5 மார்., 2017

பெண் போலீசுடன் தகாத உறவு - இரு போலீசாரிடையே கைகலப்பு: கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளுர் எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ளது கோகினூர் அவன்யூ. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. திருவள்ளுர் ஆயுதப் படையில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். அதேபோல மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் திருவள்ளுர் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். அவரது நண்பர் சிவகங்கை, திருப்புவனத்தைச் சேர்ந்த கல்யாணை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். 

சரண்யாவுக்கும், கல்யாணைக்கும் தகாத உறவு இருந்து வந்தது. கல்யாணைக்கு தெரியாமல் சரண்யா சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவருடனும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அமிர்தராஜுக்கும் கல்யாணைக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சுந்தரபாண்டியன், கல்யாணை, அவரது நண்பர் சந்திரன் ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். 

அப்போது சுந்தரபாண்டியனிடத்தில் கல்யாணை, என்னை அமிர்த்ராஜ் மிரட்டியதாகவும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்தார். அவன் தற்போது சரண்யா வீட்டில்தான் தங்கியிருக்கிறான், வா அவனைப்போய் கேட்கலாம் என சுந்திரபாண்டியனிடம்  சொன்னார். அப்போது மதுபோதையில் இருந்த 3 பேரும், சரண்யா வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த அமிர்தராஜை வெளியே வருமாறும், எதற்கு என் நண்பனை திட்டினாய், சென்னையில் உள்ள உனக்கு இங்கு என்ன வேலை என்று சுந்தரபாண்டியன் கேட்டார். அப்போது இருவருக்கும் வபாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அப்போது அமிர்த்ராஜ் தான் தயாராக வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரபாண்டியனின் இடது மார்பு பக்கத்திலும், விலா எலும்பு பகுதியிலும் குத்தினார். இதில் அலறித்துடித்த சுந்தரபாண்டியனின் குரலை கேட்டு போலீஸ்காரர்கள் குவிந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரபாண்டியனை திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சுந்திரபாண்டியன் உயிரிழந்தார். காதலி வீட்டில் தங்கியிருந்த அமிர்த்ராஜை திருவள்ளுர் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலைக்கு காரணமாக இருந்த சரண்யா திருமணமானவர். அவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கள்ளக்காதல் விவகாரத்தில் போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுந்தரபாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அவரது உறவினர்களுக்கு சொன்னபோது, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் திருவள்ளுர் வந்து கொண்டிருக்கின்றனர். கொலை நடந்த பகுதியில் சமூக விரோதிகளும், அரசியல் வாதிகளும் அடிக்கடி மது அருந்தி வருவது தொடர்கடையாகி வருகிறது. இது குறித்து பல முறை போலுசாருக்கு புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.