புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஜூன், 2015

அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் சரண் அடைய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுகோயில் பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.ராஜா மூன்று வாரத்தில் சரண் அடைய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கோயில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றனர். 

இதனிடையே நாகமுத்து தற்கொலை வழக்கில், ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீதும் கூடுதலாக வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு பெரியகுளம் கீழ் நீதிமன்றத்தில் அண்மையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வன்கொடுமை தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால், அதற்காக கீழ் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யும் அதே நாளில் மனுவை பரசீலிக்க உத்தரவிடக்கோரி ஓ.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்கொலை செய்த பூசாரியின் தந்தை சுப்புராஜ் தரப்பில் ஓ.ராஜாவின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஓ.ராஜா மூன்று வாரத்தில் கீழ் நீதிமன்றத்தில் சரண் அடைய உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுந்தரேஷ், மூன்று வாரத்தில் கீழ் நீதிமன்றத்தில் ஓ.ராஜா சரண் அடைய வேண்டும் எனவும், சரண் அடையும் அதே நாளில் ஜாமீன் மனுவை தகுதியின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.