புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஜன., 2015

போலிப் பிரசாரங்களை நம்பாது மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்!- சம்பந்தன் பா.உ.


பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8ம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம் எப்போதும் கிடைப்பதில்லை. எனவே, தற்போது கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் தவறாது பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது பெயர் மற்றும் உருவத்தையொத்த வேறொரு வேட்பாளரின் (கொடி சின்னத்தில்) பிரசாரங்கள் மஹிந்த அரசால் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பொய்யான வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொது எதிரணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சர்வாதிகார ஆட்சியாளர்கள் தங்களது இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் மக்களைத் திசைதிருப்பி இதன்மூலம் தமது ஊழல்கள் மற்றும் திருட்டுகளை மறைக்க முயற்சி செய்கின்றனர் என்றும் பொது எதிரணியினர் கடுமையாகச் சாடியுள்ளனர்.
இந்நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மேற்படி விடயங்களைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாம் கவனமாக ஆலோசித்துத்தான் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம்.
இந்த நாட்டின் நன்மைக்காகவும், யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்காகவும், அவர்களுடைய உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே மைத்திரிபாலவை நாம் ஆதரிக்கின்றோம்.
எனவே, எமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது.
இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி நிலவ வடக்கு, கிழக்குத் தமிழ் பேசும் மக்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மைத்திரிபாலவின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்  என்றார்.