புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2016

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது; அழைப்பை எதிர்நோக்கி ஜி.கே.வாசன் காத்திருப்பு

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது. பேச்சு வார்த்தைக்கான, அழைப்பை எதிர்நோக்கி
ஜி.கே.வாசன் காத்திருக்கிறார். 

கூட்டணி அமைத்து போட்டி

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ஜி.கே.வாசன், கட்சியை ஆரம்பித்தபோதே, ‘‘தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட மாட்டோம். கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம். வெற்றிக் கூட்டணியில் இடம்பெறுவோம்.’’ என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். 

எனவே, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்தக் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தார். 

தே.மு.தி.க. முடிவு

தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் பட்சத்தில், அதில் தமிழ் மாநில காங்கிரசும் இணைந்தால், வலுவான கூட்டணியாக இருக்கும் என்று அவர் நம்பினார். அதே சமயம் மற்றொரு புறம் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவதற்கான முயற்சியும் நடந்தது. 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த தே.மு.தி.க. மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ‘‘சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்தே போட்டியிடுகிறது’’ என்று தடாலடியாக அறிவித்தார். 

மாற்று வழி யோசனை

இதனால், தங்கள் கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்று எதிர்பார்த்த தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்தன. சட்டமன்ற தேர்தலை சந்திக்க மாற்று வழியையும் யோசிக்க தொடங்கின. 

தே.மு.தி.க.வின் அதிரடி முடிவால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தங்கள் கூட்டணி கணக்கில் ஒருமித்த முடிவுக்கு வந்தது. அதாவது, ‘‘தே.மு.தி.க.வின் தனித்து போட்டியிடும் முடிவு அ.தி.மு.க.வுக்குத் தான் தேர்தலில் சாதகமாக இருக்கும். எனவே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றால் தான், அது வெற்றி கூட்டணியாக இருக்கும்’’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் நம்புகிறது.

அழைப்புக்காக காத்திருப்பு

அ.தி.மு.க.வுடன் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணி அமைக்காத நிலையில், தாங்கள் போய் கைகோர்த்தால் அதிக இடங்கள் கிடைக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் நினைக்கிறது. எனவே, விரைவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கான அழைப்பு வரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கிறார். 

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். தேனாம்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை தொண்டர்கள் குவிந்தனர். 

ஜி.கே.வாசன் வருகை

தொண்டர்கள் வருகையை தொடர்ந்து, ஜி.கே.வாசனும் அங்கு வந்து, கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மகளிர் அணி நிர்வாகிகளையும் அவர் சந்தித்து பேசினார். 

அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் தலித் மக்கள் முன்னணியை சேர்ந்த சுமார் 50 பேர், ஜி.கே.வாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். 

ad

ad