புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2015

மாணவர்களே, பெண்களே மதுக்கடைகளை அடித்து நொறுக்குங்கள்: வைகோ அறைகூவல்

 "மாணவர்களும், பெண்களும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கி இழுத்து மூட வேண்டும். அதற்காக இந்த அரசு அவர்கள் மீது எத்தனை வழக்கு
போட்டாலும் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நேரில் சந்தித்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராடியதற்கு பாராட்டு தெரிவித்தார்.

அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நல்லகண்ணு கூறும்போது, ''கலிங்கப்பட்டியில் மதுக்கடைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. அது திட்டமிட்ட சதி. கலிங்கப்பட்டியில் போராட்டம் நடத்திய வைகோ உள்ளிட்ட பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள கொலை முயற்சி உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.

அரசுக்கு கிடைக்கும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக, மதுக்கடைகளை மூடக்கூடாது என்பதில் அரசு நிர்வாகம் பிடிவாதம் காட்டுகிறது. ஏழை, எளிய மக்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைக்கு காரணமான மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதனை செயல்படுத்தும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

அவரை தொடர்ந்து வைகோ கூறும்போது, ''இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி அடைந்து உள்ளது. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது மகன் புகையிலை கம்பெனி வைத்திருப்பது போல தகவல் தெரிவித்து உள்ளார். எனது மகன் எந்த புகையிலை நிறுவனத்திலும் பங்குதாரர் இல்லை. அவர் தென்காசி பகுதிக்கு சிகரெட் விற்பனை செய்யும் விநியோகஸ்தராக மட்டுமே உள்ளார். அதை நான் மறுக்கவில்லை. மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்பது போன்று புகையிலை பொருட்களையும் விற்பனை செய்வதை தடை செய்ய அரசு முன்வந்தால் அதனையும் நாங்கள் வரவேற்போம்.

மதுவால் பெரும் சமூக சீரழிவு ஏற்படுகிறது. மது குடித்துவிட்டு கொலை, கொள்ளை பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். புகையிலையை பொறுத்தவரை குடிப்பவனுக்கு மட்டுமே கேடு விளைவிக்கிறதே தவிர சமூக சீர்கேடுகளுக்கு காரணமாக இருப்பது இல்லை. இருந்தாலும், அதனையும் அரசு தடை செய்தால் முழு மனதுடன் வரவேற்போம். மது அரக்கனின் பிடியில் சிக்கி சீரழியும் கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்க, லட்சக்கணக்கில் மாணவர்களும், பெண்களும் திரண்டு வர வேண்டும்.

மாணவர்களும், பெண்களும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கி இழுத்து மூட வேண்டும். அதற்காக இந்த அரசு அவர்கள் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்

ad

ad