26 நவ., 2014


சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் இருந்தால்
 வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் : 
கலைஞருக்கு ஓ.பி.எஸ். சவால்


தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை:

’’தி.மு.க தலைவர் கருணாநிதியும், அவருடன் பனிப்போர் தொடுத்திருக்கும் அவரது தனயன் மு.க.ஸ்டாலினும் பேரவையைக் கூட்டுவது பற்றி தரம் தாழ்ந்த அறிக்கைகளை வெளியிடுவதும், விமர்சனங்கள் செய்வதையும் தொடர்ந்து வருகின்றனர்.

சட்டப் பேரவை நடவடிக்கைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத கருணாநிதி, சட்டப்பேரவையைக் கூட்டாதது தமக்கு வருத்தமளிப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது பற்றி 22.11.2014 அன்று நான் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன். 

அந்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றிடவும், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றவும் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்திருந்தேன்.

இலங்கை அரசால் பொய் வழக்கு தொடுக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் வழக்கினை நடத்த புரட்சித் தலைவி  எடுத்த நடவடிக்கைகள் பற்றியும், வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அவர்களது குடும்பத்தினைரைக் காப்பாற்ற செய்த உதவிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்ததோடு, ஜெயலலிதா  வழியில் நடைபெறும் அஇஅதிமுக அரசு, 5 மீனவர்கள் உயிர் காக்க விரைந்து செயல்பட்டவிவரங்களையெல்லாம் நான் விரிவாக எடுத்துக் கூறினேன். அது போன்றே, மேகதாது பிரச்சனையில் விரைந்து எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது தான் என்பதையும் நான் விளக்கியிருந்தேன். 

அந்த அடிப்படையில் மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடு அரசு 18.11.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்ததையும் எனது அறிக்கையில் திரு.கருணாநிதிக்கு நினைவூட்டி, சட்டமன்றத்திற்கு வருவது என்பது கருணாநிதியைப் பொறுத்த வரையில் சட்டமன்றத்தின் தாழ்வாரத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவது தான், சட்டமன்ற உறுப்பினரின் தலையாயப் பணி என்பதை கருணாநிதி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதிலிருந்து மேற்கோள் காட்டி நான் விளக்கியிருந்தேன். ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்ற அடிப்படையில், கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கையில் நான் பிதற்றியிருப்பதாக தரம் தாழ்ந்து விமர்சித்ததோடு சட்டமன்றத்தைக் கூட்ட நான் பதற்றப்படுவதாகத் தெரிவித்து, ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு என்ன விலை?’ என்பது போல் பருப்பு வாங்கும் டெண்டரில்  ராமதாஸ் கேள்விக்கு பதில் கூறட்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். 

பருப்பு பற்றி ராமதாஸ் கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஏற்கெனவே பதிலளித்துவிட்டார். ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு ஒன்றையும் அவர் தொடுத்துள்ளார் என்பதை கருணாநிதிக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

தனது கேள்வி-பதில் அறிக்கையில், சட்டப் பேரவைக்கு தான் ஏன் வருவதில்லை என்பதை 2013 ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2014 ஆம் ஆண்டில் ஒரு முறையும் தான் விளக்கிவிட்டதாகவும், தனக்கு முறையான இட வசதி செய்து தரவில்லை என்று ஒரு புதிய கயிறு திரிக்க முனைந்துள்ளார். 

சட்டமன்றத்திற்கு கருணாநிதி வருவது பற்றி, ‘வசதிப்படி பார்ப்போம்’ என்று 25.8.2011 அன்று நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதை நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டினேன். அதே கூட்டத்தில், ‘சட்டமன்றத்திற்குச் சென்று கையெழுத்துப் போடாவிட்டால், நம்முடைய கையொப்பம் பதிவாகாமல் போய் விட்டால், சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விடும்’ என்று சட்டமன்ற உறுப்பினரின் பணி பற்றி, கடமை பற்றி, தன்னல விளக்கம் கொடுத்த
கருணாநிதியைப் பற்றி நான் தோலுரித்துக் காட்டியிருந்தேன். 

தற்போதும், திருவாருர் தொகுதி மக்களின் பிரதிநிதி என்ற முறையில் சட்டமன்றத்திற்கு வந்து விவாதங்களில் பங்கேற்பது தனது கடமை என்பதை வசதியாக மறந்து விட்டு, ஆளும் கட்சியினர்
என்னென்ன உறுதிமொழிகளை அளித்தால் இவர் தனது காலடியை சட்டமன்றத்திற்குள் பதிய வைப்பார் என்பதை சொல்லியிருக்கிறார் கருணாநிதி. 

ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சட்டமன்றத்திற்கு வந்து பேசும் போது, தி.மு.க உறுப்பினர்கள் கட்டுப்பாடு காத்து, அமைதியாக இருந்து ஜெயலலிதாவின் உரையைக் கேட்டதாகவும், அப்போது தி.மு.க உறுப்பினர்கள் கடைபிடித்த கண்ணியத்தைப் போல, இப்போது அஇஅதிமுக உறுப்பினர்கள் நிச்சயம் கடைபிடிப்பார்கள் என்ற உறுதிமொழியை அளித்தால், சட்டப் பேரவைக்கு வருவதற்கு தாம் தயாராக இருப்பதாக கருணாநிதி 

தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முதலமைச்சர் கருணாநிதியும், தி.மு.க அமைச்சர்களும், தி.மு.க உறுப்பினர்களும் எப்படிப்பட்ட கண்ணியத்தைக் கடைபிடித்தார்கள் என்பதை இந்த நாடே நன்கறியும். 

ஜெயலலிதா பேசும் போது எப்படியெல்லாம் குறுக்கீடுகள் செய்தார்கள் என்பதும், எவ்வளவு கீழ்த்தரமான விமர்சனங்களை செய்தார்கள் என்பதும், பேசவே விடாமல் எத்தகைய அராஜகத்தில்
ஈடுபட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். 

தமிழக மக்கள் இவற்றையெல்லாம் மறந்து விடுவார்கள் என்று கருணாநிதி நினைப்பாரேயானால், அவர் ஏமாற்றம் தான் அடைவார். தி.மு.க அரசு நடைபெற்றபோதெல்லாம், அமைச்சர்களும், தி.மு.க உறுப்பினர்களும் நடந்து கொண்ட இது போன்ற இழி செயல்களைத் தான், ‘கண்ணியம்’ என்று கருணாநிதி குறிப்பிடுவாரேயானால், அது போன்று நாங்களும் இழிவாக நடந்து கொள்வோம் என்ற உறுதிமொழியை நிச்சயம் எங்களால் அளிக்க இயலாது என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் சரி, சட்டப் பேரவையின் கண்ணியத்திற்கும், மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த அளவுக்கு இழிவாக நடந்து கொள்ளமுடியுமோ, அந்த அளவுக்கு தி.மு.க.வினர் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒரு சில நிகழ்வுகளின் மூலம் கருணாநிதிக்கு நினைவுபடுத்துவது அவசியம் என்று கருதுகிறேன்.

25.3.1989 அன்று தமிழக சட்டப்பேரவையில் அன்றைய முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சராக இருந்த திரு.கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்ய முற்பட்ட போது, ஒரு உரிமை மீறல் பிரச்சனையை எடுத்துக் கொள்ளும்படி ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டார்கள். ஜனநாயக ரீதியாக ஜெயலலிதா வைத்த கோரிக்கைக்கு திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டார்கள்,ஜெயலலிதாவையும், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் எவ்வாறு தாக்கினார்கள், ஜெயலலிதாவை எவ்வாறு மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள் என்பதையெல்லாம் தமிழக மக்கள் என்றைக்கும் மறந்து விட மாட்டார்கள். 

25.3.1989 அன்று பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் போது, அப்போது சட்டமன்றத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த குமரி அனந்தன் ‘அவை மீறல் குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்திருந்தேன், அதற்கு அனுமதியும் கோரியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
அதனையடுத்து, ஜெயலலிதா எழுந்து பேசினார்கள். 

அப்போது தனது தனிப்பட்ட உரிமையும், சட்டமன்ற உறுப்பினர் என்ற உரிமையும், எதிர்கட்சி தலைவர் என்கிற உரிமையும் மீறப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில் காவல் துறையின் அத்து மீறல்கள் நடந்துள்ளன என்றும்; தொலைபேசிகள் ஒட்டு  கேட்கப் படுகின்றன என்றும் தெரிவித்து உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பினார்கள்.

அப்போது முதல்வர் கருணாநிதி பட்ஜெட் உரையை படிக்க துவங்கியதும், அதனை ஆட்சேபித்து, உரிமை மீறல் பிரச்சனையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திய போது, அன்றைய முதல்வர் கருணாநிதி ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேசமாகக் கத்தினார். 

அதையடுத்து தி.மு.க அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஜெயலலிதா அவர்களையும்,
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் நோக்கி ஆபாச வார்த்தைகளை சொல்லிக் கொண்டே பாய்ந்து தாக்கினார்கள். மேஜை, நாற்காலிகள், பட்ஜெட் உரையின் நகல்கள், புத்தகங்கள், செருப்புகள், பேப்பர் வெயிட்கள் ஆகியவையும் ஜெயலலிதா அவர்களை நோக்கி வீசப்பட்டன. 

தி.மு.க அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு தாக்குவதை இந்திரா காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும், துணைத் தலைவர் குமரி அனந்தனும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் தடுக்க முயற்சித்தார்கள். அப்போது மூப்பனார் மீதும் செருப்புகள் வீசப்பட்டன. தொடர்ந்து சபையிலிருந்தால் கொல்லப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் ஜெயலலிதா அவர்களும் மற்றும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேற முற்பட்டபோது, கருணாநிதி அருகிலிருந்த துரைமுருகன் ஜெயலலிதா அவர்களின் புடவையை இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்தார். 

தி.மு.க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையைத் தான் தி.மு.க உறுப்பினர்கள் கடைபிடிக்கும் கண்ணியம் என்று கருணாநிதி குறிப்பிடுகிறாரா? என்பதை அவர்
தான் தெளிவுபடுத்த வேண்டும்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு மைனாரிட்டி அரசை தி.மு.க அமைத்தது. அப்போது ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது 26.5.2006 அன்று அஇஅதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை நீக்கப்படும் உத்தரவை அன்றைய பேரவைத் தலைவர் பிறப்பித்தார்.

அன்றைய கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளாததால், அவர் மட்டும் சட்டமன்றக் கூட்ட தொடர் நடவடிக்கையில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை. சட்டப் பேரவையில் அஇஅதிமுகவின் கருத்துகள் பதியப்படவேண்டும் என்பதால் ஜெயலலிதா 27.5.2006 அன்று சட்டப் பேரவைக்கு வருகை புரிந்து, பேசுவதற்கு அனுமதி கேட்டு ஆளுநர் உரை மீது ஒரு சில கருத்துகளை எடுத்துரைத்தார்கள். 

அப்பொழுது ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கான விளக்கங்களை எடுத்துரைத்தார்கள். அப்போது, முதலமைச்சர் கருணாநிதியும், தி.மு.க அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து குறுக்கீடுகள் செய்த காரணத்தால் ஒரு சில கருத்துகளை மட்டுமே ஜெயலலிதா அவர்களால் எடுத்து வைக்க முடிந்தது. ஒரு கருத்தை சொல்லி முடிக்கும் முன்பாகவே, ஜெயலலிதா என்ன சொல்ல வருகிறார்கள் என்று கூட கேட்காமலேயே தி.மு.க அமைச்சர்கள் குறுக்கிட்டு, குறுக்கிட்டு பேசினார்கள்.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி, தேசிய வங்கிகளில், இதர வணிக வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கும் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்த போது, அப்போதைய நிதியமைச்சர் க.அன்பழகன், ‘விவசாயிகள் மாமன், மச்சான்களிடத்திலே வாங்கிய கடன்கள் எல்லாம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப் படவில்லை’ என்று சம்பந்தமே இல்லாமல் கண்ணியக் குறைவாக பேசினார். 

மேலும், ஜெயலலிதா அஇஅதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத் தொடர் முடியும் வரை நீக்கப்பட்ட நிலையில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் இறுதி நாளான 30.5.2006 அன்று பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுமா என்று கேட்ட போது, ‘அது பற்றி பின்னிட்டுத் தான் யோசிக்கப்படும்’ என்று பேரவைத் தலைவர் தெரிவித்து விட்டார். 

ஜெயலலிதாவின் ஆணித்தரமான வாதங்களை நேருக்கு நேர் எதிர் கொள்ள இயலாத கருணாநிதி
அவரது அலுவலகத்தில் இருந்த கோப்புகளையெல்லாம் சட்டமன்றத்திற்கு கொண்டு வரச் செய்து அவற்றை அவரது மேஜையின் மீது குவித்து வைத்து, தன் முகத்தையே மறைத்து  கொண்டதையெல்லாம் நாடு நன்கு அறியும்.

 அஇஅதிமுகவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் பிரச்சனைகள் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகவும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களின் வேண்டு கோளுக்கிணங்க ஜெயலலிதா அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்க இசைந்தார்கள்.

அதற்கான தீர்மானம் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, 29.5.2006 அன்று மதியமே அனுப்பப்பட்டும், இரவு 12 மணிக்கு தான் எதிர்கட்சி தலைவர் என ஜெயலலிதா அவர்களை அங்கீகரித்து சட்டப்பேரவைத் தலைவர் ஆணையிட்டார். ஆனால்,  ஜெயலலிதா பேசுவதற்கான அனுமதியை வழங்காமல், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரின் உரை இல்லாமலேயே, 2006 ஆம் ஆண்டு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிவு பெற்று முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்திருக்கிறார். இவ்வாறு ஒரு மோசமான புதிய வரலாற்றை படைத்த கருணாநிதி, தி.மு.க கடைபிடித்த கண்ணியத்தை பற்றி பேசுவது வேதனையான ஒன்று.


