புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2015

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் விடுவிக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற நேரிடும்: யோகேஸ்வரன்


நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால்
கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றில் இருந்து வெளியேறவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவரது அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
யாரும் இறந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்கமுடியாது. அது ஒவ்வொரு மனிதனிதமும் தலையாய கடமையாகும். இலங்கையில் நடைபெற்றது ஒரு போர் அல்ல. அது ஒரு கிளர்ச்சி. ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை போராக கருதுகின்றது.
போர் என்பது ஒரு நாட்டின் மீது மேற்கொள்வது. இதுஅவ்வாறு அல்ல ஒரு நாட்டிற்குள் நடைபெற்ற ஒரு கிளர்ச்சியாகும்.
அந்த கிளர்ச்சியின் போது ஒரு இனத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அந்த இனம் அதிகமான முறையில் கொல்லப்பட்டுள்ளது. தமிழினம் தனது உரிமைக்காக போராடி தனது உயிர்களை தியாகம் செய்துள்ளது. அந்த தியாகத்தினை நினைவுகூரவேண்டிய கடமை இந்த நாட்டின் தேசிய இனம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு உண்டு.
கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலையின்போது இறந்த உடல்களை யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பரிமாறிக்கொண்டார்கள். அது மனிதாபிமான சட்டமாகும். இறந்த உடல்கள் கௌரவமாக மதிக்கப்படவேண்டும். இந்த நாட்டில் முன்னர் அதனை நினைவுபடுத்தியுள்ளார்கள்.
தமிழர்களின் ஆட்சியை குலைத்து பெரும்போரை முன்னெடுத்துச்சென்ற துட்டகைமுனு எல்லாளனை வென்ற பின்னர் தன்னோடு போர்புரிந்த எல்லாளனுக்கு சமாதி வைத்தது மட்டுமன்றி அந்த இடத்துக்கு செல்பவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த தமிழனின் வீரத்தினை அந்த துட்டகைமுனு மதித்துள்ளான். ஆனால் தற்போதுள்ள அரசாங்கமும் அவர்களுக்கு பின்னால் உள்ளவர்களும் அந்த மரியாதையை செலுத்துவதில்லை.
மாவீரர் தினம் என்பது இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது, இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அது எந்தவகையிலும் இன்னொரு போராட்டத்தினை தூண்டும் செயற்பாடு அல்ல. இவ்வாறான எண்ணப்பாங்கில் இருந்து அவர்கள் விடுதலையாகவேண்டும். அவ்வாறான கருத்தினை எக்காலத்திலும் ஏற்படுத்தக்கூடாது.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் இந்த தியாகங்களை செய்துள்ளார்கள் என்று உணர்ந்து அவர்களை மதிக்க முன்வரவேண்டும்.
இந்தியாவில் இந்திரகாந்தியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியின்போது பொற்கோவில் பிரச்சினை ஏற்பட்டது. அந்தவேளையில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. அதன்போது பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய இராணுவம் இதன்போது வெற்றிபெற்று அதனை வெற்றிநாளாக கொண்டாட அன்றைய பிரதமர் இந்திராகாந்தியிடம் அனுமதிகோரியபோது துரதிர்ஸ்டவசமாக எமது நாட்டு மக்களை நாங்களே கொன்றுவிட்டோம். இதுவெற்றிநாள் அல்ல, வேதனையான நாள். பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் வெற்றிகொள்ளவேண்டும். அதற்கான வழிகளை பார்க்குமாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கனின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஆபிரகாம் லிங்கன் தனது இராணுவ படையிடம் இந்த யுத்ததின்போது எமது நாட்டு மக்களை கொன்றுவிடாதீர்கள் என தெரிவித்திருந்தார்.
அவ்வாறான ஆட்சியாளர்கள் வேண்டும். ஆனால் இன்று இறந்த உயிர்களைக் கூட சுதந்திரமாக நினைவுகூரமுடியாத நிலை உருவாகிவருவது வேதனைக்குரிய விடயமாகும். இதனை தற்போதைய ஆட்சியாளர்களும் முன்னாள் ஆட்சியாளர்களும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதையிட்டு வேதனையடைகின்றோம்.
எமது உறவுகள் செய்த தியாகத்தினை நாங்கள் எக்காரணம்கொண்டும் மறக்கமாட்டோம். நாங்கள் இந்த நிகழ்வினை தொடர்ந்து செய்வோம். இதை யாரும் தடுக்க முடியாது. இந்த நல்ல நாளில் அரசாங்கத்திற்கு நாங்கள் ஒன்றை சொல்ல விரும்புகின்றோம்.
எமது இனம் இந்த மண்ணில் சுதந்திரமாகவும் சகல உரிமைகளையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகவே இத்தனை உறவுகளும் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். பல உறவுகள் இன்றுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் மகிந்த அரசாங்கம் மிகக் கொடுமையான ஆட்சியை செய்திருந்தாலும் 2009ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட போராளிகளில் 11900 கைதிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்திருக்கின்றது.
ஆனால் நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்ற கைதிகள் பலவருடங்களாக பல துன்பங்களை அனுபவித்திருந்தும் இதுவரை அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படாததையிட்டு மிக வேதனையடைகின்றோம்.
கிட்டத்தட்ட 204 கைதிகள் அரசியல் கைதிகளாக இருப்பதாக நீதியமைச்சு கூறியிருக்கின்றது. இவர்களில் 56கைதிகள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றனர். 124பேருக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறப்படுகின்றது.
24பேர் இதுவரை குற்றப்பத்திரம் எதுவுமில்லாது சிறையில் துன்பங்களை அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இவர்களை விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலில்லை என்றும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இப்படியானால் ஏன் அவர்களை அடைத்து வைத்திருக்கின்றீர்கள்?  உங்களுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளுக்காக எங்கள் உறவுகளை இன்னும் அடைத்து வைத்திருக்கின்றீர்களா?
நாங்கள் அரசியல் கைதிகள் விடயமாக கதைத்தபோது 59பேரை மாத்திரமே பிணையிலோ அல்லது புனர்வாழ்வளித்தோ விடுதலை செய்யலாம் என்று கூறியிருக்கின்றார்கள். 39பேரை இதுவரை பிணையில் விடுதலை செய்திருக்கின்றார்கள்.
மிகுதி 20கைதிகளையா புனர்வாழ்வு என்ற பெயரில் விடுதலை செய்யப்போகின்றீர்கள்? ஏன் இந்த அநியாயம்? இதுதானா நல்லாட்சியின் மகத்துவம்? தமிழர்கள் மூலம் ஆட்சியை பிடித்துவிட்டு அவர்கள் கையைக்கொண்டு அவர்களின் கண்ணையே குத்துவதற்கு சமனாகும்.
அரசாங்கம் சிந்திக்க வேண்டும். நீங்கள் மனிதாபிமானத்துடன் நீதியான முறையிலும் நாட்டை வழிநடத்துவீர்கள் என்பதற்காகவே தமிழர்கள் தங்கள் பொன்னான வாக்குகளை உங்களுக்கு தந்தார்கள். அதை உணர்ந்து சிறைகளில் துன்பங்களை அனுபவித்துவரும் எங்கள் உறவுகளை எதிர்காலத்தில்கூட எதுவித கெடுபிடிகளும் ஏற்படாதவாறு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.
அதன் மூலமே இந்நாட்டில் நீதியான முறையில் ஆட்சி நடத்துகின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு காட்ட முடியும். நல்லாட்சி என்று கூறி ஏமாற்றி வருகின்ற இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் கூறுகின்றார்கள்.
நாங்கள் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்தின் ஆட்சியாளர்களாக அமர்ந்திருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் குழுத்தலைவர் பதவியை பெற்றிருக்கின்றோம். நீங்கள் இதற்கு இணங்காமல் செயற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் விருப்பத்தின்படி எதிர்க்கட்சியாக இந்த அரசாங்கம் எமக்கு அநீதி இழைத்துவருகின்றது என்பதை காட்டும் வகையில் வெளியேறவேண்டிய சூழல் உருவாகும்.
இந்த மாவீரர் நன்னாளில் எமது உறவுகளின் தியாகங்களை நாங்கள் மதிக்கின்றோம். நாங்கள் அவ்வாறு செயற்படுவதற்கு இடமளியுங்கள். சிறைகளில் துன்பங்களை அனுபவித்துவருகின்ற எமது உறவுகளை உடன் விடுதலை செய்யுங்கள்.
இல்லாதுவிட்டால் நாங்கள் உங்களுக்கு வழங்கிவரும் அத்தனை ஆதரவுகளையும் உடன் விலக்கிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் உங்களுக்கு ஆதரவு வழங்குவது பற்றி நாங்கள் சிந்திக்கவேண்டிய சூழல் உருவாகும்.
இதேவேளை அரசாங்கத்ததிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியமையானது வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad