புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


சந்திரசிறி மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து சரவணபவன் எம்.பி. கண்டனம்
வடக்கு மாகாண சபையின் கடமைகளைத் தொடர்ந்து முடக்கும் நோக்குடன் இராணுவ சர்வாதிகாரம் திணிக்கப்படுகிறது.

மீண்டும் ஐந்து வருட காலத்துக்கு வடக்கின் ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டமையானது ஜனநாயக விரோதச் செயல் மட்டுமன்றி, அராஜகப் போக்கும் கூட. இந்த நியமனத்தை வடக்கு வாழ் தமிழர்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்.
வடக்கின் ஆளுநராக மீண்டும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை ஜனாதிபதி நியமித்திருப்பதை ஆட்சேபித்து சரவணபவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடமாகாண ஆளுநராகப் பதவி வகித்த மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் அவர் மீண்டும் அதே பதவிக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்குக் கடமையாற்றும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனமானது தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் விதத்திலும், அவர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
வடமாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநராக வடமாகாண சபையுடன் இணக்கப்பாட்டுடன் பணியாற்றக்கூடிய ஒரு சிவில் அதிகாரியை நியமிக்குமாறு தொடர்ந்து கோரி வந்தனர். வடமாகாண முதலமைச்சர் அரசுடன் இணைந்து வடபகுதியின் அபிவிருத்திகளையும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற விடயங்களிலும் செயற்படத் தயாராகவுள்ளதாக பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் பல முயற்சிகளையும் மேற்கொண்டார். மீண்டும் மீண்டும் ஜனாதிபதியுடன் சந்திப்புகளை நடத்தி அதற்கான முயற்சிகளில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டார். அதன் ஒரு பகுதியாக அவர் வட மாகாண ஆளுநராக ஒரு சிவில் அதிகாரியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் பதவிக்காலம் நிறைவடையச் சில நாள்களே இருப்பதால் அவரது பதவிக் காலம் முடிந்த பின்பு அந்தப் பதவிக்கு ஒரு சிவில் அதிகாரியை நியமனம் செய்வது பற்றி கவனம் எடுக்கப்படும் என முதலமைச்சரிடம் ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் ஜனாதிபதி தனது வாக்குறுதியைத் தானே மீறியது மட்டுமன்றி வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாண சபையையும் உதாசீனம் செய்யும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் மீண்டும் மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஆளுநராக நியமித்துள்ளார்.
இன்று வடக்கில் இரு நிர்வாகங்கள் இயங்கி வருகின்றன. வடமாகாண ஆளுநர் அதிகாரிகள் மூலம் வடமாகாண நிர்வாகத்தைத் தனது கைகளில் வைத்துக்கொண்டு தானே நடத்தி வருகின்றார். வட மாகாண சபை திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
அதாவது வடமாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு அவற்றைச் செயற்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள அதேவேளையில் வட மாகாண முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ எந்தவித பங்கும் இல்லாமல் பல விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வடமாகாண சபையின் முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் சில வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் தம்மைத் தெரிவு செய்த மக்களுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள்.
மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமையைக் கொண்டவர்கள். ஆனால் ஓர் இராணுவ அதிகாரியின் நிலை அதுவல்ல. அவர் மேலிடத்தின் கட்டளைகளைக் கேள்விக்கு இடமின்றி நிறைவேற்ற வேண்டியவர். அவர் தனது மேலாளர்களுக்கு மட்டுமே பதில் கூறக் கடமைப்பட்டவர். அதேபோன்று அவர்கள் தங்கள் கட்டளைகளைத் தமது அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள், கேள்விக்கு இடமின்றி நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள்.
இந்த இரண்டு எதிரெதிரான போக்குகளுக்கு இடையே மாகாணசபை சிக்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் மாகாணசபையின் கடமைகளை முடக்கும் வகையில் ஒரு ஜனநாயக விரோத இராணுவ சர்வாதிகாரம் திணிக்கப்படுகின்றது என்றே கூற வேண்டும்.
மாகாணசபையால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நியதிச் சட்டம் கூட திட்டமிட்ட வகையில் மாதக் கணக்கில் அங்கீகாரம் வழங்கப்படாமல் ஆளுநரால் இழுத்தடிக்கப்படு வதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
குறிப்பாக, முத்திரைவரி கைமாற்றல் நியதிச்சட்டம் இன்னமும் அங்கீகரிக்கப்படாமையால் மாகாண சபை அமைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் முத்திரைவரி மூலமான நிதி மாகாண சபைக்கு கிடைக்கப் பெறவில்லை.
கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களுக்கு மாகாண அமைச்சர்கள் இருந்தபோதும் அவற்றுக்கு ஆளணியினரின் அதிகாரம் வலிந்து புகுத்தப்பட்டு அங்கும் குழப்பமான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இப்படியான ஒரு ஜனநாயக விரோத சூழ் நிலையில் மீண்டும் அதே இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளமை மாகாணசபையின் இயக்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு முறையற்ற சர்வாதிகார நடைமுறையயன்றே நாம் கருதுகின்றோம்.
அந்த வகையில் மேஜர் ஜெனரல் சந்திரசிறி வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்த நியமனத்தை மீள் பரிசீலனை செய்து ஒரு பொறுப்பு வாய்ந்த சிவில் அதிகாரியை ஆளுநராக நியமிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.
ஜனநாயக ஆட்சி என்பது ஒரு பிரிவினரால் மற்றவர் மீது அதிகாரம் செலுத்துவது அல்ல என்பதையும் அது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரு ஆட்சி என்பதையும் இங்கு நினைவூட்டி வைக்க விரும்புகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad