பாராளுமன்ற விவாதங்கள் இன்று வியாழக்கிழமை முதல் தேசிய ரூபவாஹினி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக நேற்றைய தினம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சில காலம் பாராளுமன்ற அமர்வுகள் இணையத்தளம் ஊடாக 'பியோ' தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பப்பட்டிருந்தது. எம்.பிக்கள் சிலரது ஆட்சேபனையை அடுத்து கடந்த சில மாதங்களாகநேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்பிக்கள் பலரது வேண்டுகோளையடுத்து பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இன்று வியாழக்கிழமை முதல் பாராளுமன்றத்தின் முதல் இரண்டு மணித்தியால அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இதற்கமைய இன்று பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரையான சபை நடவடிக்கைகளை ரூபவாஹினி தொலைக்காட்சி ஊடாக நேரடியாக பார்க்க முடியும்.
வெள்ளிக்கிழமைகளில் 1.30 முதல் 3.30 வரையிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நாடாளுமன்ற ஆலோசனை செயற்குழுக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.