புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

சுவிஸ் அருள்ஞானமிகு ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் செந்தமிழ்த் திருக்குடமுழுக்கு 31.01.2015

5
பிடித்திருக்கிறது ·  · சைவநெறிக்கூடம் ஞானாம்பிகையுறை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் குடமுழுக்கு ஐரோப்பாவில் ந
டைபெறும் முதலாவது செந்தமிழ்த் திருக்குடமுழுக்காக திருவள்ளுவர் ஆண்டு 2046 (01.02.2015) சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ண் மாநகரில் நடைபெறவுள்ளது. இப்பெரும் நிகழ்வில் தமிழ் நாட்டிலிருந்து சைவ சித்தாந்த அறிஞரும்;, 1500க்குமதிகமான தமிழ்க் குடமுழுக்குகளை நடாத்தியவரும், 2000க்குமதிகமான தமிழ்த் திருமணங்களை நடாத்தியவருமான, தமிழ் நாட்டு அரசின் அறநிலைத் துறை அமைச்சகத்தின் ஆகம விரிவுரையாளரான, செந்தமிழ் வேள்விச் சதுரர், சைவ சித்தாந்த அறிஞர் திருநிறை. மு.பே. சத்தியவேல் முருகனார் முன்நிலையில் திருச்சடங்குகள் நடைபெறத்திருவருள் நிறைகூடியுள்ளது. மேலும் சைவநெறிக்கூடத்தின் அழைப்பினை ஏற்று தாயகத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டப் பராளுமன்ற உறுப்பினர் திருநிறை. சீனித்தம்பி யோகேஸ்வரன் செந்தமிழ்த்திருக்குடழுக்கு விழாவினைச் சிறப்பிக்க உள்ளார்கள். சுவிஸ் நாட்டில் உள்ள பல்சமயத் தலைவர்களும், சுவிஸ் நாட்டு மாநில, நடுவன் அரச பதிலிகளும் (பிரதிநிதிகளும்) இக்குடமுழுக்கில் கலந்துகொள்கின்றனர்.
இவர்களுடன் சுவிஸ் நாட்டு மாநில மற்றும் நடுவன் அரசு அதிகாரிகளும் ஏனைய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். சுவிஸ் நாட்டுத் தேசியக் கொடியை குடிவரவுத் திணைக்களத்தின் வெளிநாட்டவர்களுக்கான காவற்துறை சிறப்பதிகாரி அவர்கள் ஏற்றிவைப்பார். காலை ஆறு மணிக்கு திருச்சடங்குகள் ஆரம்பமாகி 10 மணியிலிருந்து 11 மணிக்குள் அனைத்து கருவறைகளுக்கும் இராசகோபுரத்துக்கும் திருக் குடமுழுக்கு இடம்பெறும்.
குடமுழுக்குக்கு முதல் நாள் 31.01.2015 அன்று மதியம் 14.00 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது. முதன் முறையாக ஐரோப்பாவில் செந்தமிழ் மொழியில் நடைபெறும் இத் திருக்குடமுழுக்கில், இந்நிகழ்வு தொடர்பானதும் சைவத் தமிழ் வழிபாட்டுப் பாரம்பரியங்கள் குறித்தும் எமது சமூகத்தில் எழக் கூடிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முகமாகவே இச் செய்தியாளர்கள் சந்திப்பு இடம்பெறுகின்றது. இப்பத்திரிகையாளர்கள் மாநாட்டில் சுவிஸ் நாட்டுச் செய்தியாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
புலம்பெயர் தமிழ் மக்கள் வரலாற்றில் ஓர் முக்கிய நிகழ்வாக இந்நாட்டின் சைவத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அங்கீகாரம் கொண்ட திருக்கோவிலாக மலரும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் இந்நாட்டிலுள்ள தமிழ்ச் சமூகத்துக்கும் இந்நாட்டு மக்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில் இச்செய்தியாளர்கள் சந்திப்பு இடம்பெறுகின்றது.
குறிப்பாக எமது சமூகத்தில் எழும் பொதுவான கேள்விகளான இறைவனை தமிழ் மொழி மூலமாக பூசிக்க முடியுமா அல்லது இது எமது சைவப் பாரம்பரியத்தில் ஏற்புடையதா? இது தொடர்பான திருக்கோவில் மற்றும் வாழ்வியற் சடங்குகள் எவ்வாறு அமையப்பெறும்? இவற்றுக்கான மூலம் அல்லது ஆதாரங்கள் எவை? சைவத் தமிழ்ப் பண்பாட்டில் சாதிய அமைப்பு முறைகள் இருந்தனவா அல்லது அவை காலப்போக்கில் திணிக்கப்பட்டவையா? போன்ற வாழ்வியல், சமூகவியல் நோக்கிலமைந்ததுமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் கடப்பாட்டின் நிமித்தமே இச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகின்றது.