 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற திருத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையின் பொது விவாதத்தின் போது, எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு மைனாரிட்டி தி.மு.க அரசு இழைக்கும் நம்பிக்கை துரோகங்களை நிதி நிலை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது என்று தெரிவித்து, அது குறித்து விரிவாக பேசும் போது, 65 முறை திமுக அமைச்சர்கள் குறுக்கீடு செய்து, பேசவே விடாத அளவு இடையூறு ஏற்படுத்தினார்கள். அப்போது அமைச்சராக இருந்த எ.வ.வேலு எப்படி பேசுவது என எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை வழங்கிய போது, ‘ஒரு பெண் அரசு அதிகாரியின் அழகை வர்ணித்து பேசிய இந்த அமைச்சர் வேலுவின் பேச்சை கேட்டு அவரிடம் பேசக் கற்றுக் கொண்டால் இந்த நாடு தாங்காது’ என்று ஜெயலலிதா அவர்கள் தெரிவித்தார்கள். 

தி.மு.க.வின் அவை முன்னவர் க.அன்பழகன் அதற்கும் குறுக்கிட்டு, ‘அரிசியினுடைய நிறம் சிகப்பு, கருப்பு’ என்பதற்கு, ‘அவரைப் போல சிகப்பு; என்னைப் போல கருப்பு என்று சொன்னார். அது ஒரு பெண்ணினுடைய அழகை வர்ணிப்பதா? சிகப்பெல்லாம் அழகா? அது எந்தப் பெண் அதிகாரியையும் வர்ணிப்பதும் அல்ல; வர்ணிக்கிற வயதிலேயும் அவர் இல்லை.’ என்று சொல்லியிருக்கிறார். இது எவ்வளவு கண்ணியமான பேச்சு என்பதை தமிழக மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். 

 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது, ஜெயலலிதா ஒரு பொருள் குறித்து ‘கற்றறிந்த, திறமையான வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள் குழுவிலே ஆராயப்படும்’ என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்ததற்கு மாறாக அமைச்சர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் நடைபெற்ற விவாதம் பற்றி தெரிவித்து நிதியமைச்சர் க.அன்பழகன் பச்சையப்பன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகத் தானே இருந்தார்,அவர் ஒன்றும் சட்ட நிபுணர் அல்லவே! என்று சாதாரணமாக கேட்ட கேள்விக்கு, அமைச்சர்  துரைமுருகன், ‘எதிர்கட்சித் தலைவர் இன்றைக்கு ஒரு விதமாக வந்திருக்கின்றார்
.
பேராசிரியரைப் பார்த்து பச்சையப்பன் கல்லூரியில் ஒரு துணைப் பேராசிரியர் என்கிறார். ஒரு புரட்சியும் செய்யாத உன்னைப் போய் புரட்சித் தலைவி என்று சொல்கிற போது, அவரைஏன் ஒரு பேராசிரியர் என்று சொல்லக்கூடாது?’ என்று ஒருமையில் ஜெயலலிதாஅவர்களை திட்டியிருக் கின்றார். இதைத் தான் தி.மு.க தலைவர் கருணாநிதிதி.மு.க.வினர் கடைபிடித்த கண்ணியம் என்று குறிப்பிடுகிறாரா என்பதை விளக்கவேண்டியது கருணாநிதியின் பொறுப்பு.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த தி.மு.க ஆட்சியின் போது எப்படியெல்லாம் தரக்குறைவாக சட்டமன்றப் பேரவையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஒரு சில உதாரணங்களை மட்டும் நான் தெரிவித்துள்ளேன். கருணாநிதியும், அவருக்கு பக்க பலமாக இருந்த அமைச்சர்களும், தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் செய்த இது போன்ற அராஜக செயல்களில் அஇஅதிமுக ஒரு போதும் ஈடுபடாது என்பது தமிழக மக்கள்
அனைவருக்கும் நன்கு தெரியும். எனவே, சட்டமன்றத்தில் தமிழக அரசை விமர்சிப்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறது என்று கருணாநிதி கருதுவாரேயானால், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவரது சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை பேச அனுமதிப்பாரேயானால், சட்டமன்றத்தில் எடுத்துரைக்கக் கூடிய கருத்துகள் ஏதேனும் இருக்குமானால், சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால், கருணாநிதி, 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறே