புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2015

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும்; சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தகவல்



தமிழக சட்டசபையில் கவர்னர் கே.ரோசய்யா நிகழ்த்திய உரை வருமாறு:-

“ஸ்மார்ட்” நகரங்கள்

மாநிலத்தின் மொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். எனவே, சென்னையின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்ய ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சென்னை பெருநகர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலைகள் போன்ற நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் இத்திட்டங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. தமிழகத்தின் 12 மாநகராட்சிகளை “ஸ்மார்ட் நகரங்கள்” திட்டத்தின் கீழ் சேர்க்கக் கோரியுள்ள தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு விரைவில் ஏற்கும் என நம்புகிறேன்.

புதிய நீர்த்தேக்கம்

மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள, நாளொன்றுக்கு தலா 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் முழுமையாக செயல்பட்டு சென்னையின் குடிநீர் தேவையை நிறைவு செய்து வருகின்றன. இவற்றுடன், நெம்மேலி மற்றும் பேரூரில் முறையே நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் மற்றும் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இரண்டு அலகுகளை அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்துவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய்க் கண்டிகையில் புதிய நீர்த்தேக்கத்தை 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்து, அதனை 93.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூண்டி நீர்த்தேக்கத்தோடு இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகரப் பகுதிகளில் வேகமாக வளர்ந்துவரும் மக்கள் தொகையின் எதிர்கால குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய இந்த தொலை நோக்குத் திட்டங்கள் உதவும்.

குடிசை பகுதி மேம்பாடு

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 19 ஆயிரத்து 928 குடியிருப்புகளை கட்டி முடிப்பதற்காக 2014-15-ம் ஆண்டில் மாநில அரசு நிதியிலிருந்து கூடுதலாக 406.31 கோடி ரூபாய் நிதியை இந்த அரசு ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசு உறுதி அளித்தவாறு அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. என்றாலும், குடிசை பகுதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

மெட்ரோ ரெயில் சேவை

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையில் உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் சேவைகள் தொடங்கப்படும். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரை இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதலை விரைவில் வழங்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

இத்திட்டத்தின் இரண்டாவது கட்ட வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியை மாநில அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவாக்கவும், சென்னை மக்களுக்கு மேலும் பயன்தரச் செய்யவும், இந்த கூடுதல் வழித்தடத் திட்டங்களை செயல்படுத்திட மாநில அரசுக்கு மத்திய அரசு உதவும் என்று நம்புகிறேன்.

வெளிநாட்டு முதலீடு

2014-ம் ஆண்டில், புதிய தொழில் கொள்கை மற்றும் உயிரி தொழில்நுட்பம், வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்றவற்றுக்கான தனிப்பட்ட கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2011-14-ம் ஆண்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 382 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, தமிழகம் நமது நாட்டில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது.

இக்காலகட்டத்தில், 44 ஆயிரத்து 402 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை நமது மாநிலம் ஈர்த்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

முதலீட்டாளர்கள் மாநாடு

முதலீடுகளில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு, மே 23 மற்றும் 24-ம் நாட்களில் சென்னையில் நடைபெற இருக்கும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு உதவும்.

கல்வியில் தமிழகம் நமது மாநிலத்தில் 9.68 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழில் அலகுகளைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, 63.18 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

வெற்றியின் உச்சம்

கடந்த நான்கு ஆண்டுகளில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டன. 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. விளையாட்டு மேம்பாட்டில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோர் கணிசமான எண்ணிக்கையில் பயன்பெறும் வகையில், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.

உயர் கல்விக்கான உதவித்தொகையை, தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தி அரசு வழங்கியுள்ளது. இந்த அரசின் கீழ் நமது மாநிலம் மென்மேலும் முன்னேறிச் சென்று வெற்றியின் உச்சத்தை தொடும் என நான் முழுமையாக நம்புகிறேன்.

இவ்வாறு கவர்னர் கே.ரோசய்யா உரையாற்றினார்.

ad

ad