புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2015

ஒற்றையாட்சியைத் தமிழினம் ஒருபோதும் ஏற்றதில்லை - வி.ரி.தமிழ்மாறன்


தேர்தலில் தோற்றிருந்தால் மண்ணுக்கடியில் சங்கமித்திருப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மண்ணில் நின்று
(பொலனறுவையில்) விளம்பியுள்ளார். மண்ணுக்கடியில் போகவிருந்த எங்களில் பலரும் தற்போது தப்பித்து விட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள். ஆயினும் உரிமைக்கான குரலை உரத்து ஒலித்ததால் எங்கள் மீது திணிக்கப்பட்டிருந்த எல்லாவிதமான அச்சுறுத்தல்களும் முற்றாக நீங்கிவிட்டதாகக் கூறமுடியாது. வடக்கு கிழக்கில் குடிகொண்டிருக்கும் புலனாய்வுக் கட்டமைப்பு முற்றிலும் அகற்றப்படாத நிலையில் தான் நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பதை மறக்கக் கூடாது.
இராணுவக் கெடுபிடியிலிருந்து இன்னும் விடுபடாத நிலையிலும் சுத்தமான நிலத்தடி நீரைக்கூடத் தமது சொந்தக் கிணற்றிலிருந்து பெற்றுப் பருக முடியாத நிலையிலும் அவதியுறும் மக்கள் சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பது எப்போது என்பதே இப்போது எம்முன்னால் விரியும் மிகப்பெரிய வினாவாகும். இது வேறு பல வினாக்களின் தொகுப்பாக எழுவதாகும்.
இராணுவத்தினர் முகாம்களைச் சுருக்குவது எப்போது? முகாம்களுக்குள் முடங்குவது எப்போது? அனைத்து அரசியல்கைதிகளும் விடுதலையாவது எப்போது? எஞ்சியிருந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் என்ன ஆனார்கள்? காணாமல் போனவர்கள் கண்டறியப்படுவது எப்போது? சர்வதேச விசாரணையொன்று சாத்தியமாகுமா? அன்றேல் உள்ளகமாக எல்லாமே உறங்கிப் போய்விடுமா? என்றவாறான ஏராளமான கேள்விகள் எங்களுக்குள்ளே எழுந்தாலும் முன்னர் இவை பற்றி வெளியில் பேசக்கூடிய சூழ்நிலை கூட இருந்திருக்கவில்லை. இப்போது பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். நல்ல விடயந்தான்.
எதற்கெடுத்தாலும் 'பகிஷ்கரிப்பு அறிக்கையை' அடிக்கடி விட்டுக்கொண்டிருப்போரின் புத்திசாலித்தனத்தையும் புறந்தள்ளி வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தாங்கள் நினைத்ததை இந்தத் தேர்தலில் சாதித்துவிட்டார்கள். இது இன்னும் தென்னிலங்கையில் முற்றாக ஜீரணிக்கப்படாத நிலையில் இருக்கின்ற போது, இனவாதத்தை எவ்வாறாவது கிளறிவிட வேண்டும் என்பதில் தேர்தலில் தோற்றவர்கள் கங்கணங்கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அங்ஙனமிருக்கையில், வீட்டைக் கொழுத்துபவனுக்கு கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொடுப்பது போன்று எம்மவர்களில் சிலர் புதிய கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
உடனடித் தேவைகளும் உரிய தீர்வுகளும்
எத்தனையோ உடன்படிக்கைள் எழுதப்பட்டு பின்னர் கிழிக்கப்பட்ட வரலாறுகளும் நமக்குத் தெரியும். அந்த வகையில், தமிழ்க் கூட்டமைப்பினர் கடந்த தடவை இழைத்த தவறை மீளவுஞ் செய்யாமல் எவ்வித உடன்படிக்கையும் இன்றி ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இதில் ஐயுறவை வெளிப்படுத்தியோர் தற்போது மௌனித்துவிட்டனர். தென்னிலங்கை அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகள் எழுத்தில் இருந்தாலும் பிரயோசனமில்லை என்பதை அனுபவத்தால் அறிந்தவர்கள் என்றளவில் தமிழ்த் தலைமைகள் வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் நம்பிச் செயற்பட மாட்டார்கள் என்றும் நம்புவோமாக. ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பியாக இருக்க நாங்கள் விரும்பவில்லை என்பதை இம்முறை தமிழ்த் தலைமைகள் புத்திசாதுரியமாக வெளிப்படுத்தியமைக்கு இந்த அனுபவங்களும் காரணங்களாகலாம்.
