புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2014

தமிழர்களுக்கு நீதி கிடைக்க மோடி நடவடிக்கையை ஆரம்பித்து விட்டார்: சம்பந்தன்
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அண்மையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் செய்தனர்.
அங்கு பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இன்று தமிழகத்திற்கு விஜயம் செய்தனர்.
தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர்கள், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் சம்பந்தன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில்,
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, மரியாதை கிடைக்க தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
தமிழர்கள் பெருமளவில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் இதன்போது எடுத்து கூறியுள்ளோம் என்றார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்தியப் பிரதமர் நரேந்திர உறுதியான நடவடிக்கை எடுப்பார் என இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு இன்று மாலை விஜயம் செய்த அவர்,
மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மூத்த தலைவர்கள் இல. கணேசன், எச்.வி. ஹண்டே, மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு, மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. சுமந்திரனும் உடனிருந்தார்.
இங்கு செய்தியாளர்களிடம் உரையாற்றிய சம்பந்தன்,
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்துப் பேசினோம். அனைத்தையும் மிகவும் பொறுமையுடன் கேட்டறிந்த மோடி, எங்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.
பிரதமராக பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் நடந்த பேச்சின்போது, இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என உறுதியுடன் தெரிவித்ததாக மோடி எங்களிடம் கூறினார்.
ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரையறைக்குள் தமிழர்கள் சம உரிமை, சுயமரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் வாழ, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது இந்தக் கருத்தை நாங்களும் ஏற்கிறோம்.
13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாநிலங்களை இணைக்க வேண்டும், சிங்களர்களுக்கு சமமாக அனைத்து உரிமைகளுடன் வாழ தமிழர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற இந்திய அரசு உதவ வேண்டும் என மோடியிடம் வலியுறுத்தினோம்.
மேலும், வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களவர்களையும், இராணுவத்தினரையும் நிரந்தரமாக குடியமர்த்தும் முயற்சியில் ராஜபக்ச அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழ் பள்ளிக்கூடங்களும், ஆலயங்களும் இடிக்கப்படுகின்றன.
தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் மொழி, கலாசார மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால் அரசியல் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்படாது என இலங்கை அரசு கருதுகிறது. வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தமிழர் அரசையும் முடக்க நினைக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் ராஜபக்ச அரசுக்கு அக்கறை இல்லை. இதுபோன்ற விஷயங்களை பிரதமர் மோடியிடம் தெரிவித்தோம்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகள் தீர அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக மோடி உறுதி அளித்தார். அவருடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாகவும், முழு நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மோடி உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மோடியுடனான சந்திப்பின் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர்களை சந்தித்து விவாதித்தோம். இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரச்சினைகள் இல்லாமல் மீன் பிடிப்பதற்கு இந்திய - இலங்கை மீனவர்கள் சந்தித்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றார் சம்பந்தன்.
இதன்போது, பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடனிருந்தனர்.

ad

ad