இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ
வரைபடத்தை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என அந்த வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை ஒட்டுமொத்த ஆசியாவின் அமைதியை சீர்குலைக்கும்விதமாக உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். இமயமலையையொட்டியுள்ள இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இந்தியாவுடன் நீண்ட காலமாக எல்லை தகராறில் ஈடுபட்டு வருகிறது சீனா.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியும், சீனாவின் வட மேற்கு எல்லைப்பகுதியும் எப்போதுமே எல்லைத்தகராறுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இப்பிரச்னை காரணமாகத்தான் 1962 ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே சிறிய அளவிலான போர் நடைபெற்றது. அதன்பின்னர் 1993 மற்றும் 1996 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ இருநாடுகளும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மதிக்க வேண்டும் என உடன்பாடு கையெழுத்தானது. ஆனாலும் அதனை மதிக்காமல் சீனா அவ்வபோது இந்தியாவை சீண்டுவது வாடிக்கையாகி விட்டது.