புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2015

கோத்தாவின் முல்லை இராணுவ முகாமை நீதிமன்றில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி . தவராசா

தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.
கடற்படையினரால் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில், கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வேளையில்,
சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழு­ம்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு மேன்­முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவேளையில் மனுதாரர்களின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றில் தனது வாதத்தில்,
அண்மையில் வெளிவந்த செய்தியில் கோத்தாவின் இரகசிய முகாம் ஒன்று உள்ளதாகவும் அந்த முகாமில் 35 குடும்பங்களும் 700 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.
எனவே கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள தமது பிள்ளைகள் -கோத்தாவின் இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா?- அல்லது பத்திரிகைச் செய்தியின்படி கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதில் எது உண்மை,
என்பதனை நீதிமன்றிற்கும் மனுதாரர்களுக்கு விசாரணையை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவினர் தெரியப்படுத்த வேண்டும் என மனுதாரர்களின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து, கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிடிய காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்று பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை பற்றிய முறைப்பாட்டை உடனடியாக செய்யும்படி அறிவுறுத்தியதுடன்,
மேலும் மனுதாரர்களின் முறைப்பாட்டை உடனே பதிவு செய்து கோட்டை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து, இந்த விடயங்களை புலன் விசாரணை செய்யும்படி குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியதுடன்,
கோத்தா இரகசிய முகாம் உண்டா? அப்படியிருந்தால் எங்கு அந்த முகாம் உள்ளது- கடத்தப்பட்ட மாணவர்கள் கோத்தா இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா-அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டார்களா?
என்பவற்றை அறிக்கையாக நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்த நிலையில், ஆட்கொணர்வு மனு மேலதிக விசாரணை பங்குனி மாதம் 2ம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததாவது,
கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோராகிய மனுதாரர்கள் கடந்த தவணை இந்த நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய,
22/02/2015ம் திகதி வெளியான திவயின ஞாயிறு பத்திரிகையில் செய்தியில் தெகிவளையில் கடற்படையினரால் கடத்தப்பட்ட நான்கு மாணவர்களும் கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் களனி ஆற்றிலும் வீசப்பட்டதாகவும் மற்றைய மாணவனான ரஜீவ் நாகநாதன் திருகோணமலைக்கு கடத்திச் செல்லப்பட்டு 2009ஆம் ஆண்டு சித்திரை மாதம் 24ஆம் திகதி கொலை செய்யப்பட்டதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை பற்றிய முறைப்பாட்டை குற்றப் புலனாய்வுப்பிரிவிற்கு செய்துள்ளனர் என்பதுடன்,
கோத்தா இரகசிய முகாம் உண்டா? அப்படியிருந்தால் எங்கு அந்த முகாம் எங்கு உள்ளது- கடத்தப்பட்ட மாணவர்கள் கோத்தா இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா-அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டார்களா?
என்பவற்றை அறிக்கையாக நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி இந்த நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிசாருக்கு கட்டளையிடப்பட்டிருந்தது.
எனவே இந்த விபரங்களைப் பற்றிய அறிக்கையை இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்கின்றார்களா? என்ற விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த பொழுது கடற்படை சார்பில் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி கோத்தபாய என இராணுவ முகாம் ஒன்று முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறுக்கிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, கோத்தபாய என்ற முகாம் எப்பொழுது அமைக்கப்பட்டது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பெயரிலா அமைக்கப்பட்டுள்ளது என வினவியபொழுது,
கடற்படை சார்பில் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததாவது,
முன்னாள் பாதுகாப்புச் செயளாளரின் பெயரில் அமைக்கப்படவில்லையெனவும் கோத்தபாய என்பது முன்னாள் இந்த நாட்டையாண்ட ஒரு அரசனது பெயர் எனவும் அந்தப் அரசனது பெயரில் முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட இந்த முகாம் ‘இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தபொழுது மனுதாரர் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில்,
கோத்தபாய என பெயரில் ஒரு இராணுவ முகாம் உண்டா? என்ற சந்தேகம் இந்த நீதிமன்றிற்கு மட்டுமல்ல இந்த நாட்டின் மக்களுக்கும் இருந்தது.
அரசனின் பெயரா அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பெயரா? என்பதல்ல, கோத்தபாய என்ற பெயரில் ஒரு இராணுவ முகாம் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த முகாமில் கடத்தப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பதனை விசாரணை செய்து,
நீதிமன்றிற்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடும்படி தனது வாதத்தை முன்வைத்ததையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலபிட்டிய காணாமல் போன மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பதனை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யம்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

ad

ad