ஒன்றை மட்டும் மனதில் வைத்திருப்போம். தேசியம், சுயநிர்ணயம் என்ற கொள்கை வழிநின்று நாட்டின் ஆட்சியுரிமையில் பங்குபெற வேண்டும் என்ற கோரிக்கையையே பல தசாப்தங்களாகத் தமிழினம் முன்வைத்து வருகின்றது. பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களின் மூலமும் சளைக்காமல் இதனை முன்னெடுத்து வருகின்றார்கள் தமிழர்கள். இலங்கையில் எந்தவொரு காலகட்டத்திலும் அல்லது எந்தவொரு தீர்வுத்திட்டத்தின் கீழும் தமிழ் மக்கள் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொண்டதே கிடையாது என்பதை முதலில் நாம் மனதிருத்த வேண்டும். இதற்கு மறுவாறான சான்றெதுவும் இருக்கவும் முடியாது. கூட்டாட்சி என்றால் வேப்பங்காயாகிக் கசக்கும் தென்னிலங்கை அரசியலாளர்களை அதிலிருந்து விடுபடச் செய்தல் என்பது பகீரதப் பிரயத்தனமே. இதிலொரு அங்கமாகவே சில சொல்லாடல்கள் கையாளப்படுகின்றன. அதற்காக, ஒற்றையாட்சிக்கு உடன்பட்டு விடுவார்களோ என்று ஒப்பாரி வைப்பது அரசியற் பக்குவமின்மையின் பறைசாற்றலேயாகும்.
என்னைப் பொறுத்தளவில், அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், அரசியல் கைதிகள் யாவரும் விடுதலைபெற வேண்டும். இந்த விடுதலை விடயம் மிகவும் நுட்பமான முறையில் கையாளப்பட வேண்டியுள்ளது. ஒருவித அரசியல் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி அதனூடாக எதிர்காலம் பற்றிய நிச்சயத் தன்மையை அரசியலரங்கில் ஏற்படுத்துவதன் மூலமே இதனைச் சாதிக்கலாம் என்று நம்புகின்றேன். கைதிகளின் விடுதலையிலான தாமதம் தமிழ் மக்களை இன்னும் சந்தேகக் கண்ணுடனே தென்னிலங்கை நோக்க விரும்புகின்றது என்பதை பலவேறு மட்டங்களிலும் நாம் வெளிப்படுத்தியாக வேண்டும். அதேவேளை சட்டவழியிலான அழுத்தங்களையும் கொடுப்பதற்கான காலமும் கனிந்துள்ளமையைத் தவறவிடக் கூடாது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் இனங்களுக்கிடையில் எங்ஙனம் பிளவை வேரூன்றச் செய்துவிட்டது என்பதை கற்றறிந்த அரசியற் பாடங்களினூடாக தென்னிலங்கையை ஏற்கச் செய்ய வேண்டும். இதற்கான கருத்தாடல்களுக்கான அரங்குகள் திறக்கப்பட வேண்டும். இது எவ்விதத்திலும் உரிய அரசியற் தீர்வுகளுக்கான நகர்வுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். பலகாரத்தைவிட சிலு சிலுப்பைச் சுவைப்பவர்களின் கூச்சல்கள் இந்தக் கைதிகளின் விடுதலைக்கு வேட்டுவைக்கும் தன்மை கொண்டவை என்பதை தேர்தல்காலத்து தேவைகளுக்காக முழங்குவோருக்கும் சேர்த்துச் சொல்லியேயாக வேண்டும்.
கிடைத்துள்ள இடைவெளியைப் பயன்படுத்திப் படிப்படியாகச் சில விடயங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் தமிழ்த் தலைமைகளிடம் தற்போதுள்ளது. இன அடையாளத்தின் அடிப்படையையே தகர்க்கும் வகையிலான இராணுவ பரம்பலையும் பலாத்காரக் குடியேற்றங்களையும் தடுப்பது எந்தளவுக்கு அவசியமோ அந்தளவுக்கு அரசியல் கைதிகளின் விடுதலையும் முன்னுரிமை பெற வேண்டும்.
