புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2015

வவுனியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் 10 லட்சம் ரூபா செலுத்தப்பட்டு பாதுகாப்பாக மீட்பு


வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்தில் பாலர் பாடசாலை சென்ற 5 வயதுடைய சிறுவன் கடத்தப்பட்டு 10 லட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
இந்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாகவும் வவுனியா பொலிஸாருக்கு அதேதினம் இரவு 9.30 மணிக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடத்தல் குழுவை தேடி விஷேட விசாரணை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
வவுனியா நகரில் பிரபல வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் தனது வர்த்தக நிலையத்திலிருந்து வேப்பங்குளத்திலுள்ள தனது வீட்டுக்கு மதிய நேர போசனத்துக்காக சென்றுள்ளார்.
இதன் போது அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அடையாளம் தெரியாத எயர் டெல் இலக்கம் ஒன்றிலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.
மறு முனையில் அழைத்த நபர் பாலர் பாடசாலைக்கு சென்ற அவரது மகனான 5 வயது சிறுவனை தாம் கடத்தி வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டுமானல் 30 லட்சம் ரூபாவை கப்பமாக செலுத்த வேண்டும் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
பொலிஸாரை நாடினால் விடயம் விபரீதமாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந் நிலையில் கப்பம் கோரிய கடத்தல்காரர்களுடன் தொடர்ந்து பேரம் பேசிய வர்த்தகர் கப்பத் தொகையை 30 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபா வரை குறைத்துள்ளார்.
இதனையடுத்து 10 லட்சம் ரூபாவை கப்பமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ள வர்த்தகர் அது தொடர்பில் எவரிடமும் கூறாது கப்பக்காரர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு இடமாக சென்றுள்ளார்.
நகரின் பல்வேறு இடங்களுக்கும் வர்த்தகரை பணத்துடன் அலைய வைத்த கடத்தல்காரர்கள் இறுதியில் வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் இடமொன்றுக்கு அருகே வருமாறு அழைத்துள்ளனர்.
அந்த குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் பணத்தை வீசி விட்டு செல்லுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து 10 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட கடத்தல்காரர்கள் பட்டானிச் சூர் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகே சிறுவனை விடுவித்து சென்றுள்ளனர்.
தனது மகன் மீட்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வவுனியா பொலிஸ் நிலையம் சென்ற குறித்த வர்த்தகர் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பட்டை தொடர்ந்து வர்த்தகரை கடத்தல்காரர்கள் அழைத்த இடங்கள், சிறுவனை விடுவித்த இடம் என அனைத்து இடங்களையும் பரிசோதித்துள்ள வவுனியா பொலிஸ் நிலையத்தின் தடயவியல் பிரிவினர் சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோரின் கீழ் அறிவியல் தடயங்களைப் பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை வரை இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைதாகியிருக்கவில்லை.

ad

ad