புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016

தனித்து போட்டியா... தனி அணியா... என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்? ஒரு நீண்ட அலசல்













ன் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.விடம் இழந்துவிட்டு நிற்கிறார் விஜயகாந்த். கிட்டத்தட்ட எதிர்கட்சித் தலைவர் பதவியையும்கூட. இழந்துவிட்டு நிற்கிறார். ஆனாலும், 2016 சட்டமன்ற தேர்தலை நோக்கிய அரசியல் காய் நகர்த்தல்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் விஜயகாந்த். அண்மைகாலங்களில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் அதை வெளிக்காட்டுகின்றன. கட்சி துவங்கி 10 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த 10 ஆண்டுகளில் கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்துவிட்டார். அதேபோல், இந்த 10 ஆண்டுகளில் விஜயகாந்த் சந்தித்த சவால்களும், சறுக்கல்களும் மிக அதிகம்தான். அதைத்தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்.

அரசியல் பிரவேசம்...


தமிழகத்தில் திராவிடம் என்ற வார்த்தையோடு கூடிய கட்சியின் பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். தேசியம் என்ற பெயரை தாங்கிய கட்சியின் பெயரையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரு பெயரையும் சேர்த்து ஒரு கட்சி பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 2005க்கு முன்னர் அப்படி எந்த கட்சியும் இல்லை. 2005 இறுதியில் விஜயகாந்த் துவக்கிய தே.மு.தி.க. தான் தேசியம், திராவிடத்தோடு முற்போக்கையும் சேர்த்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகமாக தோன்றிய கட்சி. இப்படி எந்த கொள்கை கனமும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சியை துவக்கிய விஜயகாந்த் தான் இன்று வரை தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரையில் தான் முதல் மாநாட்டை நடத்தினார் விஜயகாந்த். எல்லோரும் ரஜினியை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த நேரம், எதிர்பாராமல் அரசியலில் திடீரென பிரவேசித்தார் விஜயகாந்த். கறுப்பு எம்.ஜி.ஆர். என ரசிகர்கள் விஜயகாந்தை கொண்டாட துவங்கினர். இதுவரை இல்லாத அளவு விஜயகாந்த் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவத்தை கொடுத்தன. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று என ஒன்று வராதா என காத்திருந்த மக்களால் விரும்பப்பாட்டார். 

2006 சட்டமன்ற தேர்தல்...

கட்சி துவங்கிய சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என அறிவித்து 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டார். பா.ம.க.வுடன் நேரடி மோதல் இருந்த காலம் அது. பா.ம.க.வின் கோட்டை என சொல்லப்பட்ட விருதாச்சலத்தில் போட்யிட்டு வென்று, தனி ஆளாக சட்டமன்றத்துக்கு சென்றார் விஜயகாந்த்.
2006 சட்டமன்றத் தேர்தலில் அவர் கட்சி சுமார் 8.38 சதவிகித வாக்குகளைப் பெற்றது. பல தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத தேர்தலாக மாறிப்போனது. இவற்றுக்கு எல்லாம் காரணம் என சொல்லப்பட்டவர் விஜயகாந்த்.

2009 நாடாளுமன்ற தேர்தல்...

இதை தொடர்ந்து, 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று அதே பல்லவியை பாடி தனித்து போட்டியிட்டார் விஜயகாந்த். 2006 சட்டமன்ற தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளால் பல கூட்டணி வாய்ப்புகள் அவருக்கு வந்தது. பலர் கூட்டணிக்கான அழைப்பை விடுத்தனர். ஆனால் அத்தனையும் புறக்கணித்தார். யாருடனும் அணி சேராமல் தமிழகத்தின் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடார்.
அந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட தே.மு.தி.க. வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. ஆனால், பல இடங்களில் கணிசமான வாக்குகளை பிரித்து, முக்கிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை மாற்றி அமைத்தது தே.மு.தி.க.. இந்த தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி இன்னும் சற்று அதிகரித்து 10.33 சதவீதம் என்ற அடிப்படையில் வாக்குகளை பெற்று தன் நிலையை உயர்த்திக் கொண்டது. இடையில் சில இடைத்தேர்தல்களை தே.மு.தி.க. சந்தித்தது. ஆனால். அவற்றில் தே.மு.தி.க.வின் நிலை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. பிரதான எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வே கடுமையான நெருக்கடியில் அப்போது இருந்தது.

2011 சட்டமன்ற தேர்தல்...

