புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

ஜெ நலம்பெற பாடுபடும் உளவுத்துறை! தலைவர்கள் விசிட் பின்னணி!


“பார்த்தவர்களைப் பார்த்தேன். முதல்வர் நலமுடன் இருககிறார்” என்று அப்பல்லோ வாசலில் மீடியாக்களிடம் தெரிவித்திருக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். பார்த்தவர்கள் யார், அமைச்சர்களா?

“முதல்வர் சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்தில் இருந்த அமைச்சர்களை சந்தித்தேன். முதல்வர் நலமுடன் இருக்கிறார்” என்று மீடியாக்களிடம் சொன்னார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். இரண்டாவது தளத்தில் வேல்முருகன் பார்த்த அமைச்சர்களில் யார் யார் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

அக்டோபர் 2ந் தேதியும் 5ந் தேதியும் சீனியர்-ஜூனியர் அமைச்சர்கள் பலர் அப்பல்லோவுக்கு வந்தனர். அவர்கள் யாரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக மீடியாக்களிடம் தெரிவிக்கவில்லை. அப்பல்லோ நிர்வாகத்தின் தகவலையும் கார்டன் தரப்பின் உத்தரவையும் மட்டுமே கேட்டுச் சென்றனர்.

“முதல்வரை சந்திக்கவில்லை. அவர் நலமாக இருப்பதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்” என்று அக்டோபர் 3ந் தேதி அப்பல்லோ வாசலில் தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அப்படியென்றால் அ.தி.மு.க நிர்வாகிகள் யாரேனும் ஜெயலலிதாவை சந்தித்தார்களா என்றால், “முதல்வரை நான் பார்க்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார்” என்று மீடியாக்களிடம் சொன்னவர் அ.தி.மு.கவின்  மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன்.

அப்பல்லோ வாசலிலேயே முதல்வரின் நலன் வேண்டி காத்திருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளான வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி போன்றவர்களும் வார்டுக்குள் சென்றதாகச் சொல்லவில்லை. பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர்ராவ் சார்பிலான ராஜ்பவன் அறிக்கையே, முதல்வரை ஆளுநர் சந்தித்துப் பேசினார் என்று தெரிவிக்கவில்லை.

யாரேனும் ஒருவராவது முதல்வரின் உடல்நிலை பற்றிய செய்திகளை முழுமையாகத் தெரிவிப்பார்களா என்று அவருக்கு வாக்களித்த பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், “பார்த்தவரைப் பார்த்தோம். சொன்னதைக் கேட்டோம்” என்ற ரீதியில் தமிழக அரசியல் தலைவர்கள் அப்பல்லோ வாசலில் பேட்டியளிப்பது குழப்பத்தைத்தான் உண்டாக்குகிறது.

முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக காவல்துறையும் அதன் உட்பிரிவான உளவுத்துறையும் மிகுந்த பாடுபடுகிறது. சட்டமன்றத் தேர்தல் சமயத்திலேயே மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களுடன் நல்லுறவில் இருந்த உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் இப்போதும் அதே நட்புறவில் நீடிக்கிறார். 

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியின் நிர்வாகிக்கு உறவினரான இந்த அதிகாரி, தமிழக முதல்வரின் உடல்நலன் குறித்த நல்ல செய்தியை அ.தி.மு.கவைத் தவிர்த்து பிற கட்சிகள் மூலம் சொல்ல வைக்க வேண்டும் எனத் தீவிரமாக செயல்படுகிறார்.

அதன் விளைவுதான் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்களின் அப்பல்லோ வருகையும் பேட்டியுமாகும். கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் தீவிர ஆதரவாளராக செயல்படும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரின் வருகையின் பின்னணியும் இதுதான்.

முதல்வரின் நலன் காக்கும் உளவுத்துறையின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் இன்னும் பல தலைவர்களின் அப்பல்லோ வருகையையும், அவர்களின் பேட்டியையும் அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கலாம்.

ad

ad