புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

எதிர்க்கட்சித் தலைவர் யார்? பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில் அந்தக்
கட்சியைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பது தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு அனுமதிக்க முடியாது என ஜே.வி.பி. மற்றும் ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகள் தெரிவித்தன.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து தனது முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார். இது தொடர்பான விவகாரம் குறித்து ஜனநாயக தேசிய கூட்டணி எம்.பி. அநுர குமார திஸாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அநுர குமார திசாநாயக்க (ஜ.தே.கூ)
நிலையியற் கட்டளையில் எதிர்கட்சித் தலைவர் குறித்து குறிப்பிடப்படாத போதும் கடந்த கால பாராளுமன்ற சம்பிரதாயங்களின் படி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அமிர்தலிங்கம், அநுர பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, காமினி திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, ரத்னசிரி விக்கிரமநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றோர் எதிர்க்கட்சித் தலைவர்களாக பணியாற்றியுள்ளனர். எதிர்க் கட்சிக்கு அதிக நம்பிக்கையுள்ளவர் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப் படுவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் முக்கிய பதவி வகிக்கும் பலர் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர். அரசில் இணைந்துள்ள சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்க முடியாது தமக்குள் பேசி ஒரு குழு அரசுடனும் மற்றொரு குழு எதிர்த்தரப்புடனும் அமர்வது எப்படி ஜனநாயகமாகும்.
விளையாட்டு வீடு போன்று ‘செட்அப்’ செய்து பாராளுமன்றம் ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கை வீழ்ச்சி அடையும் இந்த சம்பிரதாயத்துக்கு இடமளிக்க முடியாது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க
நான் 11 வருடங்களாக எதிர்க்கட்சித் தலைவர்வராக இருந்த போது எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நான் இப்பக்கம் வந்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனக்கு பிரதமர் பதவியையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ஒன்றாக மேற்கொள்ள முடியும். தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினையை எதிர்க்கட்சியுடன் பேசி சபாநாயகர் தீர்வு காண வேண்டும். சம்பிரதாய முறைக்கு மாற்றமாக செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. 19 ஆவது அரசிய லமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படு வதோடு எதிர்க்கட்சித் தலைவருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்க இருக்கிறது.
சுசில் பிரேம் ஜெயந்த் (ஐ.ம.சு.மு)
ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். 2010 ஆம் ஆண்டு இந்த பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட போது ஐ.ம.சு.மு., ஐ.தே.க., த.தே.கூ., ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகளே காணப்பட்டன. ஐ.ம.சு.மு.வினூடாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 கட்சிகள் இருக்கின்றன.
தற்பொழுதுள்ள ஐ.ம.சு.மு.வில் 138 உறுப்பினர்களில் 120 பேர் சுதந்திரக் கட்சியினராகும். இதில் 26 பேர் அமைச்சு பதவி ஏற்றாலும் 112 பேர் இன்னும் எதிர்க் கட்சியிலே இருக்கின்றனர். த.தே.கூ. அரசுடன் இணையவில்லை. 2010 முதல் ஆளும் தரப்பிற்கும் எதிர்த்தரப்பிற்கும் மாறிய எம்.பிகள் குறித்தும் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும்.  தற்பொழுது ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் எம்.பிக்கள் தொகையை கவனத்திற் கொண்டே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.
அநுர பிரியதர்சன யாப்பா (ஐ.ம.சு.மு)
தேசிய நிறைவேற்று சபையில் ஜே.வி.பி., த.தே.கூ. என்பன அங்கம் வகிக்கின்றன. அவர்கள் எப்பக்கம் இருக்கின்றனர் எனவும் கவனிக்க வேண்டும். நாம் சுதந்திரக் கட்சி என்ற வகையில் எதிர்க்கட்சியிலிருந்தே செயற்படுகிறோம்.
தினேஷ் குணவர்தன எம்.பி. (மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர்)
பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு சவால் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற கெளரவத்தை குலைக்க இடமளிக்க முடியாது. சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு உட்பட்டவர்களாகும். தற்பொழுது பாராளுமன்றம் பாரதூரமான அரசியல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. சபாநாயகரின் முடிவிலே பாராளுமன்றத்தின் கெளரவம் தங்கியுள்ளது.
1952 முதல் பலர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்தாலும் ஒருபோதும் அரசியல் பிரச்சினை ஏற்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஐ.தே.க. எம்.பிகள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர். ஐ.தே.க.வாக அவர்கள் அரசில் இணையவில்லை.
ஐ.ம.சு.மு. எம்.பிக்கள் சிலர் அரசாங் கத்துடன் இணைந்ததை எம்மால் ஏற்க முடியாது. பாராளுமன்றம் குறித்த மக்களது நம்பிக்கை வீழ்ச்சியடைந்தால் அவர்கள் வேறு விதமாக செயற்படும் ஆபத்து காணப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் தினமும் பிரச்சினை தலைதூக்கும் அடுத்த பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோருகிறேன்.
விமல் வீரவங்ச (ஐ.ம.சு.மு. எம்.பி)
கடந்த அரசில் 150 ற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஆளும் தரப்பில் இருந்தன. சர்வாதிகார ஆட்சி செய்வதாக அன்றிருந்த எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியது. அன்றிருந்த ஆளும் தரப்பில் இருந்து 50 பேர் எதிர்த்தரப்பிற்கு வந்து எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்திருக்கலாம்.
இம்முறை நடைபெற்ற ஒரே ஒரு தேர்தலில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் தெரிவாகியுள் ளனர். ஆனால் 8 பேர் எதிர்க்கட்சியில் எஞ்சியிருந்தால் அதிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவாகியிருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது. எதிர்க்கட்சி பதவியை அரசாங்கத்திற்கு அடகு வைக்க முடியாது.
அஜித் குமார (சுயேச்சை எம்.பி)
சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவி வகிக்கும் 26 பேரில் அநேகர் புதிய அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றனர். முன்பு மறைந்து ஆடிய ஆட்டத்தை இன்று வெளிப்படையாக ஆடுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு வழங்க வேண்டும்.

ad

ad