24 பிப்., 2017

தமிழரசுக்கட்சிக்கு சவாலாகும் “ரெலோ”., தத்தளிக்கும் “ஈ.பி.அர்.எல்.எப்.”., தனக்கென்ன போச்சென்று “புளொட்”. –

இலங்கையில்  தமிழர்களின்  ஜனநாயக அரசியலுக்கு நீண்ட நெடிய  வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. 1948 இல்  இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து
இந்த ஜனநாயக அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் இன்றைய  இரா. சம்பந்தன் வரையில் பல தலைவர்கள்  அரசியல் முன்னெடுப்புக்களை காலத்துக்கு காலம் மேற்கொண்டுவரும் நிலையில் தலைமைகளில் காணப்பட்ட குறை அல்லது பலவீனம் அல்லது சுயநலம் தமிழர்கள் மொத்த அரசியலையும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது . தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலம் தவிர்ந்த ஏனைய காலப் பகுதிகளில்  தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தினாலும், தமிழர்கள் தமிழ் அரசியல் தலைமைகளினாலும் ஏமாற்றப்பட்டு வந்ததுடன் சில சந்தர்ப்பங்களில் சிங்கள அரசும் தமிழ் தலைமைகளும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றியும் இருக்கின்றது .
தமிழர்களின் அரசியல் வரலாற்றில் பெரும்பகுதியில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஒரு கட்சி அரசியலே இருந்து வந்துள்ளது. அதாவது தமிழ் கட்சிகள் ஒன்றுக்கு மேற்பட்டவை தேர்தலில் சம பலத்துடன் போட்டியிட்டது கிடையாது. தேசிய கட்சிகளே தமிழ் கட்சிகளுடன் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த நிலை ஒக்ரோபர் மாதம், 20ஆம் திகதி, 2001ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு  உருவாக்கப் பட்டதன்  பின்னர் என்னும் வலுவடைந்தது. கூட்டமைப்பு தவிர்ந்த எந்த தமிழ் கட்சியும் வடக்கு  கிழக்கில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத நிலை உருவாகியது அது யாராக இருந்தாலும், எந்தக்கட்சியாக இருந்தாலும் துரோகிகளாகவே மக்களுக்கு காட்டப்பட்டு வந்தது இதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது . டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. தவிர்ந்த எந்த தமிழ் கட்சியும் கூட்டமைப்பை எதிர்த்து தேர்தலில் சிறு  வெற்றியை கூட கண்டதில்லை என்பதுதான் உண்மை.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதிவு செய்யப்படாதமையினால்  தாம் ஒரே கட்சி என்கின்ற  மனநிலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே இல்லாத நிலை உருவாக்கி முறையாக திருமணம் செய்துகொள்ளாத ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது போல எப்போது வேண்டுமானாலும் நாம் கழற்றி விடப்படலாம் என்ற மனநிலையில் தங்களது கட்சிகளை பலப்படுத்தும் அல்லது நிலைப்படுத்தும் முயற்சியில் கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகள்  தீவிரமாக செயலாற்றி வருவதை அண்மைக்காலமாக அதிகமாக காணக்கூடியதாக உள்ளது. அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருக்க கூடிய சட்ட ஏற்பாடுகளோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள்  போன்ற கட்டுப்படுத்தும் சக்தியோ இல்லாத நிலையில் எப்போது வேண்டுமானாலும் கூட்டமைப்பு உடைந்து போகாலாம் என்னும் நிலை உருவாக்கி வருகின்றது.
இந்த நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள்  தம்மை சுய பரிசோதனை செய்து வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் இப்போது என்ன பலத்தில் இருக்கின்றது என்று பார்க்கும் போது பெரியண்ணன் பாணியில் தனது சின்னம் மக்கள் மத்தியில்  பிரபலமாகியிருப்பதனால் தமிழரசுக்  கட்சி தான் நினைப்பதை எல்லாம் செய்யலாம் ஏனைய கட்சிகள் விரும்பினால் எம்முடன் இருங்கள். என்ற நிலையிலும் ஓரளவு மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் பலத்திலும் தமிழரசுக்கட்சிக்கு சாவாலான நிலையில் ரெலோவும் , கூட்டமைப்பில் இருப்பதா? தனித்து செல்வதா? தமிழ் மக்கள் பேரவையில் இருப்பதா? என தத்தளிக்கும் நிலையில் ஈ.பி.அர்.எல்.எப் பும்  , விபத்தாக கூட்டமைப்புக்குள் வந்து குறிப்பிட்ட அளவு வெற்றிகண்ட புளொட்  தனக்கென்ன போச்சு வந்த வரைக்கும் இலாபம் என்ற நிலையிலும் இருப்பதாகவே தோணுகின்றது .
செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ என்று அழைக்கப்படும்  தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு தற்போது ஏறுமுகம் என்றுதான் சொல்ல வேண்டும் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்  மற்றும் கிழக்கில் கோடிஸ்வரன் என இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராகவும் உள்ளதுடன் வடக்கு மாகாண சபையில் ஒரு அமைச்சர் (டெனிஸ்வரன் ), யாழில் சிவாஜிலிங்கம் , விந்தன். மன்னாரில் ஞானசீலன் டெனிஸ்வரன் , வவுனியாவில் மயூரன் முல்லைத்தீவில் ஒருவர் கிழக்கு மாகாணத்தில் கருணாகரம் (ஜனா),இந்திரகுமார் (பிரசன்னா)என நீள்கிறது மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல் இதில் அனைவருமே எதோ ஒருவகையில் இயங்கு நிலையில் இருப்பவர்கள், துடிப்பானவர்கள் என்பது கட்சிக்கு பலம் . இதைவிட கட்சியில் இருக்கும் கென்றி மகேந்திரன் , ஸ்ரீகாந்தா , (வினோ) நோகராதலிங்கம் , சுரேன் ,கீரன் உள்ளிட்டவர்களுடன் சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் கணேஷ் ஆகியோர் இருப்பது  கட்சிக்கு மேலும் ஒருமடங்கு பலம் சேர்க்கும்.
இந்நிலையில் ஸ்ரீதரனிடம் இருந்து விலகிய பொன் காந்தன் கிளிநொச்சியிலும்  , ரிஷாட் பதுதீனுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளைப்பெற்ற விஜிந்தன்  முல்லைத்தீவிலும் ரெலோ சார்பில் செற்பட்டு வருவது அங்கும் அவர்களை காலூன்ற செய்திருக்கின்றது .இந்த பலமும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் சகிப்புத்தன்மையும், இசைவுப்போக்கும்,  பட்டறிவும் சம்மந்தர் தலைமையிலான கூட்டமைப்பில் கடைசி நேரம் வரை தொடரும் அதே நேரம் பிரிந்து சென்று மாற்று அணி ஒன்றுடன் இணைந்தாலோ அது தமிழரசுக்கட்சிக்கு சவாலாகவே அமையும் அதே வேளை ரெலோ தமக்குள் இருக்கும் உடைவுகளை சரிசெய்யும் பட்சத்தில் என்னும் பலமடங்கு பலமடையும் இது தமிழரசுக்கட்சிக்கு நிகரான பலத்தையும் உருவாக்கும்.
இதில் டெனிஷ்வரன் தன்னிச்சையாக செயற்படுவதும், முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் நெருங்கிய உறவைப் பேணுவதும் , செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் ஒன்றை வகிப்பதும் சில ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளமையும் மறுப்பதிற்கில்லை .
தற்போது அதிகமாக கவனிக்கப்படும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.அர்.எல்.எப்) யின் நிலை சற்று கவலைக்கிடமாகவே உள்ளது எனலாம் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த ஈ.பி.அர்.எல்.எப் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களின் தோல்வி அல்லது தோற்கடிப்பு. ஸ்ரீதரன் ,ஐங்கரநேசன் ,சிவமோகன் போன்றவர்கள்ளது கட்சித்தாவல்  போன்றன ஈ.பி.அர்.எல்.எப் ஐ கடுமையாக பலவீனப்படுத்தியுள்ளது. இதில் வவுனியாவை தளமாக கொண்டுள்ள அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தொடர்சியாக வவுனியாவிலேயே தங்கி நின்று மக்களை சந்திப்பது, அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு பற்றுவது, மக்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்வது என மக்களுடன் மக்களாக செயற்பட்டு சேர்த்துவைத்த மக்கள் செல்வாக்கும் பாரிய அளவில் சரியத்தொடங்கியுள்ளது.
