தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் உள்ளீடுகள் இருப்பதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தினரை குறைகூற முடியாதென்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானம் எடுக்கவேண்டுமென அரசாங்க தரப்பு தெரிவித்துள்ள நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் இதுகுறித்து அசமந்த போக்கை கடைப்பிடித்து வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் அண்மைய காலமாக மேலெழுந்துள்ளன. நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சரும் சட்டமா அதிபர் திணைக்களத்திடமே அரசியல் கைதிகள் குறித்த தீர்மானம் இருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து முதலமைச்சரிடம் இன்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இல்லையெனவும், அதனாலேயே தாமதமாகுவதாகவும் குறிப்பிடும் நீதி அமைச்சரின் கருத்தினை தான் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கவேண்டிய விடயங்களையே சட்டமா அதிபர் திணைக்களம் செய்யும்.
எந்தவித சாட்சிகளும் இன்றி நபர்களை கைது செய்து, சந்தேகத்தின் பேரில் பல வருடகாலம் வைத்துக் கொண்டிருந்துவிட்டு, வழக்குத்தாக்கல் செய்யாமல் தற்போது சட்டமா அதிபர்தான் அதைப்பற்றி கவனிக்க வேண்டுமென்றால் அது எப்படி சாத்தியமாகும்?அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் இல்லாமையே, அவர்களது விடுதலை தாமதமாவதற்கு காரணமாகும். அதனால்தான் அரசாங்கம் சாட்சியத்தினை பெற முயற்சிக்கின்றது.
முன்பு ஜே.வி.பி காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 10 ஆயிரம் பேரை விடுவித்ததால் எந்தவித வன்முறைகளும் ஏற்படவில்லையென்றால், இந்த 400 பேரை விடுதலை செய்வதனாலேயா வன்முறை ஏற்பட்டு விடப்போகின்றது.
எனவே, அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய தீர்மானத்தை, சட்டமா அதிபர் எடுக்கவேண்டுமென கூறிய நீதியமைச்சரின் கருத்தை மறுக்கின்றேன். அரசியல் ரீதியாக ஜனாதிபதியும், பிரதமரும் தமது அமைச்சர்களுடன் இணைந்து ஒரு சுமூகமான முடிவுக்கு வரவேண்டும். அந்த சுமூகமான முடிவு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல், பொது மன்னிப்பில் விட வேண்டும் என்பதாக அமைய வேண்டும்.