புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூலை, 2014


காவிரி பாசனப் பகுதிகளில் முற்றுகைப் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புக்களை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் வரும் 21-ம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: 

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 5, 2007-ல் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டதும், அரசியல் சட்டத்தின்படி அதிகாரம் கொண்டதுமான காவிரி நடுவர்மன்றம், தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. 

இதில் புதுச்சேரி மாநிலத்திற்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழலுக்கு 14 டி.எம்.சி. போக தமிழகத்திற்கு வெறும் 171 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைக்கும். கர்நாடகம் 171 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடுவதை உறுதி செய்திட, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புக்களை உருவாக்க வேண்டும்; அப்போதுதான் நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்த முடியும் என்று நடுவர்மன்றம் தனது உத்தரவில் தெளிவாகச் சுட்டிக்காட்டியது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடுவதற்கு காங்கிரஸ் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் காலதாமதம் செய்தது. இப்போதும் உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்த பின்னரே பிப்ரவரி 19, 2013 இல் மத்திய அரசு, காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. 

ஆனால் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டை வஞ்சித்தது. மேற்கண்ட அமைப்புக்களை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு மே 10, 2013 -இல் உச்ச நீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதிகள் லோதா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய நீர்வளத் துறை மற்றும் சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை உதாசீனப்படுத்துவதிலேயே நோக்கமாக இருக்கும் கர்நாடக மாநிலத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஒரு வஞ்சகமான கருத்தை உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு வைத்தார். ‘மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க காலதாமதம் ஆகலாம். அதுவரை மேற்பார்வைக் குழு ஒன்றை இடைக்கால ஏற்பாடாக அமைக்கலாம்’ என்று ஆலோசனை வழங்கினார்.

அன்றைய தினம் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இல்லாத நிலையில் கர்நாடக வழக்கறிஞரின் கருத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியதற்கு மாறாக மத்திய அரசு மே 24, 2013 இல் மேற்பார்வைக் குழுவை அமைத்தது. இக்குழுவிற்கு எவ்வித சட்டபூர்வ அதிகாரமும் இல்லை. தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு நீரைத் திறந்துவிட கர்நாடகம் மறுப்புத் தெரிவித்தபோது மேற்பார்வைக் குழுவினால் எதுவும் செய்ய முடியவில்லை. 

மத்தியில் புதிய அரசு அமைந்தவுடனேயே கர்நாடக மாநில முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமரைச் சந்தித்து காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் நடுவர்மன்ற உத்தரவில் கூறியபடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புக்களை மத்திய அரசு உடனடியாக அமைத்தால்தான், தமிழ்நாட்டுக்கு உரிய நீதி கிடைக்கும். 

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் ஜூலை 21 ஆம் தேதி, காவிரி படுகை ஐந்து மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் முற்றுகைப் போராட்டத்திற்கும், தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.