இயல்புநிலையும் இராணுவச் சூழலும்
நாடு முழுவதிலும் ஒரே விதமான சட்டமே பாவிக்கப்பட வேண்டும் என்றால், அரசியலில் இயல்புநிலை திரும்பிவிட்டதென்றால், நல்லாட்சிக்கான அரசாங்கம் அமைந்து விட்டதென்றால், கருத்துச் சுதந்திரமும் சட்ட ஆட்சியும் மீளுயிர்த்து விட்டதென்றால், அத்துடன், பாதிக்கப்பட்டவர்களே யுத்தம் முடிந்த பின்னர் முதன்முறையாக நல்லெண்ணச் சமிக்ஞையாக வாக்களித்து ஆட்சிமாற்றத்துக்கு உதவியுள்ளார்கள் என்றால், பின்னர் எதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று ஒன்று இந்த நாட்டில் இருக்க வேணடும்? ஏன் உயர் பாதுகாப்பு வலயங்கள் நமக்குத் தேவையாகின்றன? இராணுவச் சுவீகரிப்புக்கு உட்பட்ட தமது சொந்தக் காணிகளைத் திரும்பப் பெறுவதில் ஏன் இந்தளவுக்கு இழுத்தடிப்புக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது? விஷமச் சுற்றுவட்டம் போன்று, எந்தளவு காலத்துக்கு இத்தகைய மேலாதிக்கச் செயற்பாடுகள் முனைப்புறுகின்றனவோ அந்தளவு காலத்துக்கு சமூகங்கள் அந்நியப்பட்டுவிடும் என்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இராணுவச் சூழலை அகற்றுங்கள் என்று கூறும்போது முதன்மைப்படுத்தப்பட வேண்டிய விடயம் அந்நியமாதல் என்பதாகும். ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது மக்களின் ஒருமித்த மனப்பாங்கின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டுமே தவிர இனங்களைப் பிளவுபடுத்தலால் ஏற்படுத்தப்பட முடியாததாகும். எனவே அத்தகைய பிளவுகளுக்கு வழிகோலவல்ல சட்டங்களை வைத்துக்கொண்டு தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இன ஒற்றுமை என்றெல்லாம் பேசுவது உள்ளார்ந்த முரண்பாடே என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அடக்குமுறை ஆட்சி என்றால் என்ன? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்பதை கடந்த பத்து வருடங்களுக்குள்ளாகவே புரிந்துகொண்ட தென்னிலங்கை மக்கள், மாற்றத்தை வேண்டி வாக்களித்தது உண்மையானால் அவர்களால் நிச்சயம் பல தசாப்தங்களாக வடக்கு கிழக்கில் நீடிக்கும் இராணுவக் கெடுபிடியின் விளைவுகளையும் உணராமல் இருக்க முடியாது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றிய ஆரம்பகால எனது எழுத்துக்களில் நான் சுட்டிக்காட்டியிருந்த ஒரு விடயம் இச்சட்டம் எப்படி ஜனநாயகத்துக்குச் சாவுமணி அடிக்கும் நிலையைக் கொண்டுவரும் என்பதாகும். அந்த நிலையை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுத்துவிட்டது. அந்தளவில் நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஜனாநாயக ஆட்சி என்றால் என்ன என்பதை மக்களை உணர வைத்த பெருமையை அவர் பெற்றுவிட்டார்.
பிரிவினை பற்றிப் பேசுவதற்கான எந்தவொரு காரணமும் தமிழ் மக்களுக்கு இல்லையென்பதை பெரும்பான்மையினரே நிரூபிக்க வேண்டியிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் உருவாக்கத்துக்கு உண்மையான காரணம் என்ன? வன்முறை அரசியலில் அவர்கள் நம்பிக்கை வைப்பதற்குத் தூண்டுதலாக அமைந்தவை என்ன? அத்தகைய காரணங்கள் முற்றிலும் அற்றுப்போய் விட்டதாக இன்றேனும் கூறமுடிகின்றதா? இராணுவச் சூழல் என்பது ஒருவிதமான 'நீறுபூத்த நெருப்பு' நிலையையே நிரந்தரமாக்குவதாக அமைந்துள்ளது என்பதைச் சொல்ல வேண்டியவர்களுக்குச் சொல்லும் வகையில் சொல்லி வைப்பதற்கான துணிவும் தற்போது எமக்கு அவசியமாகின்றது.
