24 பிப்., 2017

பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கொலை: போலீஸ் வாகனத்தை வழிமறித்து வெட்டி கொன்ற கும்பல்

நெல்லையில் போலீஸ் வாகனத்தை வழிமறித்து பசுபதி பாண்டியனின் ஆதரவாளரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (எ) சிங்காரம். இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளர் ஆவார். மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துக்கும், பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் பகை இருந்து வருகிறது. சுபாஷ் பண்ணையாரை கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு வழக்குககள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிங்காரம், பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அவரை அழைத்து வந்து கொண்டிருந்தனர். நான்கு வழிச்சாலையில், கே.டி.சி. நகர் அருகே வந்தபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கியுள்ளது. பின்னர், வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்த போலீசார் மற்றும் சிங்காரம் மீது மிளகாய்பொடி கரைசலை ஊற்றியுள்ளனர். இதில் போலீசார் நிலைகுலைந்தபோது, அந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி அந்த கும்பல் சிங்காரத்தை வெளியே இழுத்து அரிவாளால் வெட்டியுள்ளது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. இதில் படுகாயம் அடைந்த சிங்காரம் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காவல்துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.