புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

வைகோ மீது 12 பிரிவுகளில் வழக்கு: லிங்கப்பட்டியில் 3-வது நாளாக பதற்றம்


குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் களப்பலியானார். இதைத் தொடர்ந்து  தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான  நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள், வைகோவின் சகோதரரும்  பஞ்சாயத்து தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்று  டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம் 2வது நாளாக நேற்றும் நீடித்தது. டாஸ்மாக் கடை அருகே யாரும் செல்லாதவாறு அதை சுற்றி பேரிகார்டுகள் வைத்து போலீசார்  பாதுகாப்பு அரண் அமைத்து நின்றனர். இந்நிலையில், மதியம் 3 மணிக்கு கலிங்கப்பட்டி வந்த வைகோ, பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்கள்  மத்தியில் பேசினார். அப்போது பக்கத்து கிராமமான கணபதிபட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் (40) என்பவர் ராமராஜபுரம் செல்லும் சாலையில் உள்ள  செல்போன் டவரில் திடீரென ஏற தொடங்கினார். அவரை தடுப்பதற்காக போலீசார் அங்கு ஓடியதால், திரண்டிருந்த கும்பல் மதுக்கடைக்குள்  நுழைந்தது. மதுபான பெட்டிகளை ரோட்டில் எடுத்து போட்டு உடைத்து நொறுக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர். 

கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கூட்டத்திற்குள் புகுந்து தடியடி நடத்தினர். தடியடியில் நெல்லை மாவட்ட  மதிமுக செயலாளர் சரவணன், வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம், குருவிகுளம் ஒன்றிய  செயலாளர் ராஜாராம் பாண்டியன், மாநகர மாவட்ட செயலாளர் பெருமாள், ரவிசங்கர், மாரிச்சாமி, பலவேச பாண்டியன் ஆகிய 8 பேர் படுகாயம்  அடைந்தனர். இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், சுந்தரநேசன், சிறப்பு எஸ்ஐ பால்துரை, ஏடிஎஸ்பியின் பாதுகாவலர் சங்கரநாராயணசாமி, போலீஸ்காரர்  ராஜதுரை, பெண் போலீசார் திருமலைசெல்வி, சுப்புலட்சுமி, பொன்மணி சித்ரா, அமராவதி, முத்துசெல்வி, லூர்துமேரி, பூமாரி ஆகிய 12 பேர் படுகாயம்  அடைந்தனர்.

போலீசார் தடியடி நடத்தி கொண்டிருக்கும்போதே வேனில் இருந்து இறங்கிய வைகோ என்னை முதலில் சுடுங்கள் எனக்கூறி சாலையில் நடந்து  சென்றார். அவரை தடுத்து நிறுத்தி அழைத்து வந்தனர். தொடர்ந்து வைகோ தலைமையில் பொதுமக்கள் கலிங்கப்பட்டி - சங்கரன்கோவில் சாலையில்  அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையறிந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கலிங்கப்பட்டி வந்து வைகோவுடன் போராட்டத்தில்  கலந்து கொண்டார். இதையடுத்து நிலைமை மாசமானதால் நெல்லை சரக டிஐஜி முருகன், எஸ்.பி. விக்ரமன், ஏஎஸ்பி அரவிந்தன், டி.எஸ்.பி.  லட்சுமணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். 

நெல்லை சரக டிஐஜி முருகன் வைகோ மற்றும் பொதுமக்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வைகோவின் கோரிக்கைகளை  கேட்டுக்கொண்டார். இதையடுத்து சுமூக தீர்வு ஏற்பட்டதால், வைகோ பொதுமக்களை மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து  அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் வைகோ, அவரது தம்பி ரவிச்சந்திரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம்,  தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், நெல்லை மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்ட 52 பேர் மீது சங்கரன்கோவில்  தாசில்தார் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் அழகு கண்ணன் வழக்குப்பதிவு செய்தார்.

பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், போலீஸ் மீது தாக்குதல், கொலை முயற்சி வழக்கு,  பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துதல், சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பொதுமக்களை திரட்டுதல், கலவரம்  உருவாக்குதல் உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டம் 307 (கொலை முயற்சி), 3 (1)-149 ,147,148, 153, 294/பி, 188,332,341, 353, 447, 435 ஆகிய 12  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் வைகோ கைது செய்யப்படலாம். இதனால் கலிங்கபட்டியில் பதற்றம்  நீடிக்கிறது. வைகோ வீட்டு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ad

ad