புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2015

திருவொற்றியூருக்கு தேவை... உடனடித் தீர்வு

யாரும் நுழைய முடியாத கட்டுக் கோப்பான எஃகு கோட்டை எங்கள் தேசம் என்று கூறுவதைப் போல சென்னை வெள்ளத்தில்
"அரசியல் வாதிகள்" நுழைய முடியாத ஊராக சில இடங்கள் கண்ணீரை வரவழைக்கிறது. "சகதி வெள்ளத்தில படகு விட முடியுமா, தம்பி ?" என்ற கேள்வியுடன் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது இந்த பகுதி.
மூன்றாயிரம் ஆண்டுகளைக் கடந்த அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோயில் (வடிவுடையம்மன் கோயில் என்று அழைக்கப் படுவது இந்த ஆலயம்தான்.. இதற்கடுத்துதான் கொடியுடையம்மன், திருவுடையம்மன் என்று மூன்று சக்தி ஆலயங்கள் இங்கே பிரசித்தமான அடையாளம்), மத்திய அரசின் பதினைந்து தொழிற்சாலை, எம்.ஆர்.எஃப். உள்ளிட்ட 100- ஐ க் கடந்த தனியார் தொழிற்சாலைகள் இதே பகுதியில்தான் இருக்கின்றன.
தர்மமிகு வடசென்னை என்று 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார் முதல் அறுபத்து மூன்று நாய்ன்மார்கள், நால்வர், சித்தர்கள் காலடிபட்ட இடமும், பாடல் தளமும் இதுதான். பெருமக்கள் பலரின் ஜீவசமாதி இருக்கும் இடமும் இங்கேதான்.. வெள்ள பாதிப்பில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பும் மக்கள் இப்போது இருப்பதும் இங்கேதான்..
சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர், கிளாஸ் பேக்டரி, பாலகிருஷ்ணாநகர், ராஜாஜி நகர், சத்திய மூர்த்தி நகர், ராமகிருஷ்ணா நகர் என்று சுற்றிச் சுற்றி திருவொற்றியூர் தேரடியை அடுத்த மார்க்கெட் மற்றும் அஜாக்ஸ் டெப்போ பின்புறம் வருகிற இந்த பகுதிகளில்தான் அப்படி சிக்கியோரின் அபயக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது..
உணவோ, மருத்துவ வசதியோ, உயிரோடுதான் இருக்கிறார்களா இந்தப் பகுதி வாசிகள் என்று கணக்கில் வைத்து சொல்வதற்கோ ஒரு அதிகார சக்தியும் இங்கே எட்டிப் பார்க்க வில்லை என்பதே இங்கு வாழ்வோரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
திருவொற்றியூரைப் பொறுத்தவரை சுனாமி என்கிற ஆழிப்பேரலை சென்னையில் பெரிதாய் சூறையாடிய போதும், இங்குள்ள பட்டினத்தார் திருக்கோவிலைத் தாண்டி வெள்ளம் வரவில்லை..
இயற்கையாய் அமைந்துள்ள பாரம்பர்ய (பழைய) வடசென்னை என்பது இயற்கைச் சீற்றங்களை மீறியும் இயல்பாய் தாங்கியும் அமைந்த பகுதி. வடசென்னையின் தன்மைக்கு மீறிய ஓரிரு இடங்களாக இங்குள்ள கார்கில்நகர், ராமகிருஷ்ணா நகர், ராஜாஜி நகர், சத்தியமூர்த்தி நகர் என்று சில இடங்கள் அமைந்துள்ளன. இரண்டு நாள் மழைக்கே இந்தப் பகுதிகள் வெள்ளத்தை தாண்டிய சகதியில் மூழ்கி விடும். தொடர்ந்து, முப்பது நாட்களாக பெய்யும் கனமழைக்கு இந்தப் பகுதி நிச்சயம் நிர்மூலமாகி விடும்.. இதை அந்தப் பகுதியில் உள்ளோர் மட்டுமல்ல, அரசியல் பிரபலங்கள் அனைவரும் அறிவர்.
"வெள்ளம் வந்த மூன்றாம் நாளேஅதனால்தான் எங்கள் பகுதிக்கு வந்த மந்திரிகள் சகதிக்குழி அதிகம் என்று ஊருக்குள் நுழையாமல் வீதி முனையிலேயே விசாரித்து விட்டு, உணவுப் பொட்டலம் கொடுத்துச் சென்றனர். மந்திரிகள்தான் இப்படி என்றால், அரசுப் பணியாளர்களான, மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என்று அத்தியாவசிய பணியில் இருப்போர் ஒருவரும் இங்கே வந்து எட்டிக் கூட பார்க்க வில்லை.. எங்களுக்கோ, எங்கள் பிள்ளைகளுக்கோ குடிக்க பால் கூட தேவையில்லை.. குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டுகளோ கொடுத்தால் கூட போதுமே" என்று கதறுகின்றனர்.
தேவை உடனடித் தீர்வு..
வேதனை குரல்களின் சோக ஒலிகள் தொடராமல் இருக்கட்டும் ...
(ந.பா.சேதுராமன்)

ad

ad