புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2016

கும்கிகளை எதிர்கொள்ள அணிசேரும் காட்டு யானைகள்: ஒற்றையுடன் மேலும் 6 யானைகள்

கோவையை அடுத்த மதுக்கரைப் பகுதியை அச்சுறுத்தி வரும் ஒற்றையானையுடன் மேலும் 6 யானைகள் அணிசேர்ந்துள்ளன.
கும்கிகளை எதிர்கொள்ளும் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 கோவையை அடுத்த மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை கோவை கோட்ட வனத் துறையினர் எடுத்து வருகின்றனர்.
 இதில், முதல் கட்டமாக முதுமலையிருந்து விஜய், சாடிவயல் முகாமிலிருந்து பாரி, சுஜய் மற்றும் கோழிகமுத்தி முகாமிலிருந்து அனுபவம் பெற்ற கலீம் என நான்கு கும்கிகள் நவக்கரை வனத் துறை குடியிருப்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதல் கும்கிகளுக்குத் தேவையான பல்வேறு கட்டப் பயிற்சிகளை பாகன்கள் அளித்தனர்.
கும்கிகளுக்கு வாகனப் பயிற்சி: பல்வேறு பகுதிகளில் இருந்து நவக்கரை கொண்டு வரப்பட்டுள்ள கும்கி யானைகளை தனியார் லாரியில் எவ்வாறு ஏற்றுவது என்பது குறித்து பாகன்களின் உதவியுடன் வனத் துறையினர் பயிற்சி அளித்தனர். இதில், நவக்கரை வனத்துறை அலுவலகத்தை சுற்றி பாரி, விஜய், சுஜய் ஆகிய மூன்று கும்கிகளும் தனித் தனியாக தனியார் லாரியில் ஏற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தற்போதைய இடம் கும்கிகளுக்கு புதியது என்பதால் அந்த யானைகள் முழு உடல் தகுதியுடன் உள்ளதா என்பது குறித்தும் பரிசோதனை செய்தனர்.
வனத் துறை கண்காணிப்பில் ஒற்றை யானை :
 இதனிடையே, கடந்த இரு நாள்களாக வனக் கால்நடை  மருத்துவ அலுவலர் மனோகரன், முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை உதவி மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த யானையின் கால் பதிவு, உயரம், எடை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.  மேலும், மதுக்கரை துப்பாக்கி சுடும் தளம் மற்றும் மரப்பாலம், எட்டிமடை, அறிவொளி நகர் உள்ளிட்ட வனப் பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வனத் துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இரவு, பகலாக ஒற்றை யானையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒற்றை யானையுடன் மேலும் 6 யானைகள் : அதே வேளையில், தற்போது ஒற்றை யானையுடன் சேர்ந்து சுற்றும் யானைகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. அந்த யானைகளிடம் இருந்து ஒற்றை யானையைப் பிரித்து, அதற்கு மயக்க ஊசி செலுத்துவது குறித்தும் வனத் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
 எனினும், சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்களுக்குள் யானைக்கூட்டத்தில் உள்ள ஒற்றை யானை மீது மயக்க மருந்து செலுத்தி, கும்கிகளின் உதவியுடன் பிடித்து பாதுகாப்பாக கோழிகமுத்தி யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக வனத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad