11 மார்., 2017

புளியங்கூடலை சேர்ந்த கனடாத் தமிழ்பெண் மன்கும்பான் விபத்தில் பலி

தீவகம் புளியங்கூடலை சொந்த இடமாகக் கொண்டவரும்- தற்போது  கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா

விஜயரூபன் அவர்கள் தனது தாயாரை சுகயீனம் காரணமாக பார்வையிடுவதற்காக -தனது இரு பிள்ளைகளுடன் கனடாவிலிருந்து  புளியங்கூடலுக்கு சென்றிருந்தார்.  
யாழ்ப்பாணத்திலிருந்து,வியாழக்கிழமை மாலை 7.20 மணியளவில் தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் புளியங்கூடலைநோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக மண்கும்பான் எல்லைக்குட்பட்ட தீவக பிரதான வீதியில்  மோட்டார் சையிக்கிள், கார், உழவு இயந்திரம் ஆகியவற்றுடன்   ஏற்பட்ட திடீர் விபத்தில்  சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் சிகிச்சை பலனின்றி  வெள்ளிக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் மோட்டார் சையிக்கிளை  செலுத்திய  விஜயரூபனின் தந்தையான  திரு வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களும் கடும்  காயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
விபத்தில் பலியாகிய திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள்-  1991இல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று வேம்படியில் கல்வி பயின்று பின்னர்  யாழ்  பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டம் பெற்று லண்டனில் உயர் கல்வி கற்று பின்னர்  கனடா சென்று குடும்பத்துடன் குடியேறி வாழ்ந்து வந்தவர் என்று மேலும்  அறியமுடிகின்றது.