23 மே, 2015

குழப்பம் ஏற்படுத்தியவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்கள் என்கிறார் மனுஷ எம்.பி


பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி யாழ். பிரதேசத்தில் குழப்பம் ஏற்படுத்தி கைதானவர்களில் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த பிரச்சினையை பயன்படுத்தி நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என அரசாங்கத்தை கோருவதாக ஐ.ம.சு.மு. எம்.பி. மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அபயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
மாணவியின் கொலை தொடர்பான சம்பவத்தை நாம் வண்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடக்க இடமளிக்கக் கூடாது.
பாதுகாப்பு குறித்த கவனயீனத்தினாலே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து படையினர் மற்றும் நீதிமன்றம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த காலத்தில் இடம்பெற இனவாத பிரச்சினைகளுக்கு இவ்வாறான சம்பவங்களே காரணமாக அமைந்தன.
அரசாங்கத்தின் நெகிழ்வுப் போக்கு காரணமாக ஈழகனவுடன் செயற்படுவோர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி யிருக்கலாம்.
சுவிஸ் ரஞ்சனை இதனுடன் தொடர்புபடுத்த முயல்கின்றனர். அவர் சுவிசிலே இருக்கிறார். இதனை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ச மீது சேறுபூச முயல்கின்றனர்.