புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016



தன் மகனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் விவேக்..( பதிவின் ஒரு பகுதி...)

வாசித்து முடிக்கையில் கண்கள் குளமாவது உறுதி.....
காலம் அவர் சோகத்தை மாற்றட்டும்...
"தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!’ எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான்...
அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.’, ‘உம்’, ‘சரி’, ‘மாட்டேன்’ என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும்...
அவனுக்கு போட்டோவுக்கு நிற்கப் பிடிக்காது..அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது...
அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை...
காரணம் அவன் விடுவதில்லை.
....இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது...
அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது...
தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்...
என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள்...
கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை...
அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!
குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட...
குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள்...
அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்..
உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்...
கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள்...
அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள்.
தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள்....
அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்...
அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும்.
வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம்...
தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும்...
அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்...
பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம்...
‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்...
பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
மனம் வளம் பெறும்...
மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள்...
அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். அவற்றை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்...
இனியாவது புராதானங்களை மீட்டெடுப்போம்...
குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!
‪#‎பின்குறிப்பு‬: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான்..
அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..! "

ad

ad