26 மே, 2016

சட்டசபை நிகழ்ச்சிகளில் கலைஞர் பங்கேற்கும் வகையில் வசதி செய்யப்பட வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைதைத் தொடர்ந்து, அதில் இரு பதவிகளுக்கு திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பேட்டி :

மு.க.ஸ்டாலின்: தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைவதை ஒட்டி, அந்த பதவிகளுக்கு திமுகழக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ். பாரதி அவர்களும், அதனைத் தொடர்ந்து கழகத்தின் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

செய்தியாளர்: திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். உங்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் ?

 மு.க.ஸ்டாலின்: அவர் நேற்றைக்கு அப்படி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு வந்தபோதே நான் அதனை குறிப்பிட்டுள்ளேன். இதுவரை தமிழக வரலாற்றிலேயே இவ்வளவு பலம் வாய்ந்த எதிர்கட்சி அமைந்தது இல்லை. ஆகவே, இந்த சூழ்நிலையில் பெரும்பான்மை பலம் பெற்று எதிர்கட்சியாக உள்ள திமுக இதனைப் பயன்படுத்தி கொண்டு, தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவைகள் உள்ளனவோ, முக்கியமான பிரச்சினைகள் என்னென்ன உள்ளனவோ அவற்றை யெல்லாம் மையமாக வைத்து எங்கள் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்.

செய்தியாளர்: கடந்த ஆட்சியில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி  சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் உரிய வசதி செய்யப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது உரிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா ?

மு.க.ஸ்டாலின்: நேற்று எந்த நிலையில் வந்து கையெழுத்திட்டு விட்டுச் சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே இந்த அரசு அதற்கு ஏற்றவகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம்.

செய்தியாளர்: முதல்வர் பதவியேற்பு விழாவில் உங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்பது ஒருபுறம் சர்ச்சையாக மாறி, அதற்கு முதல்வர் விளக்கம் அளித்த நிலை, அதேபோல நேற்று சட்டசபையில் பரஸ்பரம் நீங்கள் இருவரம் வணக்கம் செலுத்திக் கொண்ட சூழ்நிலை குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

 மு.க.ஸ்டாலின்: உங்களுக்கும் கூட இப்போது வணக்கம் தெரிவிக்கின்றேன்.