26 மே, 2016

யாழ்.குடாநாட்டு பத்திரிகைகளை மஞ்சள் பத்திரிகைகளாக அறிவிக்குமாறு கோரிக்கை

யாழ்.குடாநாட்டு பத்திரிகைகளை மஞ்சள் பத்திரிகைகளாக அறிவிக்க கோரி வடக்கு மாகாண சபையின் 53ம் அமர்வில் பிரேரணை
முன்வைக்கபட்டுள்ளதுடன், குடாநாட்டு ஊடகங்கள் மீது கடுமையான விமர்சனங்களையும், மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் 53ம் அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலக சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஆனோல்ட், மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணையினை சபையில் முன் மொழிந்தார்.
இதன்போது அவர் உரையாற்றுகையில்,
கடந்த 24ம் திகதி ஆளுநர் தலமையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் பங்கெடுக்கவில்லை.
புறக்கணிப்பு செய்கின்றனர். பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதாக பொதுவாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளியாகும் உள்ளூர் பத்திரிகை ஒன்றை கையில் எடுத்து அந்த பத்திரிகையை மஞ்சள் பத்திரிகை என வியந்து பேசினார்.
மேலம் பத்திரிகைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தடுப்பதாக குற்றஞ்சாட்டியதுடன், இவ்வாறான பத்திரிகைகள் எமக்கு தேவையற்றவை எனவும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து ஆளுங்கட்சிஉறுப்பினர்கள் சிலரிடமிருந்தே ஊடகங்கள் தொடர்பான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 3 பத்திரிகைகள் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆளுங்கட்சி உறுப்பினர்களான ஆனோல்ட், அஸ்மின் மற்றும் பிரதி அவை தலைவர் ம. அன்டனி ஜெயநாதன், பரஞ்சோதி ஆகியோர் ஊடகங்கள் மீதான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.
அதிலும் குறிப்பாக யாழ். ஊடகவியலாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும், பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருக்கின்றனர்.
இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களான க.விந்தன், சிவாஜிலிங்கம் மற்றும் சர்வேஸ்வரன், சிவனேசன் அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் ஊடகங்கள் மீதான விமர்சனம் தேவையற்றது என வாதிட்டபோதும், ஊடங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறுதியாக பேசிய அவைத் தலைவர், மஞ்சள் பத்திரிகை என பாவிக்கப்பட்ட வசனத்தையும், ஊடகவியலாளர் ஒருவரின் பெயரையும் அவை குறிப்பிலிருந்து நீக்குவதாக கூறினார்.
இந்நிலையில் காலை 9.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரையில் சுமார் 3 தொடக்கம் 4 மணிநேரம் இடம்பெற்ற ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் முடிவுக்கு வந்தது.
மேலும் மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட் முன் மொழிந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டு சபை நடவடிக்கை குழுவிடம் கையளிக்கப்படும் என அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.