புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2014

விசாரணைப் பொறிக்குள் வீழ்ந்தார் மகிந்த
அனைத்துலக அழுத்தங்களினால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணங்கள் மற்றும் மனிதாபிமானச் மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. 

இதற்கென, போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விசாரிக்கும் வகையில், காணாமற்போனோர் குறித்து விசாரித்து வந்த நீதிபதி மக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைப் பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் கடந்த 15ம் நாள் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிலேயே, இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும், ஆணைக்குழுவுக்கான அனைத்துலக நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், இந்த அறிவிப்பை மிகவும் கவனமான முறையில் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் அதிகார ஆணை, தற்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் 4:359 பந்தியில் கூறப்பட்டுள்ள, 2009இல் போரின் இறுதிநாட்களில், சிறிலங்காப் படையினரால் போர் தவிர்ப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிக்குள், நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில், பொதுமக்கள் கொல்லப்பட்டது, காயமுற்றது குறித்தும் விசாரணை செய்யும் வகையில், விரிவாக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு, 2009 மே 19ம் நாள் முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் உயிரிழக்க காரணமான, நிலைக்கு இட்டுச்சென்ற சூழல் மற்றும் அதுபற்றிய உண்மைகளையும், இந்த மீறல்களுக்கு எந்த தனிநபர் அல்லது குழு நேரடியாகவோ மறைமுகமாகவோ, பொறுப்பாக இருந்ததா, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச்சட்ட மீறல்கள் இடம்பெற்றதா என்பது குறித்து விசாரிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது, சிறார்களை படைக்கு சேர்த்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இந்த ஆணைக்குழு விசாரிக்கும்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட ஆணை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுபற்றி புதன்கிழமையே தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதிபர் ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.

2009ல் நிகழ்ந்த பொதுமக்களின் மரணங்கள் குறித்தும் விசாரிக்குமாறு தற்போது ஆணைக்குழு கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad