புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2016

துருக்கியில் அரசை கவிழ்க்க முயற்சித்த விவகாரத்தில் 6 ஆயிரம் பேர் கைது: நீதி துறை மந்திரி


துருக்கியில் அரசை கவிழ்க்க திட்டமிட்டு செயல்பட்டவர்களில் 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த எண்ணிக்கை
அதிகரிக்கும் என நீதி துறை மந்திரி பெகீர் போஜ்டக் இன்று கூறியுள்ளார்.

துருக்கியில் பிரதமர் பினாலி யில்டிரிம் தலைமையிலான அரசு நடந்து வருகிறது.  இந்நிலையில் துருக்கி நாட்டில் நேற்று திடீரென ராணுவ எழுச்சி ஏற்பட்டது.  அந்நாட்டு தலைநகர் அங்காராவிலும் மற்றும் இஸ்தான்புல் நகரிலும் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடுகள் மற்றும் குண்டு வெடிப்புகள் நடந்தன.

அங்காராவில் கிளர்ச்சியாளர்களின் ஹெலிகாப்டர் ஒன்று, படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. எங்கு பார்த்தாலும் கலகங்கள் நடந்தன. மக்களிடையே பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் நள்ளிரவு 12.45 மணிக்கு ராணுவ புரட்சிக்கு முயற்சித்த பிரிவில் ஒரு குழு, போலீஸ் படைகள் முன் சரண் அடைந்தது.

ராணுவ புரட்சி முயற்சியினால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 265 பேர் கொல்லப்பட்டனர், 1,440 பேர் காயம் அடைந்தனர். புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 2,839 பேர் கைது செய்யப்பட்டனர்.

துருக்கி நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார்.  துருக்கியில் அமைதி திரும்ப வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தினார்.

இந்த புரட்சியினை அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட துருக்கி மதபோதகர் பெதுல்லா குலென் செய்திருக்க வேண்டும் என துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டின் அனடொலு என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசின் நடவடிக்கைகள் தொடருகின்றன.  இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நீதி துறை மந்திரி கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ad

ad