ஆசனம் புக் பண்ணச் சென்றார். அவர் அன்றிலிருந்து வீடு திரும்பவில்லை. அன்று ஆரையம்பதி பிரதேசத்திலிருந்த சாந்தன் குழுவினர் எனது மகனை கடத்திச் சென்றதாக நான் அறிந்தேன்.
பின்னர் எனது மகன், சாந்தனின் அலுவலகத்தில் உயிருடன் இருப்பதாக அறிந்து அங்கு சென்று எனது மகனை தாருங்கள் எனக் கேட்டேன். ஆனால் எனது மகன் மீண்டும் வரவில்லை என்று குணநாயகி தெரிவித்தார்.
தியாகராசா கமலேஸ்வரி என்பவர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
எனது சகோதரர் மீன் வியாபாரத்திற்காக ஆரையம்பதியிலிருந்து ஏறாவூர் பிரதேசத்திற்கு சென்றார். 29.3.1991 அன்று அவர் வீட்டிலிருந்து மீன் வியாபாரத்திற்காக ஏறாவூர் பிரதேசத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் அவரைத் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை.
இரண்டு மாதத்திற்கு பிறகு தகவல் கிடைத்தது. எனது சகோதரரை கொம்மாதுறையில் வைத்து இராணுவம் கடத்திச் சென்று விட்டதாக அறிந்தேன். எனது சகோதரர் எந்தவொரு இயக்கத்திலும் இருக்கவில்லை என கமலேஸ்வரி கூறினார்.
ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த என்.தங்கரட்ணம் என்பவர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
எனது கனவர் கதிர்காமத்தம்பி நடராசா, கடந்த 3.3.1985ம் ஆண்டு காத்தான்குடிப் பகுதிக்கு மேசன் வேலைக்காக சென்றார். பின்னர் அவர் வீடு வரவில்லை. நான் அவரை பல இடங்களிலும் தேடினேன் கிடைக்கவில்லை. பின்னர் அவர் கடத்தப்பட்டு விட்டதாக அறிந்தேன் என்றார்.
ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் சாட்சியமளிக்கையில்,
எனது மகள் ரி.கோமதி கடந்த 12.3.1990ஆம் ஆண்டு டியூசன் வகுப்புக்காக வீட்டிலிருந்து சென்றவர் இதுவரைக்கும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடியும் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை  என்றார்.

ad

ad