புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2015

புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று /வீராமலை மைந்தன்

புங்குடுதீவின் வரலாறு காணாத மனித அவலம் ஒன்று வல்லன் வீராமலை உள்ளடக்கிய கிழக்கூரிற்குள் உருவாகி வருகின்றது.
பெரு ஊழி வெள்ளம் வரப்போவது அறிந்தும் இருள் நிறைந்த அறியாமைகளுடன் கிராமத்துத் தெய்வங்களின் அருள் நிறைந்து இருந்த எளிமையான கோவில்களை வெறும் அலங்காரக் கூடாரமாக்கும் பணிகளுக்கு என்னும் என்னும் கோடிகளை இறைத்து கொட்ட பெரும் முதலாளிகளும் புலம்பெயர் பாவப்பட்ட மக்களும் தயாராகி வருவதாய் கதைகள் உலாவுகின்றன.
இந்த பெருமுதலாளிகளுக்கும் புலம்பெயர் அருமை உறவுகளுக்கும் உள்ளிருந்து ஓர் குரலாய் ஒரு வேண்டுகாள்.
கிழக்கூரிற்குள் நடமாடும் கைவிட்டெண்ணக்கூடிய சமூக விரோதிகளை யாரும் கண்டும் காணாமல் இருந்ததன் பின்விளைவுதான் இன்று சிதைந்து போய்கிடக்கும் ஒவ்வொரு வீடுகளும், மற்றும்
கோழி, சேவல், ஆடு , மாடு வளர்க்கக் கூடிப் பயந்தபடி வாழும் பாவப்பட்ட மனிதர்களும்.
இங்கு வறுமை இயற்கை எமக்கு வரமாய்த்தரவில்லை.அது இந்த சிறு எண்ணிக்கையிலான சமூக விரோதிகள் தந்து இருக்கும் பரிசு. ஆனாலும்,
உங்களைப்போலவே நானும் கூறுகின்றேன் யார் என்ன பாடு பட்டாலும் எனக்கும் கவலை இல்லை.
ஆனாலும் சிறுவயதில் இருந்து "இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்" என்று முழங்கி முழங்கி படித்து விட்டு, எம் கண்முன்னே நாளைக்கு தறுதலைகளாக மாறப்போகின்ற தங்கள் வாழ்வியல் முறைப்பற்றி எதுவுமே அறியாமல் வளர்ந்துவரும் சிறார்களை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
தடைகள் அற்றப் பாதைகளை முறைப்படி அமைத்துக் கொடுக்கவேண்டிய பெரியவர்கள் கண்களை மூடிய படி பயணிக்கும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் என்ன?
கிழக்கூரிற்குள் இப்பொழுது ஏராளமான சின்னஞ் சிறு சிறார்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் சூழலில் இருந்து பல விடயங்களை கற்றபடி உள்ளனர். அன்றாடம் சிறை , பொலிஸ் போய் வரும் நபர்களை பார்த்து பார்த்து வளர்கின்றனர். என்ன செய்தாலும் 4 நாட்களில் வீடு வந்து விடலாம் என்ற மனனிலை அவர்களுக்குள் வளர்ந்து வருகின்றது. இப்போது இருக்கும் 5- 6 நபர்களால் கிழக்கூரின் நிலைமை இப்படி எனில் பின்னாளில் 50 பேரை எவ்வாறு இந்த சமூகம் சமாளிக்கப் போகின்றது?
முன்னம் ஆளில்லா வீடுகள்தான் கொள்ளை போயின. இப்பொழுது ஆட்கள் வசிக்கும் வீடுகளை நோக்கி களவுகள் அதிகரித்து வருகின்றன. ஆட்டைக் கடித்து, மாட்டைக்கடித்து நாளை கருவறைச் சாமியையே தின்னப்போகும் சமுதாயம் உருவாகப்போகின்றது.
கிழக்கூருக்குள் இருக்கும் சமூகத்திற்கு ஒரு பிள்ளை கூடப்படித்து விட்டால் பிடிக்காது. படித்த பிள்ளைக்குரிய நாகரிகமான செயற்பாடு பிடிக்காது. நாம் உண்டு, எம் பாடு என்டு இருந்தால் பிடிக்காது. ஒருத்தனுக்கு இரண்டு பெரு நண்டு கிடைத்து விட்டால் பிடிக்காது என்பது போக, அவனின் வலையே நாளை கடலில் போட்ட இடத்தில் இருக்காது. யாழ் கொட்டடியில் இருந்து இங்கு வாழவந்த ஒரு பெண், வித்தியா கொலையாளிகளில் ஒருவனின் மனைவி, ‪#‎தேசிக்காய்‬உருட்டுவன் என்டு சொல்லி வீராமலை மக்களை பயமுத்தி வைத்து இருந்தார்.
என்னதான் கண்ணகியும் , பிள்ளையாரும், நாகேஸ்வரனும், வயல்வெளி முருகனும், ஐயனாரும் , துர்க்கை அம்மனும் யாமிருக்கப் பயமேன் என்டு கூறியபடி கோடிகளில் வீடு கட்டி சுற்றி வீற்று இருந்தாலும் வெறும் 5 ரூபா தேசிக்காயிடம் எல்லாம் தோற்றுவிட்டது.
இது எல்லாத்திற்கும் கல்வியில் ஏற்பட்ட வெற்றிடமே காரணம்.
மலேஷியாவில் அரசாங்க பள்ளிகள் இருந்தாலும் சீனர்களின் பள்ளிகளில் இடம் பிடிக்க பெற்றோர் பாடாய் படுவர். அந்த பள்ளிகளின் கல்வித்தரம் அத்தகையது. அந்த பாடசாலைகளில் இடம் கிடைத்து விட்டால் பிள்ளையின் எதிர்காலம் சிறப்பானது என்பதற்கு இங்கு 100 வீதம் உத்தரவாதம் உண்டு.
அரச இயந்திரம் அத்தகைய பொறிமுறை ஒன்றை நிச்சயமாக உருவாக்கித்தரப்போவதில்லை. நிச்சயமாக அது புலம் பெயர்ந்த மற்றும் பெருவணிக சமுதாயத்தால் மாத்திரமே முடியும்.
உயர்தரத்தில் விஞ்ஞானபிரிவை மகாவித்தியாலயத்தில் திறக்கச் சொன்னால் அரச இயந்திரம் அதற்கு தகுதியான மாணவர்களை உருவாக்கித்தாருங்கள் என்கிறது. அப்போ அந்தப்பணியை நாங்கள்தான் செய்ய வேண்டும். ஆனால் வேறு எதையோ எல்லாம் செய்கின்றோம்.
ஆசிரியர்கள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் சமூகம் வெறும் 3000 ரூபாய் வேதனம் பெறுவதற்கு ஒரு தொண்டர் ஆசிரியர் படும் பாட்டையும் அதற்காக அதிபர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தையும் நாம் யாரும் கணக்கெடுப்பதில்லை.
ஒரு கோயிலை ஒரு மடத்தை காசு இருந்தால் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கலாம், ஆனால் ஒரு மாணவனை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் கண்ணும் கருத்துமான உழைப்பு தேவை. அதனால தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஒரு நல்ல சமுதாயத்தை நாம் இழந்து வருகின்றோம்.

ஆதலால் மாணவர்களுக்கான நலம் காக்க புலம் பெயர் ஒன்றியங்களும் பெருமக்களும் கைகோர்க்க முன்வரவேண்டும்.
மனமிருந்தால் இடமுண்டு. கல்வி ஒன்றே கண் திறக்கும்.

ad

ad