ஒரு புறம் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டே வந்தாலும், தேர்தல் வெற்றி என்பது இல்லாதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. எத்தனை காலம் இப்படியே இருப்பது என கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசத்துவங்கினர். யாருடனாவது கூட்டணி அமைத்து சட்டமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்ப வேண்டியது அவசியம் என கட்சி நிர்வாகிகள் நினைத்தனர். அதற்கு வித்திட்டது 2011 சட்டமன்ற தேர்தல்.
8 சதவீதம், 10 சதவீதம் என இருந்த தே.மு.தி.க.வின் வாக்குகள் 12 முதல் 15 சதவீதம் என்ற அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நேரம். 'தனித்து நின்றால் ஓரிரு இடங்களில் வெல்லலாம். பல இடங்களில் கணிசமான வாக்குகளை மட்டுமே பெறமுடியும். கூட்டணி அமைத்தால் எப்படியும் 30 முதல் 40 எம்.எல்.ஏ.க்களை பெற்றுவிடலாம்' என கணக்கு போட்டார் விஜயகாந்த். அவருக்கு எதிரியாக இருந்தது தி.மு.க.

அப்போது தி.மு.க.வை பொது எதிரியாக்கி, எப்படியேனும் தே.மு.தி.க.வை கூட்டணியில் கொண்டு வர படாதபாடுபட்டது அ.தி.மு.க. அதேநேரத்தில், எப்படியாவது தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட செய்திட வேண்டும் என பாடுபட்டது தி.மு.க. தனித்து நின்று ஆட்சியை கைப்பற்றும் கனவை அடைக்காப்பதும், அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்து போட்டியிடுவது என இரு வழிகள் தான் தே.மு.தி.க.வுக்கு இருந்தன

50க்கும் அதிகமான இடங்கள் வேண்டும், துணை முதல்வர் வேண்டும் என பல நிபந்தனைகளை போட்டு, கடைசியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று எதிர்கட்சியானது தே.மு.தி.க. ஆனால், இந்த தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற வாக்கு சதவீதம் என்பது 7.9 சதவீதம். அதாவது 2009 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சதவீதத்தைவிட 2.4 சதவீதம் குறைவு.

2014 நாடாளுமன்ற தேர்தல்...

அடுத்து 2014 ஆம் ஆண்டு, அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கசப்பு, சில எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.விடம் இழந்திருந்தது என்ற சூழலில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது தே.மு.தி.க. 2011 சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தைகூட பெற முடியாதபடி, தி.மு.க.வுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தது தே.மு.தி.க. ஆனால், காலத்தின் கோலம் எந்த கட்சியால் தி.மு.க. பின்னோக்கி தள்ளப்பட்டதோ, அந்த கட்சியோடு அணி சேர துடித்தது தி.மு.க. அதேநேரத்தில், காங்கிரசுடன் தே.மு.தி.க. அணி சேரக்கூடும் எனவும் பேச்சு எழுந்தது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் மோடியை பிரதமராக்க பா.ஜ.க.வுக்கு நான் வாக்கு கேட்டு வருகிறேன். சட்டமன்ற தேர்தலில் என்னை முதல்வராக்க இவர்களோடு வாக்குகேட்டு வருவேன் என அப்போது சொன்னார் விஜயகாந்த். அதாவது இந்த கூட்டணியே சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கும். அப்போது, முதல்வர் வேட்பாளராக நான் இருப்பேன் என்பது தான் அவரது கருத்தாக இருந்தது. ஆனால், அந்த கூட்டணி இரு இடங்களில் வென்றபோதும், அதிக இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க.வுக்கு ஒரு இடத்தில்கூட வெற்றி கிட்டவில்லை. வாக்கு சதவீதமும் குறைந்தது.

2016 சட்டமன்ற தேர்தல்...

இந்த சூழலில் தான் 2016 சட்டமன்ற தேர்தலை தே.மு.தி.க. தற்போது சந்திக்கிறது. அக்கட்சி சந்திக்கும் 3-வது சட்டமன்ற தேர்தல் இது. தி.மு.க.வுடன் கூட்டணி, பா.ஜ.க.வுடன் சேர்ந்து தான் போட்டியிடப்போகிறார். மக்கள் நலக்கூட்டணியுடன் இணைய வாய்ப்பு என கடந்த சில மாதங்களாக தேர்தலையொட்டிய செய்திகளின் கதாநாயகனாக இருப்பவர் விஜயகாந்த் தான். 2011 தேர்தலின்போது நடந்தது அப்படியே தலைகீழாக அரங்கேறியது.
2011 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது தே.மு.தி.க.வை இழுத்துவிட வேண்டும் என அ.தி.மு.க.வும், எப்படியாவது தே.மு.தி.க.வை அ.தி.மு.க.வுடன் சேரவிடாமல் பிரித்து தனித்து போட்டியிட வைத்துவிட வேண்டும் என தி.மு.க.வும் முயன்றது. இந்த முறை, தே.மு.தி.க.வை இழுக்க தி.மு.க. முயல்கிறது. தி.மு.க.வுடன் சேராமல் தனித்து போட்டியிட்டால் நல்லது என அ.தி.மு.க. நினைக்கிறது. மறுபுறம் தன்னோடு வந்தால் நல்லது என பா.ஜ.க.வும், மக்கள் நலக் கூட்டணியும் அழைப்பு விடுத்தன. ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளி, தனித்து போட்டி என்றும், தனி அணி என்றும் பேசியிருக்கிறார் விஜயகாந்த். ஆனால் இதிலும் ஒரு குழப்பம் உள்ளதை காண முடிகிறது.