சிந்துவெளி நாகரிகம் தொட்டு பல்லாயிரம் வருடங்கள் செழுமையும் தொன்மையும் மிக்க சைவத் தமிழ் வழிபாடு அடுத்தடுத்து நிகழ்ந்த படையெடுப்புகளாலும் பெரும் கடல்கோல்களாலும் மறைந்தழிந்திருந்தது. மறைந்துவிட்ட இச் சைவத் தமிழ் வழிபாட்டு முறைமை இன்று மீள் மறுமலர்ச்சியுடன் தழைத்தோங்குவது உலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் ஓர் பெரும் வரலாற்று நிகழ்வாக அiமைந்துள்ளது.
இத்திருக் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சுவிற்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடி, மாநிலக்கொடி,
சைவர்களின் நந்திக் கொடி, சேர சோழ பாண்டிய மூவேந்தர்களின் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு இடம்பெறும். இராஐகோபுரத்துக்கு குடமுழுக்கு இடம்பெறும் வேளை தேவாரம் திருவாசகங்களோடு திருக்குறளும் ஓதப்படும். குடமுழுக்கின் போது தமிழ் வாத்தியங்களாகிய பறையொலி, தவிலொலி சங்கொலி முழங்க சைவத் தமிழ் மக்கள் அனைவரும் தங்கு தடையின்றி கருவறை வரை சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் ஞானலிங்கேக்சுரப் பெருமானை வழிபடுவர். ஈழத்தில் இராவணேச்சுரனாலும் பல சித்தர்களாலும் வழிபடப்பட்டு வந்த பல்லாயிரம் வருடங்கள் தொன்மை மிக்க படிகலிங்கம் அருள்மிகு ஞானலிங்கேச்சுரராக எழுந்தருளவுள்ளார்.
ஈழத்தமிழ் மக்களின் பேருதவியுடன் சைவநெறிக் கூட இளையோர்கள், தொண்டர்கள் இணைந்து உருவாக்கிய வரலாற்றுத் திருக்கோவில் இதுவாகும். இங்குள்ள இராசகோபுரம் மற்றும் அனைத்து இறை மூர்த்தங்களும் தென்னிந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள தேர்ச்சி மிக்க சிற்பக் கலைஞர்களால் அற்புதமாக வடிவமைக்கப்;பட்டுள்ளன. முதன் முறையாக சைவநெறிக் கூட ஞானலிங்கேச்சுர திருக்கோவில் சுவிஸ் வாழ் சைவத் தமிழ் மக்களைப் பதிலி (பிரதிநிதித்துவப்படுத்தும்) அமைப்பாக சுவிஸ் நாட்டின் அரச பதிவேட்டில் இடம்பெற்றிருப்பது சைவத்துக்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் வெற்றியுமாகும். இத் திருக்கோவில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சுவிற்சர்லாந்து அரசினால் திறந்து வைக்கப்பட்ட பல்சமய (சர்வமத) பீடத்தில் உறுப்புரிமை வகிக்கின்றது. அனைத்துலக சமயத் தலைவர்களும் இச் செந்தமிழ்க் குடமுழுக்கு நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அன்றைய தினம் முன்னைநாள் ஐக்கிய நாடுகள் உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகரும் விரிவுரையாளருமான திருநிறை. மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களால் தொகுத்துருவாக்கப்பட்ட செந்தமிழ் சைவ சித்தாந்த பக்தி இலக்கியங்களான பதினைந்து சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், பன்னிரு திருமுறைகள், திருவருட்பா, திருத்தொண்டர் புராணம், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள் என எண்ணற்ற தமிழ் மறைகள் பாரியதோர் தொகுப்பாக இத் திருக்குடமுழுக்கில் மதிப்பளித்து சிறப்பிக்கப்படவுள்ளது. சைவநெறிக் கூட மதியுரைஞர்களான சிவஞான சிவயோகநாதன் ஐயா அவர்களும் திருநிறை. தில்லையம்பலம் ஐயா அவர்களும் இணைந்து திருக்கோவிலினுள் அமைந்துள்ள சிவஞான சித்தர் பீடத்தில் இத்தொகுப்பினை நிறுவுவார்கள்.

அன்புடன்
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், சுவிற்சர்லாந்து

ad

ad