11 மார்., 2016

போர் முடிவுக்கு வந்த பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்: நாடாளுமன்றில் போட்டுடைத்த பொன்சேகா


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சின் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போது சரத் பொன்சேகா இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
போர் முடிவுற்றதாக கூறப்படும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்று விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தார். அதனை அறிந்தும்கூட அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச போர் முடிவுற்றதாக அறிவித்துவிட்டார். ஆனால் அன்றைய தினம் நடந்ததை நானும் அறிவேன்.
யுத்தத்தை வெற்றிகொண்ட பெருமையை அடைவதற்காக திட்டமிட்டபடி என்னை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். நான் நாடு திரும்பியவுடன் என்னை அலரிமாளிகைக்கு அழைத்து முப்படைகளின் தளபதி என்ற பதவிலியிருந்து விலகுமாறும் கடும் அழுத்தத்துடன் தெரிவித்தனர்.
அத்துடன் நாடு திரும்பிய மஹிந்த ராஜபக்ச யுத்த வெற்றியை தம்வசப்படுத்திக்கொள்ளும் நோக்கில் மண்ணைத் தொட்டு முத்தமிட்டார்.
கோத்தபாய  ராஜபக்சவும் யுத்த வெற்றியை தன்வசப்படுத்திக் கொள்ளும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார்.
1990ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகியவர் எவ்வாறு போர் வெற்றிக் கிரீடத்திற்கு உரிமை கொண்டாட முடியும் எனவும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
மேலும் மேலும் வௌ்ளைக்கொடி விவகாரத்தில் மூன்று வருடங்கள் தான் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானதாகவும், இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிய கட்டாயம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டதிட்டங்களை பின்பற்றியே யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், சட்டங்களை மீறியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் பங்கு கொள்ள வேண்டும் என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார்.
விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்கு பற்றல் குறித்து எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. தான் சட்டத்திட்டங்களுக்கு அமையவே இராணுவத்தை வழிநடத்தியதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.
வெளிநாட்டவர்கள் விசாரணைகளில் பங்கு கொள்வதானது, விசாரணைகளின் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு இறுதிக்கட்ட போரின் போது, சரத் பொன்சேகா இலங்கை இராணுவ தளபதியாக பதவி வகித்தார்.
அவர் அண்மையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
வடக்கில் மக்கள் வாக்களிப்பதனை தடுக்க மஹிந்த புலிகளுக்கு பணம் வழங்கினார்: சரத் பொன்சேகா
வடக்கில் மக்கள் வாக்களிப்பதனை தடுத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் மஹிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக
அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை குறித்த ஆதாரங்கள் என்னிடம் உண்டு.
அன்று ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்ற உறுப்பினராக என் எதிரில் இருக்கின்றார்,
நான் அமைச்சராக பதவி வகிக்கின்றேன்.வாகன சக்கரத்திருப்பியைப் போன்று வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மாறிமாறி வரும் எனவும், இன்பமும் துன்பமும் நிலையற்றது.
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்