புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

இந்தியாவில் முதன்முறையாக பெற்ற தாயே வாடகை தாயாக மாறி குழந்தை பெற்றுக்கொடுத்த அற்புதம்



 சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் லட்சுமி (27)–பிரகாஷ் (30). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இருவரும் பட்டதாரிகள்.

திருமணமான உடனே லட்சுமி கருவுற்றார். ஆனால் 7–வது மாதத்தில் நஞ்சு பிரிந்து கடும் உதிரப்போக்கு ஏற்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டது. உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும்.

குழந்தையை எடுக்கும் போது கர்ப்பப்பையையும் சேர்த்து எடுக்க வேண்டும். இனிமேல் லட்சுமியால் குழந்தை பெற முடியாது என்ற அதிர்ச்சி தகவலையும் டாக்டர்கள் தெரிவித்தனர். தாயை காப்பாற்ற கர்ப்பப்பையுடன் இறந்த குழந்தை அகற்றப்பட்டது.

மயக்கம் தெளிந்து நிலைமையை உணர்ந்த லட்சுமி நிலைகுலைந்து போனார். கணவன்–மனைவி இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதே என்று தவித்தனர்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று வாங்க பல இடங்களுக்கும் அலைந்து லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்தார்கள். ஆனாலும் சரிபட்டு வரவில்லை.

கடைசியில் வடபழனியில் உள்ள ஆகாஷ் மருத்துவமனையை அணுகினார்கள். அப்போது டாக்டர்கள் காமராஜ், ஜெயராணி ஆகியோர் ‘‘வாடகை தாய்க்காக நீங்கள் அலைவது கஷ்டம். யாராவது பெண் கிடைத்தால் கூட அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அதோடு அவர்களை பராமரித்து சமாளிப்பதும் கஷ்டம். எனவே உறவு பெண்கள் யாராவது வாடகை தாயாக வந்தால் மிகவும் நல்லது’’ என்றார்கள்.

டாக்டர்களின் கவுன்சிலிங்கால் தயக்கத்தை விட்டு லட்சுமியின் தாயே தனது மகளுக்கு வாடகை தாயாக குழந்தை பெற்று கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து லட்சுமியின் தாயின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவருக்கு வயது 61. மாதவிடாய் நின்று போயிருந்தது. ஆனால் கர்ப்பப்பை நன்றாக இருந்தது.

டாக்டர்கள் மருந்து மூலம் மாதவிடாயை வரவழைத்தனர். அதன் பிறகு கருவை சுமப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மருமகன் பிரகாசின் விந்தணுவும், மகள் லட்சுமியின் கருமுட்டையும் சேர்த்து கருவாக்கம் செய்து தாயின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது.

எதிர்பார்த்தபடியே கரு நல்ல நிலையில் வளர்ந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த லட்சுமியின் தாய் கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்று மகளுக்கு பரிசளித்தார்.

குழந்தை ஏக்கம் தீர்ந்த மகிழ்ச்சியில் லட்சுமி ஆனந்தம் அடைந்தார். மகளின் சந்தோசத்தை பார்த்ததும் தாயாகவும், வாடகை தாயாகவும் இருந்து மகளுக்கு உதவியதை நினைத்து பெருமைப்பட்டார் அந்த தாய்.

தாயே வாடகை தாயாக மாறி இருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை.

ad

ad