புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2015

போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முக்கியமாகப் பங்காற்றிய லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.புதிய இராணுவத் தளபதி

உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குத் தயாராகி வருவதாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற நிலையில் தான் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.
உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணைக்கும், இவரது நியமனத்துக்கும் இடையில் பல தொடர்புகள் இருக்கின்றன. புதிய இராணுவத் தளபதியாக சேவை மூப்பு அடிப்படையில் லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு அப்பால் அவர் போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முக்கியமாகப் பங்காற்றிய ஒர் அதிகாரி என்பது பலருக்கும் தெரியாத விடயம்.
முன்னைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போலன்றி, இப்போதைய இலங்கை அரசாங்கம் போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கலாம், போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம், என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே, தாம் முன்னைய அரசாங்கத்தைப் போல போர்க்குற்றங்கள் நிகழவில்லை என்று நிராகரிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
போர் ஒன்றில், குற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், அதுபற்றி உள்நாட்டு விசாரணையை நடத்த விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். வெளிநாடு ஒன்றில் வைத்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன என்று இலங்கை அரசாங்கத்தின் சார்பில், சொல்லப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகத் தான் இருக்கும்.
அதாவது குற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகளை கண்மூடித்தனமான மறைக்க முனையாமல் அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறியது, முக்கியமான ஒரு விடயமே. புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகாவும் கூட, போர் ஒன்றில் மீறல்கள் நிகழ்வது வழக்கமே என்று கூறியிருப்பதுடன், சரணடைந்த போராளிகளும் பொது மக்களும் கொல்லப்பட்டிருந்தால், அது மிகப் பெரிய போர்க்குற்றமே என்றும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசியல் மட்டத்தில் இந்தளவுக்கு வெளிப்படையாகப் பேசத்தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விடயமே. என்றாலும் புதிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவினால் இதுபோன்று வெளிப்படையாக,இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று ஒருபோதும் கூற முடியாது.
ஏனென்றால், அவர் போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முன்னைய அரசாங்கத்தினால் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட ஒருவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அழுத்தங்கள் எழுந்தப் போது முன்னைய அரசாங்கம், 2012ம் ஆண்டு ஒரு இராணுவ விசாரணைக் குழுவை நியமித்திருந்தது.
விடுதலைப்புலிகளிடம் இருந்து வன்னிப் பகுதியை மீட்பதற்கு நடத்தப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையில் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டதாக சனல் 4 தொலைக்காட்சி குற்றம் சுமத்தியது போன்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இடம்பெற்றதா, படையினரின் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலில் பொது மக்கள் பாதிக்கப்பட்டனரா என்று விசாரிக்கவே இந்த இராணுவ விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இந்த இராணுவ விசாரணைக் குழுவை, தாம் மேற்கொள்ளும் உள்நாட்டு விசாரணை என்று முன்னைய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எடுத்துக் காட்ட முனைந்திருந்தது. என்றாலும் அந்த முயற்சி அப்போது வெற்றியளிக்கவில்லை.
அப்போது மேஜர் ஜெனரலாக இருந்த கிருசாந்த டி சில்வாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட அந்த இராணுவ விசாரணைக்குழுவின் அறிக்கை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழிந்து ,2013 பெப்ரவரி மாதம், இராணுவத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
அதனை அவர் தனது பரிந்துரைகளுடன் இணைந்து, பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்திருந்தார். இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ளது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியவுடன் தான், இந்த இராணுவ விசாரணைக் குழு 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டது.
ஆனாலும், 2012 மார்ச்சில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் ஜெனீவாவினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதையடுத்து,அடுத்த தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா தயாராகி வந்த போது தான், 2013ம் ஆண்டு இந்த இராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான இராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கையில் ,போரின் போது படையினரின் ஷெல் தாக்குதலில்,பொது மக்களில் ஒருவருக்கேனும், காயம் கூட ஏற்படவில்லை என்றும், பொது மக்கள் எவரும் மரணமாகவில்லை என்றும் கூறப்பட்டிருந்து.