தனித்து போட்டியா? தனி அணியா?

சென்னை, ராயப்பேட்டையில் நடந்த தே.மு.தி.க. மகளிரணி கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், "கூட்டணிக்காக பேரம் பேசுவதாக கூறுகிறார்கள். நான் யாரிடமும் பேரம் பேசவில்லை. இந்த தேர்தலை தே.மு.தி.க. தனியாகத்தான் சந்திக்கப் போகிறது. இந்த தேர்தலில் நாங்கள் தனியாகத்தான் போட்டியிடப் போகிறோம். அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அவர்களுக்கு நான் நன்றியை கூறிக்கொள்கிறேன்" என்றார். அதே மேடையில், "எங்கள் அணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்" என அழைப்பு விடுத்தார் பிரேமலதா. இதை விஜயகாந்த்தும் வழி மொழிந்தார்.

அப்படியென்றால், இந்த தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடப்போகிறதா அல்லது தனியாக ஒரு அணியை அமைக்கப்போகிறதா? அப்படி புதிய அணி அமைக்கப்பட்டால் அந்த அணியில் இடம்பெறுவது யாராக இருக்கும்? தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க.வை மட்டுமே மாநாட்டில் விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களுக்கு இதில் இடமிருக்குமா? பா.ஜ.க., தே.மு.தி.க. தலைமையை ஏற்றால் அவர்களோடு அணி சேர வாய்ப்பு இருக்குமா? முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என மக்கள் நலக்கூட்டணி வெளிப்படையாக அறிவித்தால் அவர்களோடு விஜயகாந்த் அணி சேருவாரா என பல கேள்விகள் எழுகின்றன.

தி.மு.க.வுடன் சேரலாம் என எண்ணிய கட்சியினர்...


தனித்து நிற்கலாம்... தி.மு.க.வுடன் அணி சேரலாம்... பா.ஜ.க.வோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம், மக்கள் நலக்கூட்டணி தான் சரியான சாய்ஸ் என தே.மு.தி.க.விற்குள்ளேயே பல கருத்துகள் உலவுகின்றன. தி.மு.க. உடன் அணி சேர இனி வாய்ப்பில்லை என விஜயகாந்தின் பேச்சை வைத்து முடிவுக்கு வரலாம். ஆனால், தி.மு.க. உடன் அணி சேர வேண்டும் என்ற எண்ணமும் தே.மு.தி.க.வினரிடம் இருக்கத்தான் செய்கிறது.

‘‘கூட்டணிக்குச் செல்வதால் பலவீனம் என்பதை ஏற்க முடியாது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று என்பதால் மட்டும் தே.மு.தி.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. கேப்டனின் கொள்கைகள் தான் வெற்றி வாய்ப்பை கொடுக்கின்றன. இப்போதைக்கு அ.தி.மு.க.வை வீழ்த்துவது தான் மிக முக்கியம். அதற்காக ஒரு கூட்டணி தேவை. அது தி.மு.க.வுடன் என்றால் பலம் வாய்ந்ததக இருந்திருக்கும். கடந்த தேர்தலில் கேப்டனால் முதல்வரானவர், அதன் பின்னர் அவரை மிக மோசமாக நடத்தியதை ஏற்க முடியாது. அதனால், அ.தி.மு.க.வை மோசமான தோல்வியடையச் செய்ய தி.மு.க.வுடன் அணி சேருவது தான் சரியான முடிவாக இருக்கும். தனித்து நிற்பது என்பது அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, அ.தி.மு.க.வை வெற்றி பெற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிடும்" என்கிறார்கள்.

தனித்து நிற்கலாமா?