வவுனியாவில் அமையவிருந்த பொருளாதார மைய அமைவிடம் தொடர்பில் தனது  உறவுகள் மற்றும் தனது பிரதேசம் சார்ந்து வெளிப்படையாக செயற்பட்டதாக என்னொரு பிரிவினர் கருதியமை,  அரசியல் முதிர்சியற்ற  சிலரை தன்னுடன் இணைத்துக்கொன்டதன் பயனாக அவர்கள் மேற்கொண்ட சம்பந்தரின் கொடும்பாவி எரிப்பு ,வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிரான போராட்டம் , கனகபுரம் துயிலுமில்ல குழப்பம் ,ஓமந்தையில் இடம்பெற்ற மலைப்பாம்பின் உண்ணாவிரத நாடகம் , வவுனியாவில் பாரிய மக்கள் எழிர்ச்ர்ச்சியாக வெடித்த காணாமல் போனவர்களில் உறவுகள் மேற்கொண்ட உண்ணாவிரதப்போராட்டத்தை  சோரம்போக செய்தமை , அந்தக்குழு  பணம் பெற்று ஒப்பந்த அடிப்படையில்  போராட்டங்களை நடத்துவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், சமூக ஆர்வலர்கள் ,அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களுக்கு  எதிராக சேறு பூசுவதர்காக போலி முகநூல்களை இயக்கி வருவதாக வெளியான  குற்றச்சாடுகள் போன்ற இவர்களின் தவறுகள் சிவசக்தி ஆனந்தனின் மக்கள் செல்வாக்கை குறைத்ததுடன் எதிர் கால அரசியலையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
கிழக்கில் துறை ரெட்னத்தையும்  யாழில் சர்வேஸ்வரனையும் முல்லைத்தீவில் ரவிகரனையும் வவுயாவில் ஓய்வூதியர்களான தியாகராஜா  , இந்திரராஜா ஆகியோரையும் வைத்துக்கொண்டு   கூட்டமைப்புக்கு உள்ளேயுயே  தமது பேரம்பேசும் சக்தியை ஈ.பி.அர்.எல்.எப் இழந்து வருகின்றது இதில் சிறப்பாக செயலாற்றக்கூடிய ரவிகரன் ஈ.பி.அர்.எல்.எப் கூட்டமைப்பை விட்டு வெளியேறும் நிலை வந்தால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார் அவ்வாறன நிலை வரும்போது ஈ.பி.அர்.எல்.எப் என்னும் பலவீனமடையும் நிலை உருவாகலாம்.
இதற்கிடையில் இழந்த செல்வாக்கை தமிழ் மக்கள் பேரவையையும் வடமாகாண முதலமைச்சரையும் வைத்து சரி செய்து விடலாம் என தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டில் தீவிரமாக இறங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.அர்.எல்.எப் க்கு நேற்றைக்கு முன்தினம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் “தமிழ் மக்கள் பேரவையில் இருப்பவர்கள் தமிழினத்தை விற்கும்  தலைவர் சம்மந்தனின் தலைமையை விட்டு விலகி  வரவேண்டுமெனவும் அங்கயும் தலையை காட்டி இங்கயும் தலையை காட்டுவதால் மக்கள் குழம்புகிறார்கள்” என்றும்  கூறியமை இரண்டும் கெட்ட நிலையில் தாம் இருப்பதை சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு உணர்த்தியிருக்கும்.
உடனடியாகவே தாம் நேரம்  வரும்போது சம்மந்தனின் தலைமையில் இருந்து வெளியேறுவோம் எனக் கூறிவிட்டு மறுநாளே கூட்டமைப்புக்குள் பிரச்சனைகள் இருந்தாலும் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருப்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என கூறியதன் மூலம் தாம்  என்னும் கொஞ்சநாளைக்கு சம்மந்தருடந்தான்  இருப்போம் என்பதை கூறாமல் கூறி வைத்துள்ளார் . இவற்றை  எல்லாம் பார்க்கும் போது ஈ.பி.அர்.எல்.எப்  அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று முடிவெடுக்க முடியாமல் தத்தளிப்பது தெளிவாகின்றது.
மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், மக்களுக்குள் இறங்கி வேலை செய்யக்கூடிய செயலாளர் சிவசக்தி ஆனந்தனும் இருந்தும் இந்தக்கட்சி இந்நிலைக்கு போனமை துரதிஷ்ரமே.
அடுத்து சிர்த்தாத்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) என்றும் புளொட் என்றும் அழைக்கப்படும் கட்சியை எடுத்துக்கொண்டால் இவர்கள் மிக அண்மையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர் இது கூட்டமைப்பில் சிலருக்கு விருப்பமில்லாமலும் அதே நேரம் புளட்டில் பலருக்கு விருப்பமில்லாமலும் ஏற்பட்ட கூட்டணி இதில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் புளொட்டை  பொறுத்தவரைக்கும் “நடப்பது எல்லாம் நன்மைக்கே” வருவதெல்லாம் இலாபமே என்ற நிலையிலேயே தொடர்கிறது விபத்தாக கூட்டமைப்பில் இணைந்து குறுகிய நாட்களிலேயே தலைவர் சிர்த்தாத்தன் யாழிலும்  , வியாலேந்திரன் கிழக்கிலும் பாராளுமன்றத்துக்கு  தெரிவாகி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் , யாழில் கஜதீபன் ,முல்லைத்தீவில் சிவநேசன் , வவுனியாவில் லிங்கநாதன் என வெற்றிகள் தொடர்வது கட்சிக்கு பலமாக இருப்பதுடன் வவுனியா நகர சபையை புளொட் நிர்வகித்தபோது மேற்கொண்ட தூர நோக்கான வேலைத்திட்டங்களும் இளைஞர்களின் பங்களிப்பும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் மக்கள் நலப்பணிகளும் கட்சியை ஓரளவு நிலை நிறுத்தி வைக்க உதவும் என நம்பலாம் .
இதற்கிடையில் கூட்டமைக்குள் நடக்கும் குத்துப்பாடுகளை புளொட் தலைவர் சிர்த்தாத்தன் கண்டு கொள்வதாக தெரிவதில்லை “தானுண்டு தன் வேலையுண்டு” வந்தவரைக்கும் இலாபம் இவர்கள் எப்பாடு பட்டாலும் எனக்கென்ன போச்சு என்ற நிலையில் இருப்பது போன்றே தோன்றுகின்றது. இருப்பினும் தன்னால் தீர்வு முயற்சிகளோ அல்லது கூட்டமைப்பின் ஒற்றுமையோ சீர்குலைந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பது அவரது ஊடக அறிக்கைகளில் இருந்து தெளிவாகின்றது.
இவர்களுக்கும் கஜேந்திர குமாரின் கருத்து பொருந்தும் என்றாலும் இதுவரை அவர்கள் தரப்பில் இருந்து  எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியிருப்பினும் தமிழரசுக் கட்சியை பொருத்தவரைக்கும்  வீட்டுச்சின்னம் அவர்களிடம் இருப்பது, கிழக்கில் தலைவர் சம்மந்தன் உள்ளிட்ட பலமான அணியும் வவுனியாவில் வாடா மாகாண  அமைச்சர் சத்திய லிங்கம் தலைமையிலான அணியும் , மன்னாரில் சாள்ஸ் அணியும் ,கிளிநொச்சியில் சிறிதரன் தலைமையிலான  அணியும் , முல்லைத்தீவில் சாந்தினி அணியும் ,  யாழில் மாவை சேனாதி ராசா ,சரவணபவான் ,சுமத்திரன் ,உள்ளிட்டோரின் அணிகளும் தீவிரமாக செயற்பட்டு  வருவது எதிர்காலத்தில் தாம் தனித்து  பயணிக்கலாம் என்ற நம்பிக்கையினால்கூட  இருக்கலாம்.
நன்றி .
மீண்டும் சந்திப்பேன்
வன்னியிலிருந்து
என்.ஜனகன் .