படையினர் போரின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுதங்களைப் பாவிக்கவில்லை என்றும், பொதுமக்கள் இருந்த பகுதியை நோக்கித் தாக்குதலே நடத்தவில்லை என்றும் இராணுவ விசாரணை அறிக்கை கூறியது. போதிய பயிற்சி இல்லாமல் விடுதலைப் புலிகள், ஆட்டிலறிகளை இயக்கியதாகவும், அதனால், அவர்கள் ஏவிய குண்டுகள் அவர்களின் பகுதியிலேயே வீழ்ந்திருக்கலாம் என்றும் இராணுவ விசாரணை அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கும் வகையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதேவேளை ,சனல் 4 வெளியிட்ட சரணடைந்த போராளிகள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இரண்டாவது கட்டமாக அந்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் முன்னைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்று வரை, சனல் 4 வெளியிட்ட வீடியோ குறித்த விசாரணைக் அறிக்கையை மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான இராணுவ விசாரணைக் குழு சமர்ப்பிக்கவேயில்லை. முதலாவது கட்ட விசாரணை அறிக்கையைக் கூட முன்னைய அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட மறுத்து விட்டது.
அது இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை என்றும் ,அதனை வெளியிடமுடியாது என்றும் கூறி விட்டார் கோத்தபாய ராஜபக்ச. அமெரிக்காவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமும், இராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிய போதும், அதனை முன்னைய அரசாங்கம் செவிசாய்க்க வில்லை.
எனினும், 2013 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூட இரண்டாவது கட்டமாக சனல் 4 வீடியோ குறித்து விசாரித்து வருவதாக அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. எனினும் பின்னர் எதுவுமே நடக்கவில்லை.
மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான இராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கையை முன்னைய அரசாங்கம் அப்படியே மறைத்து விட்டதால், அதில் இருந்த விடயங்கள் எதுவும் வெளியாகவேயில்லை. அறிக்கையின் சாராம்சம் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்கள் மட்டுமே, ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.
யார், யாரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன, எப்படி விசாரணைகள் நடத்தப்பட்டன என்ற எந்த விபரங்களும் கிடையாது. இதனால் தான்,அந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கருத்தில் கூட எடுக்காமல் தூக்கிப் போட்டது.
சனல் 4 வெளியிட்ட வீடியோ ஆதாரங்கள் தொடர்பாக,விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறுவதாக கூறி வந்த முன்னைய அரசாங்கம்,அப்படியே மறைத்து விட்டது.காரணம் ,அந்த ஆதாரத்தை பொய்யானது என்று நிரூபிக்க முடியாது போனதால் தான்,அந்த விவகாரம் அப்படியே மறைக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு, ரஷ்யாவுக்கான துணைத் தூதுவராக அனுப்பட்ட மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா புதிய அரசாங்கத்தினால் அங்கிருந்து திரும்பி அழைக்கப்பட்டு, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சனல் 4 வீடியோ பற்றிய விசாரணைக்கு என்னவாயிற்று என்று கேட்டால் அவருக்கே அந்த விபரம் தெரியாமல் போயிருக்கலாம்.
புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்றுள்ள லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உலா வரவே செய்கின்றன.  என்றாலும், அத்தகைய விமர்சனங்களை எல்லாம் ஒதுக்கி விட்டுத்தான், புதிய அரசாங்கம் அவரை இராணுவத் தளபதியாக நியமித்திருக்கிறது.
இப்போது உள்ளக விசாரணை ஒன்றை நடத்தப் போவதாக புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த உள்ளக விசாரணைக்கு இராணுவத்தினது ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால், பிரதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே இராணுவத்துக்கு எதிராகவே சுமத்தப்படுகின்றது.
அத்தகைய நிலையில், உள்நாட்டு விசாரணையில், இராணுவத்திடம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியிருக்கும், விளக்கம் கோர வேண்டியிருக்கும், தகவல்களையும், ஆவணங்களையும் பெறவேண்டியிருக்கும்.  லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இராணுவத் தளபதியாக இருக்கின்ற நிலையில், உள்நாட்டு விசாரணைக்குத் தேவையான தகவல்கள், ஒத்துழைப்புகள் அனைத்தும் வழங்கப்படுமா என்ற சந்தேகம் இருக்கிறது.
ஏனென்றால் ஏற்கனவே இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தவர் அவர். அவரது தலைமையிலான இராணுவ நீதிமன்றம், அந்த முடிவின் அடிப்படையிலான அறிக்கையையே சமர்ப்பித்திருந்தது. அதற்கு முரணான அறிக்கை ஒன்றுக்கு இட்டுச் செல்லக் கூடிய வகையில், அவர் உள்நாட்டு விசாரணைகளுக்கு இணங்குவாரா என்பது கேள்வியே.
இதில், முன்னைய அரசாங்கத்தின் சொற்படியே அவர் விசாரணைகளை நடத்தியிருக்கலாம், ஆனாலும், விசாரணை அறிக்கைக்கு இவரே பொறுப்பாளி. பொய்யான விசாரணை அறிக்கை ஒன்றைக் கொடுத்த அதிகாரி என்ற பெயரை இராணுவத் தளபதியாக இருப்பவர் பெற்றுக் கொள்வது அநாகரீகமானது.
எனவே அவர் தனது பெயரையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக உள்நாட்டு விசாரணைகளின் போதும், போர்க்குற்றங்களை மறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது சுதந்திரமான நம்பகமான விசாரணைகளுக்கு முக்கியமானதொரு சவாலாகவும் இருக்கப்போகிறது.
சுபத்ரா

ad

ad