எனவே, இயல்பு நிலை திரும்புதல் என்பது இராணுவச் சூழல் அகல்வதோடு சம்பந்தப்படாததாக ஒருபோதும் அமையாது என்பதில் நாம் விடாப்பிடியாக நின்றால்தான் அரசியல் தீர்வு பற்றிச் சிந்திப்பதற்கோ விவாதிப்பதற்கோ அவசியமான சுதந்திரச் சூழல் உருவாகும் என்பது வெளிப்படையாக்கப்படல் வேண்டும். வெள்ளை வான்கள் வலம் வரும் வரையில் இந்த வெளிப்படை என்பது ஒருவழிப் பாதையாகவே அமைந்திருக்கும். அதாவது, எமக்கு என்ன தேவை என்பதை எம்மைத் தவிர்த்து மற்றவர்கள் மட்டுமே நமக்குப் போதித்துக் கொண்டிருக்க முடியும். இதுவே பெரும்பான்மையின வாதமாகும். இந்நிலை மாறியேயாக வேண்டும். இதற்கு முன்னிபந்தனையாக இராணுவச் சூன்ய நிலை வடக்கு கிழக்கில் ஏற்பட்டேயாக வேண்டும். இதற்காக, மணி கட்டிய மாடுகளும் நமக்கு அவசியமாகலாம்.
அரசியற் தீர்வு நகர்வுகள்
ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வேண்டி சர்வதேச விசாரணை தேவை என்ற விடயத்தில் எம்மிடையே ஒருமித்த கருத்தே உள்ளது என்பதில் ஒளிவு மறைவு தேவையில்லை. அத்தகைய ஒரு விசாரணை இல்லாமற் போகாது என்ற நம்பிக்கையுடனேயே பலரும் உள்ளனர்.
ஆனால், மறுபுறத்தில், அரசியற் தீர்வு முயற்சிகளை முன்னெடுக்கின்றபோது எங்கே விசாரணை விடயம் பின்னிலைக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அங்கலாய்ப்பு சிலர் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றமும் புதிய அரசாங்கத்தின் முகத்தோற்றமும் விசாரணை விடயத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று சிலர் கருதுவதிலும் நியாயம் இல்லாமலில்லை.
அதாவது, தீர்வு விடயத்தில் மணிகட்டிய மாடுகள் சம்பந்தப்படுமாயின் அவர்கள் விசாரணை விடயத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடும் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. வேறு நாடுகளில் அப்படித்தான் நடந்துள்ளது என்பதை நாமறியாமலில்லை. 'முழங்கையை முறுக்கும்' வாய்ப்பாக மட்டும் சர்வதேச விசாரணை பயன்பட்டுவிடுமா?
கடந்த காலத்துக்காக எதிர்காலத்தை இழக்கச் சம்மதமா என்ற வினா எம்மை நோக்கித் திரும்பலாம். என்னதான் சட்டமும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாக இருப்பினும் அதற்கான எல்லைக்கோட்டைக் கீறி, இரண்டுமே வெவ்வேறாகக் கையாளப்பட வேண்டும் என்ற விவேகமான நிலைப்பாட்டை எடுத்தல் அவசியமாகின்றது. ஆம், இதில் அரசியல் சாணக்கியமும் தேவைதான். அதே நேரத்தில், நேர்மையும் அர்ப்பணிப்பும் இல்லாமல் செய்யும் அரசியலும் நீடிக்க முடியாது என்பதையும் நாம் அறிந்தே வைத்திருக்க வேண்டும்.
என்ன இருந்தாலும் 'நாங்கள் நாங்கள் தான்' என்பதை நாங்களே தான் நிலை நாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தை புதிய ஆட்சி மாற்றம் எமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஆம், இதுவொரு அக்னிப் பரீட்சைக்கான காலமே

ad

ad