கூட்டணி எல்லாம் தேவையில்லை. தனித்து தான் நிற்க வேண்டும் என சொல்பவர்களும் தே.மு.தி.க.வில் கணிசமாக இருக்கிறார்கள். அதில் சிலர் முன்வைக்கும் வாதமோ, ''தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றுதான். அதற்கு மாற்றைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தேர்தலில் அது வெளிப்படையாக தெரிகிறது. தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்காலம் என்பது தனித்து போட்டியிட்டபோது தான். மக்களுக்கு மாற்று தேவை. அதை மிக சொற்ப வாக்கு வங்கியை கொண்ட கட்சிகளால் வழங்க முடியாது. அதை நாம் தரலாம். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று எனச்சொல்லி தான் தேர்தலை சந்தித்தோம். அதை நம்பி தான் மக்களும் ஆதரவளித்தார்கள். அந்த எண்ணத்தை மதிக்க வேண்டும்"  என்கின்றனர்.

ஆனால் தி.மு.க.வுடன் அணி சேரவோ, யாருடனும் கூட்டணி அமைக்காமல் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடவோ வாய்ப்பு இல்லை என்பது தான் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரின் பேச்சை வைத்து யூகிக்க முடிகிறது. அதாவது, விஜயகாந்த் தலைமையில் தனி அணி என்பது தான். அப்படியென்றால் அந்த அணியில் யாரெல்லாம் இருப்பார்கள்?

தே.மு.தி.க.வின் தேர்தல் கணக்கு...

விஜயகாந்த், பிரேமலதாவின் பேச்சை கவனித்தால் நாம் இரண்டு விஷயங்களை தெளிவாக்கிக்கொள்ள முடியும். ஒன்று தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க.. கட்சிகளோடு அணி சேர வாய்ப்பில்லை என்பது. இரண்டாவது, அதேநேரத்தில் தனியாக ஒரு அணியை அமைப்பது தான். தமிழக சட்டமன்றம் இப்படியொரு தேர்தலை இதுவரை சந்தித்ததில்லை. தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ.க., பா.ம.க., இவற்றோடு தே.மு.தி.க. என பல முனை போட்டி நிலவுகிறது.  இது போதாதென்று புதிய கட்சிகள் வேறு.

இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க.வோடு தே.மு.தி.க. அணி சேர வாய்ப்பில்லை அப்படியென்றால் இதில் பா.ஜ.க.வை தன் அணியில் விஜயகாந்த் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது மக்கள் நலக்கூட்டணியை இணைத்துக்கொள்ளலாம். அட, இதில் என்ன புதுசு. இவங்க ரெண்டு பேரும் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைச்சவங்க தானே என்கிறீர்களா? அங்கு தான் சிக்கலே இருக்கிறது.

மக்கள் நலக்க்கூட்டணி, தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைத்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் விஜயகாந்தை அழைத்தது. ஆனால், இப்போது அழைப்பதோ விஜயகாந்த். அதாவது உங்கள் கூட்டணிக்கு நான் வரவில்லை. என் கூட்டணிக்கு நீங்கள் வாருங்கள் என்பது தான் தே.மு.தி.க.வின் கணக்காக எடுத்துக்கொள்ள முடிகிறது.

தன் தலைமையில் அணி... தானே முதல்வர் வேட்பாளர்

தன் தலைமையில் அணி என்றால், தான் முதல்வர் வேட்பாளர். போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் தங்களுக்கு இருக்கும். இது தான் விஜயகாந்த் விரும்புவது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகளைவிட, பா.ஜ.க.வைவிட, தான் பெரிய கட்சி. எனவே எனக்கு கீழே நீங்கள் வாருங்கள் என்பதாகத்தான் விஜயகாந்த்தின் பேச்சை எடுத்துக்கொள்ள முடிகிறது.
 
தே.மு.தி.க.வின் இந்த மூவ் சரிதான் என்ற பேச்சும் பரவலாக இருக்கிறது. ‘‘தே.மு.தி.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது என்ற முடிவைப் பொறுத்தவரை, அது அக்கட்சிக்கு பலவீனமான ஒன்றாகத்தான் அமையும். கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்ததிலேயே தே.மு.தி.க. சற்று பலவீனமடைந்து விட்டது. தே.மு.தி.க.வின் வாக்கு வங்கியில் சரிபாதி சதவீத வாக்குகள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்றாக தே.மு.தி.க. இருக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்தவர்கள் தான். அதனால், இம்முறை தி.மு.க.வுடன் அணி சேருவது தே.மு.தி.க.வுக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளால் எந்தப் பலனும் ஏற்பட வில்லை. அப்படி இருக்க விஜயகாந்த் ஒரு மாற்று அணியை உருவாக்குவதே மக்களுக்கு நன்மை பயக்கும். அது மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் கட்சிகளோடு என்றால் இன்னும் நல்லது. இப்போது இல்லாவிட்டாலும் தனித்து தலைமை தாங்கி தேர்தலை தேமுதிக சந்தித்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்துவிடலாம்" என்ற பேச்சுக்களும் இருக்கதான் செய்கிறது. என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?

ad

ad