புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2015

கோரிக்கைகளை நிராகரித்தால் ஆதரவு வாபஸ்? தமிழ் தேசியக் கூட்டமைப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் வெளியிலிருந்து நிபந்தனைகளின்றி வழங்கிவரும் ஆதரவை நீக்குவது குறித்து தீர்மானிக்க வேண்டி ஏற்படும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக்கான மூன்றாவது நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த வருடம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்கு தமிழ் மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். புதிய அரசாங்கத்தின் மீது தமிழர்கள் பாரிய நம்பிக்கை வைத்திருந்தனர். எனினும் அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நூறுநாள் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை செலுத்தியிருந்தது. குறிப்பாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது உள்ளிட்ட விடயங்களில் சாதகமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருந்த போதும் தற்போது ஆட்சியிலிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அதே அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்பட்டு வருகிறது. 20 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றவர். புனர்வாழ்வு வழங்கப்படவிருப்பவர்களுக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கில் அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் புனர்வாழ்வின் பின்னரும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. எனவே அவர்களுக்கு எதிரான சகல வழக்குகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களுக்குப் புனர்வாழ்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வு வழங்குவதை நாம் வரவேற்கின்ற போதும் அவர்கள் சுதந்திரமாக விடுதலை செய்யப்பட்டு தமது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கான நிலைமையை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதனையே அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இதுபோன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களுக்கான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் தம்மை ஏமாற்றியதாக தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் வெளியிலிருந்து வழங்கிவரும் நிபந்தனையற்ற ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும். என்றார்.
2ம் இணைப்பு
வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளில் முதலில் காட்டிய அக்கறை இன்று இல்லை! - அரசு மீது செல்வம் எம்.பி. குற்றச்சாட்டு
வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் 100 நாட்களில் காட்டிய அக்கறையை அதே அரசு தற்போது காட்டவில்லை. இது மனவருத்தமளிக்கின்றது'' என்று சபையில் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,  இந்த நிலை நீடித்தால் வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டியேற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
காணி விடுவிப்புத் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்ட போதும், எமது மக்கள் எதிர்ப்பார்த்தைப்போன்று காணி விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. இதன்போது இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,
எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள வயல், பாடசாலைக் காணிகளை விடுவித்தல், அடக்குமுறையிலிருந்து விடுபடல் என்பதற்காகவே வாக்களித்து ஆட்சிமாற்றத்திற்கு வழிசெய்தனர்.
ஆனால், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் 100 நாட்களில் அரசு காட்டிய அக்கறை இப்போது இல்லை. 100 நாட்களில் சம்பூர், யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், எமது மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த விடயத்தில் அரசு அக்கறையின்றி உள்ளமை எமக்கு வருத்தமளிக்கிறது.
பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்
மழையால் எமது மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு சமைத்த உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், குறிப்பிட்ட பாடசாலைகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உணவுப்பொருட்களை வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இருக்க முடியாத மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் இருக்கின்றனர். எனவே, இவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
ஓலைக் கொட்டிலில் கல்வி கற்கும் நிலை
எமது பிரதேசத்தில் மாணவர்கள் ஓலைக் கொட்டிலில் இருந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. மர நிழலில் இருந்தும் கல்வி கற்கின்றனர். பாடசாலைகளுக்கு முன்னால்  இராணுவ முகாம் இருக்கின்றது. இதனால் இளம் பிள்ளைகள் அந்த வீதிகளில் செல்லமுடியாத நிலை உள்ளது. இந்த நிலைமைகளை மாற்றவேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறேன். கல்வி இராஜாங்க அமைச்சராகத் தமிழர் ஒருவர் இருக்கின்றார். அவர் ஊடாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அரசுக்கான ஆதரவு பரிசீலனை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசுக்கு  வெளியிலிருந்து ஆதரவளித்து வருகின்றது. எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அவர்கள் சுதந்திரமாக  வாழவேண்டும். இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுத்தப்படாவிட்டால், வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவளிக்கும் எமது நிலைப்பாட்டைப் பரிசீலனை செய்யவேண்டி ஏற்படும்" - என்றார்.

ad

ad