27 நவ., 2014

கட்சி கொடியை அறிமுகப்படுத்தி விளக்கம் கொடுத்த ஜி.கே.வாசன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் ஆதரவாளர்களுடன் விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். புதிய கட்சியின் தொடக்க விழா மாநாடு வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற உள்ளது. 

இதற்கிடையில் கட்சியின் புதிய கொடி அறிமுக விழா புதன்கிழமை)சென்னை சாந்தோம் சர்ச் எதிரில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் நடந்தது. கட்சியின் புதிய கொடியை ஜி.கே.வாசன் அறிமுகம் செய்தார்.

புதிய கொடி ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களைக் கொண்டுள்ளது. கட்சி மத்தியில் காமராஜர், மூப்பனார் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய கொடியை உயர்த்திப் பிடித்து வாசன் காண்பித்தார். பிறகு அவர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

கட்சியின் கொடி அறிமுக விழாவில் ஜி.கே.வாசன் பேசியதாவது,

எங்களது புதிய இயக்கத்தின் கொடியை மிகவும் மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த கொடி மூவர்ணக் கொடியாகும்.

மேலே ஆரஞ்சு நிறம், நடுவில் வெள்ளை, கீழே பச்சை ஆகிய 3 நிறங்களும் கொண்டதாக இந்த கொடி இருக்கும். இதில் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் திரு உருவப் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுவே புதிய இயக்கத்தின் கொடி ஆகும். இது வலிமையான பாரதம், வளமான தமிழகம் என்பதை உணர்த்தும் வகையில் தேர்ந்து எடுத்துள்ளோம்.

இந்த கொடியில் இடம் பெற்றுள்ள ஆரஞ்சு நிறம் தியாகத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கிறது. பச்சை நிறம் பசுமை மற்றும் வளமையை குறிக்கிறது.

புதிய கட்சியின் பெயர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் சட்டத்துக்குட்பட்டு, கோட்பாடுகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய கட்சி பெயரை 28ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.

இப்போது இயக்கத்தின் மூத்த தலைவர்கள் புதிய கொடியை லட்சோப லட்ச மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை அனைவரும் கவனித்து வருவதால், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.