நீலகிரி மாவட்டம், ஊட்டி, லவ்டேல் சாலையில், 'ராயல் காஸ்டில்' என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 142 வீடுகள் உள்ளன. இதில், சில குடியிருப்புகளின் உரிமையாளர்கள், நகராட்சிக்கு சொத்துவரி பாக்கி வைத்துள்ளதால் நேற்று நகராட்சி வருவாய் அலுவலர் ஷாஜகான், உதவி வருவாய் அலுவலர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள் சொத்துவரி செலுத்தாதவர்களின் வீடுகளில், 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டினர்.
நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டியில் வீடுகளை வாங்கியுள்ள சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பெரிய செல்வந்தர்கள் பலர், சொத்து வரி பாக்கி வைத்துள்ளனர். இதனால், நகராட்சி 100-சதவீத வரி வசூலை எட்ட முடியாத நிலை ஏற்படுகிறது' என்றனர்.
மேலும், நகராட்சி கமிஷனர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ராயல் காஸ்டில்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர் ஜெயராம், பிரபல நடிகை நயன்தாரா மற்றும் பல தொழிலதிபர்களின் பெயரில் உள்ள வீடுகளுக்கு சொத்து வரி நிலுவையில் உள்ளன.
ஏற்கனவே, சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி, நாங்கள் ஒட்டிய நோட்டீசை, குடியிருப்பு பராமரிப்பாளர்கள் கிழித்து எறிந்ததால், தற்போது, 'ஸ்டென்சில்' கட்டிங் மூலம், 'ஜப்தி நோட்டீஸ்' ஒட்டியுள்ளோம். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், அவர்கள், வரி செலுத்தாவிட்டால், அந்த வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும், மேலும் 'ஜப்தி' நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.