26 மே, 2016

எஸ்.ஆர்.பிக்கு எம்.பி சீட்! -ஜி.கே.வாசனுக்கு அ.தி.மு.கவின் நோஸ்கட்

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனை ராஜ்யசபா வேட்பாளராக
அறிவித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ' தேர்தல் நேரத்திலேயே த.மா.கா.வில் இருந்து பிரிந்து தன்னை நம்பி வந்த எஸ்.ஆர்.பி.க்கு பதவி கொடுப்பதன் மூலம், தான் யார் என்பதை வாசனுக்குப் புரிய வைத்திருக்கிறார் முதல்வர்' என்கின்றனர் எஸ்.ஆர்.பி தரப்பில். 

'சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணியில் இணைந்து தேர்தலை சந்திப்பது' என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் முடிவெடுத்தார். அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவர்களோடு சீட் பங்கீடு குறித்து பேசி வந்தார் ஜி.கே.வாசன். பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் நேரத்தில், ' ஒன்பது சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதற்கு அம்மா முடிவு செய்துவிட்டார்.
அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பது அவர் விருப்பம். நீங்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என அ.தி.மு.க சீனியர்கள் வலியுறுத்தினர். அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தைக்கு ஆரம்பம் முதலே ஆர்வத்தோடு பேசி வந்தார் எஸ்.ஆர்.பி. ஒருகட்டத்தில், அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசிய வாசன், 'நாங்கள் தனியாக கட்சி நடத்தி வருகிறோம். எங்களுக்கென்று தனிச்சின்னம் பெற்று அதில் போட்டியிடவே விரும்புகிறோம். இரட்டை இலையில் போட்டியிட்டால் தனிக்கட்சி தொடங்கியதன் நோக்கம் அடிபட்டுவிடும்' என மறுத்துவிட்டார். 

'ஜி.கே.வாசனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்' என அ.தி.மு.க.வின் சீனியர்களும், த.மா.கா.வில் உள்ள சிலரும் கடுமையாக முயற்சி செய்து வந்தனர். எதுவும் எடுபடாமல் போகவே, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் வாசன். இதனைக் கடுமையாக எதிர்த்த எஸ்.ஆர்.பி, தேர்தல் பிரசாரத்தின் போதே ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். தேர்தல் முடிவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறார் ஜி.கே.வாசன். அதிலும், 'கணிசமான ஓட்டு வாங்க முடியாததால், நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது? கட்சியின் எதிர்காலம் என்ன?' என்பது குறித்த கவலையில் ஆழ்ந்துவிட்டார். 

இந்நிலையில், ' எஸ்.ஆர்.பி.க்கு எம்.பி சீட்' என வெளியான அறிவிப்பை த.மா.கா.வினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிலும், கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே இப்படியொரு வாய்ப்பு அவருக்கு வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. 'தன்னை நம்பி வந்த யாரையும் அம்மா கைவிட மாட்டார். தேர்தல் சீட் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துக் கொண்டே, தன்னை நம்பாமல் மக்கள் நலக் கூட்டணிக்கு வாசன் சென்றதை அம்மா ரசிக்கவில்லை. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையிலேயே, ' ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும்' என்பதில் உறுதியாக இருந்தார். தேர்தல் நேரத்திலேயே வாசனுடனான உறவை விலக்கி வைத்துவிட்டு, தன்னை நம்பி வந்த எஸ்.ஆர்.பி.க்கு அந்த ஒரு சீட்டைக் கொடுத்திருக்கிறார். இப்போது ஜி.கே.வாசனுக்கு அம்மா யார் என்பது புரிந்திருக்கும்" என்கின்றனர். 

இதைப் பற்றி எஸ்.ஆர்.பி.யிடம் கேட்டோம். "எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார். 

இப்படியெல்லாம் நடக்கும் என ஜி.கே.வாசன் மட்டும் எதிர்பார்த்தாரா என்ன?